Published : 30 Jul 2017 10:48 AM
Last Updated : 30 Jul 2017 10:48 AM

சினிமா ஃபைனான்சியர் போத்ரா மீது தங்க வியாபாரி போலீஸில் புகார்

ரூ.5 லட்சம் கடனுக்கு ரூ.3 கோடி கேட்டு மிரட்டுவதாக சினிமா ஃபைனான்சியர் போத்ரா மீது தங்க வியாபாரி ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

சென்னை சவுகார்பேட்டை மின்ட் தெருவில் நிதி நிறுவனம் மற்றும் வைரம் மதிப்பீட்டு நிறுவனம் வைத்திருப்பவர் முகுந்த்சந்த் போத்ரா. சினிமா தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள், தொழிலதிபர்களுக்கு வட்டிக்கு கடன் கொடுத்து வசூலிக்கும் தொழில் செய்து வருகிறார்.

இவரது மகன்கள் ககன் போத்ரா, சந்தீப் போத்ரா இருவரும் தந்தையின் தொழிலுக்கு உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தி.நகர் விஜயராகவா சாலையில் உள்ள பிஆர்சி இன்டர்நேஷனல் ஹோட்டலின் நிர்வாகி செந்தில் கணபதி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், முகுந்த்சந்த் போத்ரா கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாகவும் ரூ.83 லட்சம் கடனுக்கு ரூ.4 கோடி கேட்பதாகவும் புகார் கூறியிருந்தார். புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். முகுந்த்சந்த் போத்ரா, அவரது மகன்கள் ககன், சந்தீப் ஆகிய 3 பேரையும் கடந்த 25-ம் தேதி கைது செய்தனர்.

போத்ரா மீது, ஜேஎஸ்கே பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் சதீஷ்குமார் என்பவரும் கந்துவட்டி புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில், நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தங்க நகை வியாபாரி ஆனந்த் என்பவரும் போத்ரா மீது மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் கொடுத்துள்ளார்.

நடவடிக்கை எடுக்கவேண்டும்

அந்த புகார் மனுவில், ‘‘வியாபாரத்துக்காக முகுந்த்சந்த் போத்ராவிடம் 2014-ம் ஆண்டு ரூ.5 லட்சம் கடன் வாங்கினேன். பல்வேறு தவணைகளில் ரூ.30 லட்சம் பணம், 800 கிராம் தங்கம் போன்றவற்றை அசலும், வட்டியுமாக திருப்பிக் கொடுத்திருக்கிறேன்.

ஆனால் கடன் வாங்கும்போது நான் கொடுத்த காசோலைகள் மற்றும் ஆவணங்களை வைத்து ரூ.3 கோடி கேட்டு மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

இந்தப் புகார் குறித்தும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x