Last Updated : 24 Jul, 2017 08:47 AM

 

Published : 24 Jul 2017 08:47 AM
Last Updated : 24 Jul 2017 08:47 AM

குட்கா, பான் மசாலா வேட்டை தமிழகம் முழுவதும் தீவிரம்: சென்னையில் 135 தனிப்படைகள் அமைப்பு- குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்ய சென்னையில் 2 கூடுதல் ஆணையர்கள் தலைமையில் 135-க்கும் மேற்பட்ட தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தமிழகம் முழுவதும் தீவிர சோதனை நடந்துவருகிறது. குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

குட்கா, மாவா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் தமிழகத்தில் தடையின்றி விற்பனை செய்யப்படுவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டப்பேரவையில் குற்றம் சாட்டி னார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து சென்னை யில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வ நாதன் காவல் அதிகாரிகளின் ஆலோ சனைக் கூட்டத்தை நடத்தினார். மாவா, பான்மசாலா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வோரைக் கைது செய்யவும், பொருட்களைப் பறி முதல் செய்யவும் உத்தரவிட்டார்.

அதன்படி வட சென்னை கூடுதல் காவல் ஆணையர் டி.எம்.ஜெய ராமன், தென் சென்னை கூடுதல் காவல் ஆணையர் எம்.சி.சாரங்கன் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் கடந்த 19 முதல் 22-ம் தேதி வரை 4 நாட்களில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தொடர்பாக 722 வழக்குகள் பதிவு செய்து 750 பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வ நாதன் கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கூடுதல் காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் கூறியதாவது:

போதைப் பொருள் விற் பனையை முற்றிலும் கட்டுப் படுத்த காவல் ஆணையர் உத்தர விட்டுள்ளார். இதற்காக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 135 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களை 2 கூடுதல் காவல் ஆணையர்கள் மேற்பார்வை செய்வார்கள். 12 துணை ஆணையர்கள் தங்களுக்கு கீழ் உள்ள 48 உதவி ஆணை யர்களிடம் மாவா விற்பனை, கைது தொடர்பான அறிக்கையை தினமும் கேட்டு, அதை காவல் ஆணையர் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோக மத்திய குற்றப்பிரிவு போலீஸாரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடு வார்கள். குட்கா, மாவா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தி னாலோ, தொடர்ந்து விற்பனை செய்து வந்தாலோ அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நட வடிக்கை எடுக்க காவல் ஆணை யர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றனர்.

100-க்கு தகவல் தெரிவிக்கலாம்

குட்கா, பான் மசாலா, மாவாவை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பறி முதல் செய்யப்படும். அதன் உரிமை யாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறை 100-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். அருகில் உள்ள காவல் நிலையத்திலும் தெரிவிக்க லாம். அதன்படி உடனடி நட வடிக்கை எடுக்கப்படும். தகவல் அளிப்போரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் குட்கா, பான் மசாலா சோதனை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் தலைமையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி திரிபாதி மேற்பார்வை யில் சோதனை முடுக்கிவிடப்பட் டுள்ளது.

இதன்படி, அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பி களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு குட்கா சோதனை தீவிரப்படுத்தப்பட் டுள்ளது. இதுகுறித்து கூடுதல் டிஜிபி திரிபாதி கூறும்போது, “தமிழகம் முழுவதும் குட்கா தொடர்பான சோதனை நடந்து வருகிறது. அதன் முழு விவரம் விரைவில் வெளியிடப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x