Last Updated : 14 Jul, 2017 11:23 AM

 

Published : 14 Jul 2017 11:23 AM
Last Updated : 14 Jul 2017 11:23 AM

பொறுப்பேற்ற முதல் நாள் இரவிலேயே ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் ஆணையர்

பொறுப்பேற்ற முதல் நாளிலேயே காவல் ஆணையர் இரவு ரோந்து சென்றது மதுரை நகர் போலீஸார் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை நகர் புதிய காவல் ஆணையராக சென்னை சிபிசிஐடி (எஸ்ஐடி) பிரிவில் பணிபுரிந்த ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரை நகரில் குற்றங்களைத் தடுக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் நண்பர்குழு அமைக் கப்படும். போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு உருவாக்கப்படும். சமூக விரோதிகள், குற்றம்புரிவோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வழிப்பறி, திருட்டு போன்ற குற்றங்களை தடுப்பது குறித்து நகர் முழுவதும் ஆய்வு செய்து, தடுப்பு நடவடிக்கைகளுக்கு திட்டமிடப்படும் என தெரிவித்தார்.

முதல் நாளில் ரோந்து

இதன்படி, மதுரை நகரில் அடிக்கடி நடைபெறும் சட்டம், ஒழுங்கு, குற்றச் சம்பவங்கள் பற்றிய தகவல்களை அறிய காவல்துறை உயரதிகாரிகள், நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரிடம் ஆலோசித்தார். வழிப்பறி, திருட்டு, கொள்ளை போன்ற குற்றங்கள் அதிகமாக நடைபெறும் பகுதிகள், கோஷ்டி மோதல் அடிக்கடி உருவாகும் பகுதி, காவல் எண்ணிக்கை, காவல் நிலைய எல்லை உள்ளிட்ட நடைமுறைகள் குறித்தும் நுண்ணறிவு போலீ ஸாரிடம் ஆணையர் கேட்டறிந்தார். சிபிசிஐடியில் பணியில் இருந்ததால் முதலில் தகவல்களை திரட்டிக்கொண்டு அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர் திட்டமிட்டிருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அவர் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே காவல் நிலையங்களை ஆய்வு செய்ய திட்டமிட்டார். அதன்படி, நேற்று முன்தினம் இரவில் ஆய்வு பணியை துவங்கினார். தெப்பக்குளம், கீரைத்துறை, வில்லாபுரம் உட்பட சில காவல் நிலையங்களில் அவர் திடீர் விசிட் அடித்தார். காவல் ஆணையரின் வருகையை சற்றும் எதிர்பாராத போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். ஆணையரின் நள்ளிரவு ரோந்தால் சில இடங்களில் பணியில் இருந்த போலீஸாரும் உஷாராகினர். பொறுப்பேற்ற அன்றே காவல் ஆணையர் இரவில் களத்தில் இறங்கியது நகர் போலீஸார் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியது: உயர் காவல் துறை அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் பணியில் ஒருவித தனித்தன்மை இருக்கும். தற்போதைய ஆணையர் சிபிசிஐடி யில் பணிபுரிந்தவர். அவர் திட்டமிடலுக்கு முக்கியத்துவம் தர வாய்ப்புள்ளது.இதற்காக முதலில் மதுரை நகர் பற்றியும், நடக்கும் பல்வேறு குற்றச் சம்பவம் உட்பட காவல்துறை நடைமுறை பற்றிய தகவல்களை சேகரிக்க தொடங்கி இருக்கிறார். காவல் நிலையங்களில் தேக்கமின்றி புகார்கள் உடனுக்குடன் விசாரித்து தீர்வு காண அறிவுறுத்தி உள்ளார்.

விசாரணை என்ற பெயரில் தாமதிக்காமல் நடவடிக்கையில் துரிதம் காட்ட போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். ஆணையர் அலுவலகத்தில் இருந்துவரும் புகார்களுக்கு விரைந்து தீர்வு கிடைக்கவேண்டும். ஆணையர் அலுவலகத்தில் பெறப்படும் புகார் மனுக்களை உடனே சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள், காவல் நிலையங்களுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

நுண்ணறிவு பிரிவு போலீஸார் அந்தந்த காவல் எல்லையில் பொது மக்களுக்கு எதிராக நடைபெறும் பல்வேறு தகவல்களை துரிதமாக நுண்ணறிவு பிரிவு, அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். பிரச்சினைகளை முன்கூட்டியே தடுக்கவேண்டும். புகார் கொடுக்கவரும் பொது மக்களை தேவையின்றி நீண்ட நேரம் காவல் நிலையத்தில் காக்க வைப்பதை தவிர்க்கவேண்டும் போன்ற பல்வேறு அறிவுரைகளை ஆணையர் கூறியுள்ளார் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x