Published : 30 Jul 2017 10:47 AM
Last Updated : 30 Jul 2017 10:47 AM

பிரச்சினைக்கு உடனே தீர்வு காண வேண்டும்: ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் (பெப்சி) இடையே நிலவும் பிரச்சினைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க முயற்சி எடுக்குமாறு தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத் துள்ளார்.

இதுதொடர்பாக ஆர்.கே.செல்வமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

துரதிர்ஷ்டவசமாக திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் - தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) இடையே அசாதாரண சூழ்நிலை நிலவிவருகிறது. பகைமை போல் ஏற்பட்டுள்ள இந்த தோற்றம் ஒரு மாயத் தோற்றமே. தயாரிப்பாளர்கள் இல்லாமல் திரைப்பட உலகம் இல்லை என்பதை தொழிலாளர்கள் உணர்ந்துள்ளனர். தொழிலாளர்கள் இல்லாமல் ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியாது என்பது தயாரிப்பாளர்களுக்கும் தெரியும்.

பெப்சி தொழிலாளர்கள் காரணமின்றி படப்பிடிப்பை நிறுத்துவது, தொழில் புரியும் இடத்தில் தேவையற்ற விவாதங்களில் ஈடுபடுவது போன்ற செயல்களில் தனிப்பட்ட சங்கங்கள் ஈடுபடக்கூடாது. எந்த ஒரு முடிவையும் சம்மேளனம் மட்டுமே எடுக்கும் என்ற கட்டுப்பாட்டை கொண்டுவந்துள்ளோம். இதை மீறி, மதுரையில் ‘பில்லா பாண்டி’ திரைப்பட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதற்கும், அதுதொடர்பாக பிரச்சினைகள் எழுந்ததற்கும், சம்பந்தப்பட்ட சங்கத்தை சம்மேளன பொதுக்குழு கண்டித்தது.

‘25 ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்ட பெப்சி அமைப்பை உடைப்போம், ஒழிப் போம்’ என்று சம்பந்தப்படாதவர்கள் சொல்லும்போது, அதைக் கேட்கும் தொழிலாளர்களின் உணர்ச்சியைக் கட்டுப்படுத்துவது சிரமம். அதையும் மீறி பல சந்தர்ப்பங்களில் தொழிலாளர்களை அமைதிப்படுத்தியுள்ளோம். இருப்பினும் சம்மேளனத்தை சார்ந்த டெக்னீஷியன் யூனியன் செயலாளர் தனபால், கோபத்தில் தரம்தாழ்ந்த வார்த்தைகளைப் பிரயோகித்ததற்கு சம்மேளம் சார்பில் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். அவரும் வருத்தம் தெரிவிக்கத் தயாராக இருக்கிறார். எனவே, பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சினையை உடனடியாக முடித்துவைத்து, பழையபடி சுமுக நிலை ஏற்பட முயற்சி எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x