Published : 26 Jul 2017 01:48 PM
Last Updated : 26 Jul 2017 01:48 PM

ரயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: முத்தரசன்

ரயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையை மோடியின் மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் ரயில்வே துறையை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்திட பொதுமக்களுக்கு பெருமளவில் பயன்பட்டு வரும் ரயில்வே நிறுவனத்தை முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு குத்தகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உட்பட நாட்டின் முக்கிய ரயில்நிலையங்களை 45 ஆண்டுகாலம் குத்தகைக்கு தனியாரிடம் ஒப்படைப்பதாக அறிவிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தையும், மூர்மார்க்கெட் (புறநகர் ரயில்முனையம்) வளாகத்தின் தரைத் தளத்தையும் ரூ 350 கோடிக்கு குத்தகைக்கு விட முடிவு செய்துள்ளது.

ஏற்கெனவே தேசிய நெடுஞ்சாலைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதால் சாலை வழி பயணத்தின் போது சுங்கம் செலுத்தும் சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்போது ரயில்நிலையம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால் ரயில் பயணம் ஏழைகளுக்கு எட்டாக்கனியாகும் ஆபத்துள்ளது.

நாட்டின் முதல் பிரதமர் நேரு பொதுத்துறை நிறுவனங்களை இந்தியாவின் ஆலயம் எனக் குறிப்பிட்டார் ஆனால் இன்றைய பிரதமர் மோடி பொதுத்துறை நிறுவனங்களே வேண்டாம் என்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் உத்தரவுக்கு அடிபணிந்து செயல்பட்டு வருகிறார்.

பொதுமக்களின் வரிப் பணத்தில் உருவான பொதுத்துறை சொத்துக்களை சூறையாடும் மக்கள் விரோதக் கொள்கையை தடுத்து நிறுத்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தனியார் மயக் கொள்கைக்கு எதிராக போரடிவரும் மக்களின் உணர்வைக் கருத்தில் கொண்டு ரயில் நிலையங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையினை மத்திய அரசு கைவிட வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x