Last Updated : 17 Feb, 2017 10:54 AM

 

Published : 17 Feb 2017 10:54 AM
Last Updated : 17 Feb 2017 10:54 AM

இளைஞர்களுக்கு போதையாகும் வலி நிவாரணி மருந்துகள்: பரிந்துரை சீட்டுகளும் போலியானவை - கட்டுப்படுத்துமா மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம்

எளிதில் விற்கக்கூடாத வலி நிவாரணி மருந்துகளை போலி பரிந்துரைச் சீட்டுகள் மூலம் இளைஞர்கள் பெற்று போதைக்காக பயன்படுத்தும் சூழல் கோவையில் அதிகரித்துள்ளது.

கோவையில் கல்விக்காவும், பணிக்காகவும் வரும் இளைஞர்கள் சிலர் பணிச்சுமை, மனஅழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். மது, புகை ஆகியவற்றைக் கடந்து மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்தக்கூடாத, மருத்துவர்கள் எளிதில் பரிந்துரைக்காத வலி நிவாரணி மருந்துகளை போதைக்கு பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. சரவணம்பட்டி, கீரணத்தம், கணபதி, ஆவாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக, இளைஞர்கள் சிலர் கும்பல், கும்பலாக வந்து குறிப்பிட்ட மாத்திரை வேண்டுமென கேட்டு வற்புறுத்துவதாக மருந்து விற்பனையாளர்கள் புகார் கூறுகின்றனர். சில இடங்களில் கைகலப்பு வரை சென்றுள்ளது. அதன்பிறகு, மாத்திரை பிரச்சினை குறித்து போலீஸார் விசாரித்தனர். அதில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்துகளுக்கு காரணம்

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘ஆவாரம்பாளையம் அருகே ஒரு மருந்துக்கடையில், நிட்ராஃஜிபாம் என்ற மருத்துவப் பெயர் கொண்ட மாத்திரையைக் கேட்டு சிலர் பிரச்சினை செய்துள்ளனர். சமீபத்தில் வேறு சிலர், பரிந்துரைச் சீட்டைக் கொடுத்து அதே மாத்திரையைக் கேட்டுள்ளனர். பின்னர் விசாரித்ததில், அந்த பரிந்துரைச் சீட்டும், அதில் உள்ள மருத்துவர் தகவல்கள் அனைத்தும் போலியானது எனத் தெரியவந்தது.

புவனேஸ்வரத்தை சேர்ந்த மருத்துவரின் தகவல்களையும், பிரபல மருத்துவமனை ஒன்றின் பெயரையும் வைத்து போலி பரிந்துரைச் சீட்டைத் தயாரித்து அந்த மாத்திரையைப் பெற முயன்றுள்ளனர். அது, சுயநினைவு, தூக்கம், மயக்கம் ஆகிய மூன்றும் இல்லாத நிலைக்குத் தள்ளக்கூடியது. போதையில் இருப்பதை கண்டுபிடிக்கவும் முடியாது. பல விபத்துகளுக்கும் இதுதான் காரணம். சுகாதாரத்துறை, மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளோடு இணைந்து விசாரிக்க உள்ளோம்’ என்றார்.

வலை பின்னல்

கணபதியைச் சேர்ந்த மருந்து விற்பனையாளர் கூறும்போது, ‘மருந்துக் கடைகளில் குறைந்த அளவில்தான் அந்த மாத்திரை இருக்கும். மருத்துவர் பரிந்துரை இருந்தால், மருத்துவரின் தகவல்களைப் பதிவு செய்துகொண்ட பிறகு அந்த மாத்திரையை வழங்க வேண்டும். அதை மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் ஆய்வு செய்வார்கள். அரிதாகவே அது பரிந்துரைக்கப்படும். ஆனால், இப்போது இளைஞர்கள் அதிகமாக அதைக் கேட்கிறார்கள். சில கடைகளில் காசுக்காக விற்றுவிடுகிறார்கள். பெரிய வலைபின்னலே இதில் உள்ளது. மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது கட்டுப்படுத்தப்படும்’ என்றார்.

35 வழக்குகள்

கோவை மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு இயக்கக அலுவலர்கள் கூறும்போது, ‘பென்சோடையாசிபைன் என்ற வேதிக் கூட்டு கொண்ட இந்த மாத்திரை அதிக பிரச்சினைக்குரியது. கோவையில் இதன் விற்பனை மிகுந்த கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. விதிமீறல் வழக்குகளில் 90 சதவீதம் இதுபோன்ற மாத்திரைகள் விற்பதே காரணம். இந்த ஆண்டு பதிவான சுமார் 35 வழக்குகளிலும் இதுபோன்ற மாத்திரைகள் விற்பனையே அதிகம். முறைகேடாக விற்பவர்கள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்கின்றனர்.

அதிகபட்சம் 2 வாரம்

கோவை அரசு மருத்துவமனை மனநல மருத்துவர் சி.வெள்ளைச்சாமி கூறும்போது, ‘அரிதினும் அரிதாக ஒரு சிலருக்கு மட்டுமே இந்த மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். அதுவும் 2 வாரத்துக்குமேல் எடுத்துக் கொள்ளக்கூடாது. செலவு குறைவு, யாரும் கண்டுபிடிக்கமாட்டார்கள் என்பதால் கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்கள் பயன்படுத்துகிறார்கள். தெளிவுக்கும் மயக்கத்துக்கும் இடைப்பட்ட நிலையில் வைத்துக் கொள்வதால், போதை உணர்வு ஏற்படும்.

ஆனால் 2 வாரத்துக்கு மேல் எடுத்துக்கொண்டால் அடிமையாக்கிவிடும். நரம்புத்தளர்ச்சி, மூளை பாதிப்பு ஆகியவை விரைவில் ஏற்படும். இதற்குப் பின்னணியில் மாஃபியா கும்பல்கள் உள்ளன. மருத்துவர்கள் என்ற முறையில் இதைக் கட்டுப்படுத்த வேண்டுமென நாங்கள் பல முறை எச்சரித்துவிட்டோம். மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள்தான் அதைக் கட்டுப்படுத்த வேண்டும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x