Published : 19 Dec 2013 12:00 AM
Last Updated : 19 Dec 2013 12:00 AM

நாமக்கல்: அனுமதி பெறாத 35 சாய ஆலைகளுக்கு ‘சீல்’மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அதிரடி

பள்ளிபாளையம் அதன் சுற்றுவட்டாரத்தில் இயக்கப்பட்டு வந்த அனுமதி பெறாத 35 சாய ஆலைகளுக்கு நாமக்கல் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஒரே நாளில் அதிரடியாக 'சீல்’ வைத்தனர். இந்த ஆய்வுப் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்றங்கரை ஓரம் ஏராளமான சாய ஆலைகள் உள்ளன. அந்த ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு நீர் நேரடியாக காவிரி ஆற்றில் கலந்து விடப்பட்டு வருகிறது. அதனால், காவிரி ஆறு மாசுபடுவதுடன், பள்ளிபாளையம் அதன் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீரும் வெகுவாக பாதிக்கும் சூழல் உருவானது. இதே நிலை குமாரபாளையத்திலும் நீடித்து வந்தது.

அதையடுத்து சென்ற மாதம் நாமக்கல் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், வருவாய்துறையினர் ஆகியோர் குமாரபாளையத்தில் ஒரு வார காலத்துக்கு அதிரடியாக ஆய்வு நடத்தி 100-க்கும் மேற்பட்ட சாய ஆலைகளுக்கு அதிரடியாக சீ்ல் வைத்தனர். அதைத் தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில் பள்ளிபாளையம் அதன் சுற்றுவட்டாரத்தில் அனுமதி பெறாமல் இயங்கும் சாயப்பட்டறைகளுக்கு 'சீல்’ வைப்பதற்கான அதிரடி நடவடிக்கை எடுத்தனர். எனினும், அந்தப் பணி பாதியுடன் நிறுத்தப்பட்டது.

அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் இயக்கும் அனுமதி பெறாத சாயப் பட்டறை உரிமையாளர்கள், சுத்திகரிக்கப்படாதக் கழிவு நீரை நேரடியாக காவிரி ஆற்றில் கலந்து விடுவதை தொடர்ந்தனர். இதுதொடர்பாக டிச.16-ம் தேதி 'தி இந்து’ நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.

அதன் எதிரொலியாக புதன் கிழமை நாமக்கல் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி முருகன், உதவி பொறியாளர் செல்வக்குமார் மற்றும் வருவாய்துறையினர் பள்ளிபாளையம் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆண்டிக்காடு, வெடியரசம்பாளையம், சமயசங்கிலி, ஆவுத்திப்பாளையம் ஆகிய பகுதியில் இயங்கி வந்த அனுமதி பெறாத 35 சாய ஆலைகளுக்கு அதிரடியாக 'சீல்’ வைத்தனர்.

சீல் வைக்கப்பட்ட ஆலைகள் இயக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். தவிர, அனுமதி பெறாத சாய ஆலைகளுக்கு சீல் வைக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x