Published : 05 Feb 2014 09:05 AM
Last Updated : 05 Feb 2014 09:05 AM

பால் உற்பத்தியாளர் போராட்டம் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்- கர்நாடகத்தில் இருந்து பால் கொண்டு வந்தால் தடுப்போம்

பால் கொள்முதல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள் ளனர். பால் தட்டுப் பாட்டைப் போக்க தமிழக அரசு கர்நாடக மாநிலத்தில் இருந்து பால் தருவிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் அதனை தடுப்போம் என பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத் தலைவர் செங்கோட்டுவேல் எச்சரித்துள்ளார்.

பால் கொள்முதல் விலை உயர்வு, கோமாரி நோயால் பலியான மாடுகளுக்கு நிவாரணம் வழங்குவது சம்பந்தமான கோரிக்கை குறித்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காணவேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு எவ்வித அறிவிப்பும் வெளியிடாமல் மவுனம் காத்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை முதல் பால் உற்பத்தியாளர்கள் பால் நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

5 லட்சம் லிட்டர் நிறுத்தம்

சேலம் மாவட்டத்தில் ஓமலூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பால் உற்பத்தியாளர்களை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். பால் உற்பத்தியாளர்கள், அவர்களது மாடுகளையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து, போலீஸார் கைது நடவடிக்கையை கைவிட்டனர். செவ்வாய்க்கிழமை மட்டும் மாநிலம் முழுவதும் ஐந்து லட்சம் லிட்டர் பால் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இப்போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து, சில நாட்களில் மாநிலம் முழுவதும் பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க மாநிலத் தலைவர் செங்கோட்டுவேல் சேலத்தில் கூறியதாவது:

தமிழகத்தில் விரைவில் பால் தட்டுப்பாடு ஏற்படும் என்பதை அறிந்து, கர்நாடக மாநிலத்தில் இருந்து பால் தருவிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. அதையும் மீறி வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு பால் கொண்டுவரும் முயற்சியில் அரசு ஈடுபட்டால் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி மறியல் போராட்டம் செய்வோம் என்றார்.

‘தரையில் பாலை கொட்டுவது சரியா?’

சேலம் நுகர்வோர் குரல் அமைப்பின் மாவட்டப் பொருளாளர் எல்.பிரபாகரன் கூறியதாவது:

விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் பேணி காத்து வளர்த்து வரும் மாடுகளிடம் இருந்து பெறப்படும் பாலை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஆதரவற்ற குழந்தைகளுக்கு பாலைத் தானமாக வழங்கி, நூதன முறையில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடலாம். குழந்தைகளின் உயிரை வளர்க்கக் கூடிய பாலை, தரையில் வீணாகக் கொட்டுவதால் யாருக்கும் பயன் இல்லை. செய்யும் தொழிலை தெய்வமாக கருதும் பால் உற்பத்தியாளர்கள், அந்தப் பாலை மண்ணில் கொட்டி நிந்தனை செய்வதை வருங்காலத்தில் கைவிட்டு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான போராட்டங்கள் மூலம் அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு தீர்வு பெறலாம்,

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x