Published : 05 Jun 2017 11:26 AM
Last Updated : 05 Jun 2017 11:26 AM

தங்கத்தின் மீதான ஜிஎஸ்டி வரியை 1% ஆக குறைக்க ராமதாஸ் வலியுறுத்தல்

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி, கலால் வரி ஆகியவற்றை முற்றிலுமாக ரத்து செய்வதுடன், பொருட்கள் மற்றும் சேவை வரியையும் ஒரு விழுக்காடாக குறைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "டெல்லியில் நடைபெற்ற பொருட்கள் மற்றும் சேவை வரிக் குழு கூட்டத்தில் தங்கத்திற்கு 3 %வரி விதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கும் அதிக அளவில் வரி விதிக்கப்பட்டிருக்கிறது. மக்களை பாதிக்கும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

உலகின் பெரும்பாலான நாடுகளில் கடைபிடிக்கப்படும் நடைமுறைகளை பின்பற்றி, இந்தியாவிலும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் பொருட்கள் மற்றும் சேவை வரி முறை அறிமுகம் செய்யப்படுகிறது.

பெரும்பாலான பொருட்களுக்கான வரி விகிதங்கள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்ட நிலையில், தங்கம், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களுக்கான வரி விகிதங்களை தீர்மானிப்பதற்காக ஜூன் 3-ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

தங்கத்திற்கு இப்போது ஒரே ஒரு விழுக்காடு மட்டும் தான் மதிப்புக்கூட்டு வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது. அது பொருட்கள் மற்றும் சேவை வரி என்ற பெயரில் 3%ஆக உயர்த்தப் பட்டுள்ளது. தங்கம் மீதான வரி விதிப்பு என்பது இத்துடன் நின்றுவிடப்போவதில்லை.

தங்கத்தின் மீது 10 %சுங்கவரியும், ஒரு விழுக்காடு உற்பத்தி வரியும் விதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, தங்கத்தின் மீதான சேதாரம், செய்கூலி ஆகியவற்றை உள்ளடக்கிய மதிப்புக் கூட்டு சேவைக் கட்டணம் மீது 18% பொருட்கள் மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தங்கத்தின் மீது 15.67% வரி விதிக்கப்படுகிறது. இது மிகவும் அதிகமான வரி விதிப்பாகும்.

தங்கத்தின் மீது இப்போது சுங்கவரி, மதிப்புக் கூட்டு வரி, கலால்வரி உள்ளிட்ட அனைத்தும் சேர்த்து 12.43% மட்டுமே வரி வசூலிக்கப்படுகிறது. புதிய வரி விதிப்பு முறையில், இப்போது இருப்பதைவிட 3.24% அதிகமாக வரி வசூலிக்கப்படும். மேலோட்டமாகப் பார்க்கும் போது 3.24% வரி உயர்வு என்பது சாதாரணமான ஒன்றாகத் தெரியும். ஆனால், தங்கத்தின் மதிப்பின் மீது கணக்கிட்டுப் பார்த்தால் தான் அதன் உண்மையானத் தாக்கம் தெரியவரும்.

உதாரணமாக ஒரு பவுன் தங்கத்தின் விலை செய்கூலி மற்றும் சேதாரம் சேர்த்து ரூ.25 ஆயிரம் என்று வைத்துக் கொண்டால், இதுவரை செலுத்தியதைவிட இப்போது கூடுதலாக ரூ.810 வரி செலுத்த வேண்டியிருக்கும். ஒரு பவுன் தங்கத்திற்கு மொத்தமாக ரூ.2985 வரியாக வசூலிக்கப்படுகிறது. இது எந்த வகையில் பார்த்தாலும் நியாமற்றது.

தங்கம் ஆடம்பரமானதாகவோ, கோடீஸ்வரர்கள் மட்டும் பயன்படுத்தக்கூடியதாகவோ இருந்தால் அதன்மீது அளவுக்கு அதிகமாக வரிகள் விதிக்கப்படுவதை வரவேற்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இந்திய கலாச்சாரத்தின்படி தங்கம் என்பது திருமணத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

ஏழைக் குடும்ப திருமணமாக இருந்தாலும் கூட, குறைந்தது 10 முதல் 15 பவுன் தங்கம் வரதட்சனையாக வழங்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. இதை உணர்ந்து தான் தமிழக அரசாங்கமே ஏழைக் குடும்பங்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தின் தலா ஒரு பவுன் தங்கத்தை இலவசமாக வழங்கி வருகிறது. புதிய வரிவிதிப்பின்படி ஒரு ஏழைக்குடும்பம் திருமணத்திற்காக 10 பவுன் தங்கம் வாங்கினால் சுமார் ரூ.30,000 வரியாக செலுத்த வேண்டியிருக்கும். இது பகல் கொள்ளைக்கு சமம்.

உலகின் 98% நாடுகளில் தங்கத்தின் மீது இறக்குமதி வரி விதிக்கப்படுவதில்லை. ஆனால், இந்தியாவில் மட்டும் தான் 10% இறக்குமதி வரி வசூலிக்கப்படுகிறது. 2012&13 ஆம் ஆண்டில் இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மிகவும் அதிகமாக இருந்தபோது தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிமுகப்படுத்தினார்.

பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி இன்றுவரை வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதை செய்வதற்கு பதிலாக மேலும், மேலும் வரிகளை அதிகரித்துக் கொண்டே செல்வது மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும்.

அளவுக்கதிகமாக வரி விதிக்கப்படும் போது, அதைத் தவிர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் தங்கம் கடத்தி வரப்படும். அது இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்தும்.

எனவே, தங்கத்தின் மீதான இறக்குமதி வரி, கலால் வரி ஆகியவற்றை முற்றிலுமாக ரத்து செய்வதுடன், பொருட்கள் மற்றும் சேவை வரியையும் ஒரு விழுக்காடாக குறைக்க வேண்டும்.

ஏழை மக்களின் உணவுப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் பிஸ்கட்டுகளுக்கு 18% பொருட்கள் மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டிருப்பதும், ரூ.500-க்கும் அதிக விலை கொண்ட காலணிகளுக்கு 18% வரி விதிக்கப்பட்டிருப்பதும் ஏழைகளை கடுமையாக பாதிக்கும்.

அதேநேரத்தில் உடல்நலத்திற்கு தீங்கை ஏற்படுத்தும் பீடிக்கு 28% மட்டுமே வரி விதிக்கப்பட்டிருக்கிறது. பீடி, சிகரெட் ஆகியவற்றை மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில் அவற்றுக்கு 100% வரி விதிக்கப்பட வேண்டும்"

இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x