Published : 13 Jun 2016 12:59 PM
Last Updated : 13 Jun 2016 12:59 PM

ஆர்.கே.நகர் மக்கள் குறைகளை அறிய தனி அலுவலர்- ஜெயலலிதா அறிவிப்பு

ஆர்.கே.நகர் தொகுதியில் வாரந் தோறும் செவ்வாய்க்கிழமையில் முதல்வரின் தனிப்பிரிவு தனி அலுவலர் முகாமிட்டு, பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெறுவார் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜெயலலிதா, தமிழக முதல்வராக 5-வது முறையாக பொறுப்பேற்றார். அப்போது, ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு 1.50 லட் சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலிலும் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா 2-வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வரானார்.

இந்நிலையில், தொகுதி மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் அவற்றை செயல்படுத்தும் முறைகளை விவாதிக்கும் மன்றமாக சட்டப்பேரவை திகழ்கிறது. சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசின் திட்டங்கள் பற்றி விவாதித்தாலும், தங்கள் தொகுதி பற்றிய பொதுவான பிரச்சினைகள் பற்றியும் பேரவையில் எடுத்துக் கூற இயலும். ஆனால், ஒருவரின் தனிப்பட்ட பிரச்சினை, வேண்டுகோள் குறித்து சட்டப்பேரவையில் பொதுவாக விவாதிக்க இயலாது.

எனவேதான் தனி நபர்களின் குறைகளை தீர்க்க பல அமைப்புகள் இயங்கி வருகின்றன. மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் தங்கள் தலைமையிடத்தில் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டங்களை நடத்தும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதே போல, மாதம் ஒருமுறை ஒரு கிரா மத்தில் மாவட்ட ஆட்சியர்களால் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப் பட்டு வருகிறது. இவை பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளன.

இருப்பினும், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று உடனடி தீர்வு காணும் வகையில் ‘அம்மா திட்டம்’ செயல்படுகிறது. பொதுமக்கள் தொலைபேசி மூலம் தங்கள் குறைகளை தெரிவிக்க, ‘அம்மா சேவை மையம்’ 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. அரசு சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இ-சேவை மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

இதுதவிர, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இப்பிரிவில் பொது மக்கள் நேரடியாக மனுக்களை அளிக்கலாம். இதுமட்டுமின்றி, இணையதளம் மூலமும் மனுக்களை அளிக்கலாம். இந்த மனுக்கள் மீது தொடர்புடைய துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதை முதல்வர் தனிப்பிரிவின் தனி அலுவலர் கண்காணித்து வருகிறார்.

என்னை சட்டப்பேரவைக்கு தேர்வு செய்த ஆர்.கே.நகர் தொகுதி மக்கள், தங்கள் குறைகளை என் கவனத்துக்கு கொண்டுவர, ஒரு சிறப்பு வழிமுறை கொண்டுவரப் படுகிறது. இதன்படி, முதல்வர் தனிப்பிரிவின் தனி அலுவலர், ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமையில் ஆர்.கே.நகர் தொகுதி யில் உள்ள தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு செல்வார். அன்று முழுவதும் அங்கேயே இருந்து, பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொள்வார். அந்த மனுக்கள் என் கவனத்துக்கு வந்ததும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x