Published : 12 Apr 2016 08:23 AM
Last Updated : 12 Apr 2016 08:23 AM

ஜெ. விருத்தாச்சலம் கூட்டம்: வெயிலில் மயங்கிய 2 பேர் பலி

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் விருத்தாசலம் தேர்தல் பொதுக்கூட்டத்தில் வெயிலில் மயங்கிய 2 பேர் உயிரிழந்தனர்.

சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதல்வர் ஜெயலலிதா, திங்கள்கிழமை விருத்தாசலத்தில் கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 13 அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலிருந்து காலையிலேயே பெண்கள் அழைத்துவரப்பட்டு பிரச்சார மேடை முன் அமர வைக்கப்பட்டனர். முதல்வர் ஜெயலலிதா பிற்பகல் 3 மணிக்குதான் மேடையை வந்தடைந்தார்.

கொளுத்தும் வெயிலை தாங்க முடியாத பெண்கள் குடிநீருக்கு அவதிப்பட்டனர். பலர் பசியோடு காத்திருந்தனர். ஜெயலலிதா மேடை ஏறியதும், அவரை பார்த்து கையசைத்த பெண்கள் பின்னர் அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே வெளியேறத் தொடங்கினர்.

அப்போது பெண்கள் உட்பட 19 பேர் மயக்கமடைந்து முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டனர். இதில் அரியலூர் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (42) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிதம்பரத்தைச் சேர்ந்த கருணாகரன் (49) என்பவர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.

பாதுகாப்புக் கருதியும், கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் காவல்துறை சார்பில் பிரச்சாரத் திடலில் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டிருந்ததால், பெண்கள் வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டது. அதேபோன்று மயக்கமுற்றவர்களையும் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

'உங்களால் நான், உங்களுக்காகவே நான்!' - ஜெயலலிதா உருக்கம்

"ஒரு தாய்க்கு தன் பிள்ளைக்குத் தேவையானது தெரியும். எனவே உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பது இந்த தாய்க்குத் தெரியும்" என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா விருத்தாசலம் தேர்தல் பொதுக்கூட்டத்தில் உருக்கமாக பேசினார்.

அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களை பட்டியலிட்ட முதல்வர், 2011-ல் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகவும், சொன்னதை செய்த தான், தேர்தல் அறிக்கையில் சொல்லாத திட்டங்களை செயல்படுத்தப்பட்டதை விளக்கினார்.

அவர் மேலும் பேசியதாவது: எனது வாழ்வு மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. மக்களால் நான், மக்களுக்காக நான். அதாவது உங்களால் நான், உங்களுக்காகவே நான். தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்லவேண்டும் எனக் கேட்டு 2011-ல் உங்களிடம் வந்தேன். அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தீர்கள். தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தல் மூலம் நல்லாட்சி தொடர வேண்டும், கடந்த 5 ஆண்டுகளில் செய்ததைவிட அதிக திட்டங்களை அதிமுக அரசு செய்ய அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். கடலூர் நகரை தானே புயல் தாக்கியபோது, 16 நாட்களிலேயே சீரமைக்கப்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மீட்கப்பட்டு ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் அரசுடைமையாக்கப்பட்டது. மின்வாரியத்தை சீரமைக்கக் கூடிய திட்டம் என மத்திய அரசு கொண்டுவந்துள்ள உதய் திட்டத்தில் தமிழக அரசு பங்கு பெறாதது குறித்து ஒருசில மத்திய அமைச்சர்களும், திமுக தலைவர் கருணாநிதியும் தமிழக அரசை குறை கூறி வருகின்றனர். மின் மீட்டர்கள் இல்லாத காரணத்தால் மின் திருட்டும், மின் இழப்பும் எற்படுகிறது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த தமிழக அமைச்சர்கள், தமிழகத்தில் விவ சாயிகளுக்கும், குடிசைகளில் வசிப்போருக்கும் மட்டுமே மீட்டர் கள் இல்லாமல் மின்சாரம் வழங்கப் படுகிறது என விளக்கம் அளித்திருந் தும், அதை கருணாநிதி ஏற்றுக் கொள்ளாதது ஏன்?

மின் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியது தவறு. இதற்கு ஆதரவாக பேசும் கருணாநிதி, இதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x