Last Updated : 15 Dec, 2015 08:08 AM

 

Published : 15 Dec 2015 08:08 AM
Last Updated : 15 Dec 2015 08:08 AM

வெள்ள நிவாரண கணக்கெடுப்பு: என்னென்ன தகவல்கள் தர வேண்டும்; யார் யாருக்கு நிவாரணம் கிடைக்கும்?

தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவ மழையால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. மழை பாதிப்புகளால் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு ரூ. 4 லட்சம், நிரந்தரமாக பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு ரூ.5 ஆயிரம், பகுதியளவு பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு ரூ.4 ஆயிரத்து 100 என முதல்வர் ஜெயலலிதா நிவாரண நிதியை அறிவித்தார்.

இந்நிலையில் டிசம்பர் 1-ம் தேதி பெய்த அதிகன மழையால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளநீரால் சூழப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து வெள்ள சேதத்தை பார்வையிட்ட முதல்வர் ஜெய லலிதா, ‘குடிசைகளை இழந்த குடும் பங்களுக்கு ரூ.10 ஆயிரம், நிரந்தர வீடுகளில் வசித்து வெள்ள பாதிப்புக் குள்ளானவர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட குடும்பங்களை கணக்கெடுக்கும் பணி முடிந்ததும் சில தினங்களில் இவை வழங்கப்படும்’ என அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, நிவாரணம் யாருக்கு கிடைக்கும், எவ்வாறு அளிக்கப் படும் என்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

யார் யாருக்கு நிவாரணம்

* மழை-வெள்ளத்தால் முழுமையாகச் சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.5 ஆயிரமும், பகுதி சேதமடைந்த குடிசை களுக்கு ரூ.4,100 வழங்க உத்தரவிடப் பட்டது.

* இந்த நிவாரண நிதி உதவி உயர்த்தப் பட்டு முழுமையாக மற்றும் பகுதி சேதமடைந்த குடிசைக்கு நிவாரணத் தொகையாக ரூ.5 ஆயிரமும், துணிகள், பாத்திரங்கள் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் இழப்புக்காக சிறப்பு நிவாரணத் தொகையாக ரூ.5 ஆயிரமும் ஆக மொத்தம் ரூ.10 ஆயிரம் மற்றும் 10 கிலோ அரிசி, ஒரு வேஷ்டி, ஒரு சேலை ஆகியவை வழங்கப்படும்.

* மேலும் பகுதி சேதமடைந்த குடிசை களுக்கு ரூ.4 ஆயிரத்து 100 நிவாரணத் தொகை ஏற்கெனவே வழங்கப்பட்டி ருந்தால், அவர்களுக்கு கூடுதலாக ரூ.900 தற்போது வழங்கப்படும்.

இரண்டு நாள் வெள்ளம்

* கனமழை காரணமாக, 2 நாட்களுக்கு மேல் வெள்ளத்தால் சூழப்பட்டு, பாதிப் புக்குள்ளான நிரந்தர, குடிசை வீடுகளில் வசிக்கும் குடும்பத்தினருக்கு துணிகள், பாத்திரங்கள் போன்ற வீட்டு உபயோகப் பொருள் இழப்புக்காக சிறப்பு நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரம் மற்றும் 10 கிலோ அரிசி, ஒரு வேஷ்டி, ஒரு சேலை வழங்கப்படும்.

* நிவாரணத் தொகை, பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

புதிய கணக்கு

* வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு உடனடியாக புதிய வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு அதில் சிறப்பு நிவாரணத் தொகை சேர்க்கப்படும்.

* வேஷ்டி, சேலை, அரிசி போன்றவை சம்பந்தப்பட்ட ரேஷன் கடை மூலம் வழங்கப்படும்.

* இந்த அரசாணையின் அடிப்படையில் தான் தற்போது சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. இப்பணிகள் வரும் வெள்ளிக்கிழமை வரை நடக்கும் என கூறப்படுகிறது.

* கணக்கெடுப்பின் போது, கணக் கெடுப்பாளர் வைத்துள்ள படிவத்தில் 13 வகையான தகவல்களை பாதிக்கப் பட்டவர்கள் அளிக்க வேண்டும்.

என்ன தகவல்கள்?

மண்டலம், பகுதி மற்றும் தெரு பெயர், குடும்ப தலைவரின் பெயர், கைபேசி எண், முகவரி, குடும்ப அட்டை உள்ளதா?, இருக்கிறது எனில் அட்டை எண். இல்லை எனில் பொருட்கள் வாங்கும் ரேஷன் கடையின் பெயர், வங்கி கணக்கு உள்ளதா, ஆம் எனில் வங்கியின் பெயர், கிளை, கணக்கு எண், குடியிருப்பது குடிசை வீடா, நிரந்தர வீடா?, குடியிருக்கும் குடிசை அல்லது நிரந்தர வீடு முழுமையாக பாதிக்கப்பட்டதா, பகுதியளவு பாதிக்கப்பட்டதா? குடியிருக்கும் வீடு வெள்ள நீரால் சூழப்பட்டிருந்ததா? ரேஷன் கார்டு இல்லை எனில் இதர ஆவணங்கள் என்ன? என்ற விவரங்களை கணக்கெடுப்பாளரிடம் வழங்க வேண்டும். இறுதியாக படிவத்தில் குடும்ப தலைவர் கையொப்பமிட்டு தர வேண்டும்.

ரேஷன் கார்டு இல்லை எனில்?

ரேஷன் கார்டு இல்லை எனில், ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆதாரங்களை அளிக்கலாம். முகவரி மாறி தற்போது அந்த பகுதிக்கு வந்தவர்கள் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் செய்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் தற்போது வசிக்கும் முகவரி, அடையாள அட்டை மற்றும் வங்கி ஆவணங்களை அளிக்கலாம். கணக்கெடுப்பாளர் அருகில் இருப்பவர்களிடம் விசாரித்து உறுதி செய்து கொள்வார்.

வங்கிக்கணக்கு இல்லை எனில்?

* வங்கிக்கணக்கு இல்லை எனில், பிரதமரின் ஜன்தன் திட்டத்தில் புதிய வங்கிக்கணக்கு தொடங்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

* வங்கிக்கணக்கு இல்லாதவர்களுக்கு கணக்கெடுப்பின் போதே புதிய வங்கிக் கணக்குக்கான படிவம் வழங்கப்படுகிறது. படிவத்தை பெற்றவர்கள், பூர்த்தி செய்து மாவட்ட முன்னோடி வங்கி மூலம் வங்கிக் கணக்கு தொடங்கலாம்.

மறு கணக்கெடுப்பு உண்டா?

* ஒரு முறை கணக்கெடுப்பாளர் வரும் போது, வீட்டில் ஆட்கள் இல்லை எனில், அருகில் உள்ள வீட்டில் இருப்பவர்களிடம் தகவல்களை பெற்றுக் கொண்டு, பெயர், விவரங்களை பெறுவார். படிவத்தில் ‘ரீ சர்வே’ என எழுதிவிடுவார்.

* மீண்டும் அடுத்தநாள் அதே பகுதிக்கு வந்து, கணக்கெடுப்பார். இல்லை யெனில், கணக்கெடுப்பாளர் சம் பந்தப்பட்ட குடும்ப தலைவரின் கைபேசி எண்ணை பெற்று, தகவல்களை பெறுவார்.

* கணக்கெடுக்க வருபவரிடம் மட்டுமே தகவல்களை அளிக்க வேண்டும். அப்போது தான் தகவல்கள் முழுமையாக பதிவு செய்யப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாருக்கு கிடைக்கும்?

கணக்கெடுப்பு தொடர்பாக வரு வாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘தற்போது வெள்ள பாதிப்புள்ள பகுதிகளில் எந்த தளத்தில் அவர்கள் குடியிருந்தாலும் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்படுகின்றனர். யாருக்கு நிவாரணம் அளிப்பது என்பதை அரசு தான் முடிவு செய்யும்’என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x