Published : 07 Jan 2014 02:36 PM
Last Updated : 07 Jan 2014 02:36 PM

உயர் நீதிமன்ற நீதிபதிகளாக எல்லா சமூகத்தினரையும் நியமிக்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் எல்லா சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். சமூக சமத்துவம் இல்லாத நிலைமையைப் போக்கவும், சமூக நீதியை உறுதி செய்யவும் பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த தகுதியான வழக்கறிஞர்களை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்திட வேண்டும். கடந்த நவம்பர் 26-ம் தேதி சட்ட தினத்தன்று உரையாற்றிய இந்திய தலைமை நீதிபதி, எல்லா தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் நீதித் துறையில் உரிய பிரதி நிதித்துவம் அளிக்கப்பட வேண்டி யதன் அவசியம் குறித்துப் பேசியுள்ளார்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக சில குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களே தொடர்ந்து நீதிபதிகளாக நியமிக்கப்படும் சூழல் உள்ளது. தற்போது காலியாக உள்ள நீதிபதிகள் பதவியிடங்களை நிரப்புவதற்காக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழு (கொலிஜியம்) சார்பில் 12 பேர் கொண்ட பட்டியல் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதில் 10 பேர் வழக்கறிஞர்கள். எனினும் ஏற்கெனவே எந்தெந்த சமூகத்தவர்கள் அதிக அளவில் நீதிபதிகளாக உள்ளார்களோ அத்தகைய சமூகங்களைச் சேர்ந்தவர்களே மீண்டும் நீதிபதிகள் பதவிக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

மற்ற சமூகங்களையும் சேர்ந்த திறமையான மற்றும் தகுதியான பல வழக்கறிஞர்கள் இங்கு பணியாற்றி வரும் நிலையில், சில குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களையே தொடர்ந்து நீதிபதிகள் பதவிக்கு பரிந்துரை செய்வது சரியல்ல என்று அந்த மனுவில் வழக்கறிஞர் காந்தி கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோரைக் கொண்ட அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், தமிழ்நாட்டில் சுமார் 125 சாதி சமூகங்கள் உள்ளன. எல்லா சமூகங்களிலும் திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள் பலர் உள்ள நிலையில், குறிப்பிட்ட சில சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் தற்போதும் நீதிபதிகள் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

ஆகவே, அந்தப் பரிந்துரைப் பட்டியலை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கே திரும்ப அனுப்பும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். இந்த வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்றும், அனைத்து சமூகங்களையும் சேர்ந்த தகுதியானவர்களையே நீதிபதிகளாக நியமித்திட வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களின் தர்ணா போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. வழக்கறிஞர்கள் ப.விஜேந்திரன், சி.விஜயகுமார், எஸ்.சத்தியச்சந்திரன், எஸ்.ரஜினிகாந்த், ம.பாரி உள்ளிட்ட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x