Published : 23 Apr 2016 08:13 AM
Last Updated : 23 Apr 2016 08:13 AM

ஜெயலலிதா மீண்டும் போட்டியிடுவதால் விஐபி தொகுதியான ஆர்.கே.நகர்

முதல்வர் ஜெயலலிதா போட்டியிடு வதால், சென்னை டாக்டர் ஆர்.ராதா கிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதி விஐபி தொகுதியாக மாறி உள்ளது.

ராயபுரத்தில் ஒரு பகுதி, தண்டை யார்ப்பேட்டை, கொருக்குப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, கொடுங் கையூர் உள்ளிட்ட பின்தங்கிய பகுதி களைக் கொண்ட இத்தொகுதி, கடந்த ஓராண்டாகவே நட்சத்திர அந்தஸ்து பெற்றது.

தகர்ந்த திமுக கோட்டை

கடந்த 1977-ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதி உருவாக்கப்பட்டது. அன்று முதல் 2011 வரை நடந்துள்ள 9 தேர்தல்களில் அதிமுக 5 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா 2 முறை வென்றுள்ளன. 1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றிய போது திமுகவின் கோட்டையான சென்னை மாநகரில் அதிமுக வென்ற ஒரே தொகுதி ஆர்.கே.நகர் மட்டுமே.

கடந்த 1977-ம் ஆண்டு தொகுதி உருவாக்கப்பட்டதும், அதிமுக வேட்பாளர் ஐசரி வேலன் 28,416 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதன்பின், 1991-ல் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், 66,710 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பி.கே.சேகர்பாபு 2001-ல் 74,888, 2006-ல் 84,462 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தற்போது திமுக துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் எஸ்.பி.சற்குணபாண்டியன் 1989-ல் 54,216, 1996-ல் 75,125 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

கடந்த 2011-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டி யிட்ட வெற்றிவேல் 83,777 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2014-ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கால் முதல்வர் மற்றும் எம்எல்ஏ பதவிகளை ஜெயலலிதா இழந்தார். வழக்கில் சாதகமாக கிடைத்த தீர்ப்பைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்ய, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அந்த தொகுதியில் வேட்பாளராக களமிறங்கினார் முதல்வர் ஜெயலலிதா. மற்ற எதிர்க்கட்சிகள் ஒதுங்கிவிட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மகேந்திரன் வேட்பாளரானார். இத்தேர்த லில் எதிர்த்த அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்து, ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் முதல்வர் ஜெயலலிதா.

தொடர்ந்து இந்த தேர்தலிலும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடு கிறார். இவரை எதிர்த்து, திமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன், மக்கள் நலக் கூட்டணியில் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, பாஜ சார்பில் எம்.என்.ராஜாவும் போட்டி யிடுகின்றனர். ஆர்.கே.நகரில் தற்போது 1 லட்சத்து 25 ஆயிரத்து 881 ஆண்கள், 1 லட்சத்து 29 ஆயிரத்து 229 பெண்கள், திருநங்கைகள் 88 பேர் என மொத்தம் 2 லட்சத்து 55 ஆயிரத்து 198 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த தொகுதியைப் பொறுத்தவரை, காசிமேடு மீன்பிடித் துறைமுகம், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் (ஐஓசி), துறைமுக நிர்வாக விளையாட்டு மைதானம் ஆகியவை தொகுதியின் முக்கியமான இடங்கள். நகரின் மிகப் பழமையான பகுதியான இங்கு, அனைத்து சமூகத்தினரும் வசிக்கின்ற னர். இருப்பினும் தலித்கள், மீனவர்கள் அதிகம். இங்குள்ள மக்களில் பெரும் பகுதி தினக்கூலிகள் என்பது குறிப்பிடத் தக்கது. அரசு கலை அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ போன்ற கல்வி நிலையங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.

தொகுதி பிரச்சினை

மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதி என்பதால், வாகன நெரிசல், சுகாதார பிரச்சினைகள் இங்கு பிரதான விஷயமாக உள்ளது. கொடுங்கையூர் குப்பைக்கிடங்கு இத்தொகுதியில் உள்ளதால், நோய்த் தாக்குதலுக்கு உள்ளாவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x