Last Updated : 22 Jan, 2017 03:55 PM

 

Published : 22 Jan 2017 03:55 PM
Last Updated : 22 Jan 2017 03:55 PM

புதுச்சேரியில் இணையதள குற்றங்களை கையாள தனி சைபர் க்ரைம் பிரிவு

இணையதள குற்றங்களை கையாள்வது தொடர்பாக புதுச்சேரி காவல் துறையில் தனியாக சைபர் க்ரைம் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

சைபர் க்ரைம் பிரிவு அனைத்து மாநிலங்களிலும் தொடங்க வேண்டும் என்று மத்திய அரசு கடந்த 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனாலும் புதுச் சேரியில் சைபர் க்ரைம் பிரிவு தனியாக தொடங்கப்படாமல் இதுவரையிலும் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் சைபர் க்ரைம் பிரிவு தொடங்குவதற்கான அரசானை பிறப்பிக்கப் பட்டது. தற்போது, சைபர் க்ரைம் பிரிவு தொடங்கப்பட்டிருக்கிறது. இதற்காக ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை நியமித்து புதுச்சேரி டிஜிபி சுனில்குமார் கவுதம் உத்தர விட்டுள்ளார்.

இன்று இணையத்தின் பங்கு மிக முக்கிய மானதாக உள்ளது. அதற்கு ஏற்றார்போல் ‘சைபர் கிரைம்’ என்று சொல்லப்படும் இணையதள குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. 'ஸ்பாம்' எனப்படும் தேவை யில்லாத மெயில்கள், இணையம் மூலம் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள், ஆபாச படங்களை வெளியிடுவது, இணையதளங்களை முடக்குவது (ஹேக்). ஒரு நாட்டின் ஆராய்ச்சி முடிவுகளை திருடுவது, ஆன்-லைன் லாட்டரி, மொபைல் குறுஞ்செய்தி மூலம் மக்களை ஏமாற்றி பணம் பறித்தல், போலி ஏடிஎம், கிரெடிட் கார்டு மூலம் மோசடி செய்வது, மிரட்டல் விடுப்பது ஆகியவை இணையதள குற்றங்களில் அடங்கும்.

தற்போது சைபர் க்ரைம் இணையதள குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுக்கவும் பல்வேறு நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புதுச் சேரியில் சைபர் க்ரைம் குற்றங்களை கையாள தனி பிரிவு இதுவரை இல்லாமல் இருந்தது. தற்போது அதற்கென்று தனி பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தை பொருத்தவரை இரண்டு காவல் மாவட்டங்களாக ஆளுகை செய்யப்படுகிறது. அதன்படி வடக்கு, தெற்கு, ஊரகம், மாஹே, ஏனாம் ஆகியவை அடங்கிய புதுச்சேரி மாவட்ட மாகவும், காரைக்கால் ஒரு மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி காவல்துறையில் சட்டம் - ஒழுங்கு, குற்றம் மற்றும் புலனாய்வு, சிக்மா செக்யூரிட்டி, வெடிகுண்டு பிரிவு, மோப்ப நாய், ஆவணக்காப்பகம், தடய அறிவியல், ஆயுதப்படை, சிபிசிஐடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன. இருப்பினும் பல ஆண்டுகளாக புதுச்சேரியில் சைபர் க்ரைம் பிரிவு நடைமுறைக்கு வராத நிலை இருந்தது. சைபர் க்ரைம் குற்றங்களை சிபிசிஐடி போலீஸார் கூடுதலாக கவனித்து வந்தனர்.

இதன் காரணமாக இணையதளம், மொபைல் போன் சம்பந்தமான தகவல் தொழில்நுட்ப குற்றங்களை கண்டு பிடிப்பதிலும், நடைமுறைப்படுத்துவதிலும் சிக்கல் நீடித்தது.

மேலும், புதுச்சேரியில் சைபர் கிரைம் பிரிவு இல்லாததால் இணையம், மொபைல் போன் சார்ந்த குற்றங்கள் அதிகரித்து வந்தன. குறிப்பாக போலி ஏடிஎம், கிரெடிட் கார்டை பயன்படுத்தி பணம் திருடுவது சமீபகாலமாக அதிகரித்தது. இது குறித்த புகார்களை தெரிவிக்க பொதுமக்கள் தயங்கும் நிலை இருந்தது.

இத்தகைய குற்றங்களுக்கு யாரை அணுக வேண்டும் என்பது கூட தெரியாத நிலை நீடித்து வந்தது.

இந்த நிலையில், புதுச்சேரி காவல் துறையில் புதிதாக சைபர் க்ரைம் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில், சப்இன்ஸ்பெக் டர்கள் மோகன்தாஸ், சந்தோஷ், காவலர் முகமது லியாகத் அலி, பெண் காவலர் சுனிதா ஆகியோர் இந்தப் பிரிவில் இடம் பெற்றுள்ளனர். புதுச்சேரியில் நடைபெறும் இணையதள குற்றங்கள் தொடர்பான புகார்களை இந்தக் குழுவினர் கையாள்வர்.

மேலும், சைபர் க்ரைம் குற்றங்களை கண்டறியவும், கையாளவும் தேவையான தொழில்நுட்பக் கருவிகள், சாப்ட்வேர் போன்றவற்றை வாங்கும் முனைப்பிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இதற்கான கோப்பு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆட்கள் நியமிக்கப்படுவார்களா?

நன்கு தொழில்நுட்பம் தெரிந்த தேர்வு பெற்றவர்கள் இந்த சைபர் க்ரைம் பிரிவில் இருந்தால் சைபர் குற்றங் களை எளிதாக கண்டறியலாம். அதற் கென்று தனியாக காவலர்களை நியமிக்க வேண்டும். ஆனால் தற்போது, சிபிசிஐடி பிரிவில் உள்ளவர்கள் சைபர் க்ரைம் பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இத னால், அவர்கள் சைபர் தொடர்பான குற்றங்களை கையாள்வதில் சிக்கல் நிலவும் என்று கூறப்படுகிறது. எனவே, சைபர் குற்றங்களை கையாள நன்கு தொழில்நுட்பம் தெரிந்த அவற்றில் தேர்வு பெற்றவர்களை நியமித்தால் சைபர் குற்றங்களை தடுக்க முடியும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x