Published : 24 Mar 2017 11:49 AM
Last Updated : 24 Mar 2017 11:49 AM

வேதாரண்யத்தில் மான் கொம்புகள் வைத்திருந்தவர் கைது

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அரியவகை மானின் கொம்புகள் வைத்திருந்தவர் கைது செய்யப் பட்டார்.

வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் வன உயிரின சரணாலயம் உள்ளது. இதில் அரியவகை மான்கள், குதிரைகள் உட்பட பல்வேறு வன உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றை பொதுமக்கள் வேட்டையாடுவதற்கு வனத்துறை யினர் தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில், அரியவகை மான் கொம்புகள் வேதாரண்யத்தில் உள்ள ராஜகோபால்(48) என்பவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, அவரது வீட்டில் நேற்று காலை வனச் சரக அலுவலர் அயூப்கான், வனவர் இளங்கோவன் உள்ளிட்ட வனத்துறையினர் சோதனையிட்டனர்.

இதில், அரிய வகை வெளிமானின் கொம்புகள் 6, புள்ளிமான் கொம்புகள் 12 ஆகியன இருந்தது தெரியவந்தது. அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், ராஜகோபாலிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, நவீனரக துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் 151 துப்பாக்கி குண்டுகளும் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, ராஜகோபால் கைது செய்யப் பட்டார்.

இதுகுறித்து மாவட்ட வன உயிரின காப்பாளர் வித்யா செய்தி யாளர்களிடம் கூறியது:

மிகவும் பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்கள் பட்டியலில் உள்ள வெளிமான்களின் கொம்புகள் கைப்பற்றப்பட்டுள்ளது அதிர்ச்சி யளிக்கிறது. இவருக்கு மான் கொம்புகள் எப்படி கிடைத்தது என்பது குறித்தும், இவர் மான்களை வேட்டையாடினாரா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்படும்.

சோதனையில் கைப்பற்றப்பட்ட நவீனரக துப்பாக்கிக் குண்டுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் அளிக்கப்பட்டு, உரிய விசாரணை நடைபெறும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x