Published : 02 Feb 2014 12:00 AM
Last Updated : 02 Feb 2014 12:00 AM

அரசு கேபிள் டி.வி. சந்தா வசூலிக்க 5-ம் தேதி முதல் புதிய முறை- கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

அரசு கேபிள் டி.வி.க்கு மாதாந்திர சந்தா தொகை வசூலிக்க வரும் 5-ம் தேதி முதல் புதிய முறை அறிமுகம் செய்யப்படுகிறது. அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு அதிகமாக வசூலித்தால் சம்பந்தப்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சனிக்கிழமை அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

முதல்வர் ஜெயலலிதா 30-8-2011 அன்று சட்டசபையில் ஆற்றிய உரையில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மாதம் ரூ.70 என்ற குறைந்த கட்டணத்தில் கேபிள் டி.வி. சேவையை பொதுமக்களுக்கு கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் வழங்கும் எனவும், இதில், ரூ.20-ஐ கேபிள் ஆபரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு செலுத்துவார்கள் எனவும் அறிவித்தார். சென்னை நீங்கலாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. சேவையை முதல்வர் ஜெயலலிதா 2-9-2011 அன்று தொடங்கி வைத்தார். சென்னை மாநகர கேபிள் டி.வி. சேவை முதல்வரால்

20-10-2012 அன்று தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 24,706 உள்ளூர் (எல்.ஓ.சி.) மற்றும் பன்முனை (எம்.எஸ்.ஓ.) கேபிள் ஆபரேட்டர்கள் பதிவு செய்துள்ளனர். ஏறத்தாழ 65.62 லட்சம் வாடிக்கையாளர்களை இந்த நிறுவனம் கொண்டுள்ளது.

மாதாந்திர சந்தா தொகை ரூ.70-ஐ மாதந்தோறும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள உள்ளூர் மற்றும் பன்முனை கேபிள் ஆபரேட்டர்கள் சந்தாதாரர்களிடம் இருந்து வசூலித்து வருகிறார்கள். மாதந்தோறும் ரூ.70-ஐ மட்டும் சந்தாதாரர்களிடம் இருந்து வசூல் செய்வதை உறுதி செய்ய ஏதுவாக வரிசை எண் இடப்பட்ட அடிக்கட்டையுடன்கூடிய ரசீது புத்தகங்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

ரசீது புத்தகங்களை மாவட்ட துணை மேலாளர்கள், மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளூர் மற்றும் பன்முனை ஆபரேட்டர்களுக்கு, அவர்களிடம் உள்ள சந்தாதாரர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்குவார்கள்.

இதைத்தவிர வேறு எந்தவிதமான ரசீது புத்தகத்தையும் பயன்படுத்தக்கூடாது என கேபிள் ஆபரேட்டர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். கூடுதல் கட்டணம் வசூலித்தாலோ, ரசீதை வழங்க மறுத்தாலோ சம்பந்தப்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இப்புதிய நடைமுறை 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

சந்தாதாரர்கள் தாங்கள் செலுத்தும் சந்தா தொகைக்கு தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ள ரசீதை கேட்டுப் பெறும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கூடுதல் கட்டணம் வசூலித்தாலோ, ரசீது வழங்க மறுத்தாலோ, அந்தந்த மாவட்ட கேபிள் டி.வி. துணை மேலாளருக்கு நேரிலோ, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.யின் மின்னஞ்சல் முகவரியான arasucabletvcorp@gmail.com மூலமாகவோ, 044-28221233 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ, 044-28253021 என்ற எண்ணிற்கு பேக்ஸ் மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x