Last Updated : 11 Jan, 2017 02:47 PM

 

Published : 11 Jan 2017 02:47 PM
Last Updated : 11 Jan 2017 02:47 PM

500 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை பாதுகாத்த உயர் நீதிமன்றம்

500 ஆண்டு பழமையான மரத்தை வெட்டாமல் பாதுகாக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், சிவந்தான் கோட்டை கிராம மக்கள் மற்றும் நல்லமுனீஸ்வரர் கோயில் பக்தர்கள் சார்பில் பி.சுப்பராயன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

காரைக்குடியையும் ராமநாதபுரம் மாவட்டத்தையும் இணைக்கும் என்.எச்- 210 விரிவாக்கத்துக்காக சிவந்தான் கோட்டையில் உள்ள 500 ஆண்டு பழைய ஆலமரம், அதன் அருகேயுள்ள நல்ல முனீஸ்வரர் கோயில் மற்றும் சிவந்தான்கோட்டை கண்மாயை கையகப்படுத்த நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிவந்தான்கோட்டை கண்மாய் இரு கிராமங்களின் முக்கிய நீராதாரம். சாலைக்காக கண்மாயை மூடினால் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.

ஆலமரம் 500 ஆண்டு பழமையானது. அதன் அருகே அமைந்துள்ள கோயிலுக்கு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் கோயில், கண்மாய், ஆலமரத்தை கையகப்படுத்தும் அறிவிப்பை ரத்து செய்து, அவற்றிற்கு இடையூறு இல்லாமல் மாற்றுப்பாதையில் சாலை அமைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப் பட்டிருநதது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, ஜெ.நிஷாபானு அமர் வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் டி.அருள் வாதிடும் போது, நெடுஞ்சாலை அதிகாரிகள் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு பெறவில்லை. சில இடங்களில் நான்கு வழிச் சாலை யாகவும், சில இடங்களில் இருவழிச்சாலையும் அமைக் கப்படுகிறது. கோயில், கண்மாய், ஆலமரத்தை கையகப்படுத்த ஆட்சேபம் தெரிவித்து மனு அளித் தேன். எங்கள் ஆட்சேபத்தை கருத்தில் கொள்ளவில்லை. 500 ஆண்டுகள் பழ மையான ஆலமரத்தை மக்கள் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர் என்றார்.

நெடுஞ்சாலை த்துறை சார்பில் வாதிடும்போது, இரு மாவட்டங்களையும் அனைத்து துறை களிலும் மேம்படுத்தும் நோக் கத்தில் சாலை விரிவாக்கப்பணி மேற்கொள்ளப்படுகிறது. வாகன நெரிசலைக் குறைக்கவும், விபத் துகளை குறைக்கவும் சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவு: ஆலமரத்தின் தாய்நாடு இந்தியா. ஆலமரம் பறவைகளின் வாழிடமாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மருத்துவ குணங்கள் கொண்டதாகவும் உள்ளது.

நாடு முழுவதும் மேம்பாடு என்ற பெயரில் மரங்களை வெட்டுவதால் வெப்பம் அதிகரிப்பதுடன், தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. பழமையான மரங்களை முதியவர் களை போல பாதுகாக்க வேண்டும். பல நாடுகளில் பழமையான மரங்களுக்கு மரியாதை வழங்கி பாதுகாக்கின்றனர். பழமையான அனைத்தும் வீணானது எனக் கருதும் மோசமான பழக்கம் தற்போது பரவி வருகிறது. 500 ஆண்டுகள் பழமையான ஆல மரம் பாரம்பரியமான மரம். அதை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை.

கண்மாயை பொருத்தவரை அந்த கிராமத்துக்கு இருக்கும் ஒரே நீராதாரம் இது தான்.

அனைத்து நீர்பாசன கால்வாய், ஆறு, குளம் ஏரி, பாறை உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். இதனால் கோயில், கண்மாய், ஆலமரத்தை கையகப்படுத்தும் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவற்றுக்கு இடையூறு செய்யாமல் மாற்றுப்பாதையில் சாலை விரிவாக்கத்தை மேற்கொள்ள உரிமை வழங்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x