Published : 14 Jan 2017 09:35 AM
Last Updated : 14 Jan 2017 09:35 AM

சென்னையில் 40-வது புத்தகக் காட்சி: ராமானுஜர் அவதரித்த மண்ணில் தீண்டாமை தொடர்வது வேதனை

தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் 40-வது சென்னை புத்தகக் காட்சி அமைந்தகரை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்து வருகிறது. இதில் 7-ம் நாளான வியாழக்கிழமையன்று ஊடகவியலாளர் மை.பா.நாராயணன் பேசியதாவது:

மனிதர்களை உய்விக்கும் எட்டெழுத்து மந்திரத்தை அறிய திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் சென்றார் ராமானுஜர். அவர் 18 முறை இழுத்தடித்து, கடைசியில் உபதேசம் செய்தார். ‘சொர்க்கத்துக்கு இட்டுச்செல்லும் இந்த மந்திரத்தை பிறருக்கு உபதேசித்தால் நீ நரகம் செல்வாய்’ என்று நிபந்தனை விதித்தார். தான் நரகம் சென்றாலும் பரவாயில்லை என்று எல்லோரும் அறிய திருமந்திரத்தை உபதேசித்தார் ராமானுஜர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவதரித்த பகவத் ராமானுஜர், தீண்டாமை என்னும் சமூகக் கொடுமையைத் தீண்டியே ஒழித்தார் என்பதால்தான் இன்றும் பேசப்படுகிறார். அப்படிப்பட்ட புரட்சியாளரைக் கண்ட இந்த மண்ணில், அறிவியலும், சமூக முன்னேற்றமும் இவ்வளவு மேம்பட்ட பிறகும் தீண்டாமைக் கொடுமை தொடர்வதும், ஆலயத் திருவிழாக்களில் ஆதிக்க சாதியினரின் மனப்போக்கு காரணமாக, தேரோட்டங்கள்கூட நிறுத்தப்படும் நிலைமை நீடிப்பதும் வெட்கித் தலைகுனிய வேண்டிய சூழல்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, ‘வெற்றி நமக்கே’ என்ற தலைப்பில் 7 வயது சிறுமி ரித்திகா அழகம்மை பேசினார். 63 நாயன்மார்களின் பட்டியலை சிறப்பாக ஒப்பித்த சிறுமியை பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பி பாராட்டினர். நினைவுப் பரிசுகளை பபாசி இணைச் செயலாளர் மயிலை வேலன் வழங்கினார். நிகழ்ச்சியை ஷைலஜா தொகுத்து வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x