Published : 26 Jun 2017 09:39 AM
Last Updated : 26 Jun 2017 09:39 AM

காஞ்சிபுரம் - சென்னை சாலையில் மேம்பாலப் பணி: தொல்லியல் துறை விதிகளால் ஏரி வழியாக செல்கிறது

காஞ்சிபுரம் - சென்னை செல்லும் சாலையில் காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகே ரயில்வே கேட் மூடப்படும்போது அப்பகுதி வழியாகச் செல்லும் அதிக வாகனங்களால் பெரும் போக்குவரத்து நெரிசல் உருவானது. இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் ஒரு மேம்பாலம் அமைக்க முடிவு செய்யபட்டது. ஏற்கனவே ஆறுகள் பகுதியில் மேம்பாலம் இருந்தாலும் காஞ்சிபுரம் பகுதியில் சாலை பகுதியில் அமைக்கப்படும் முதல் மேம்பாலம் இதுதான். இந்த மேம்பாலம் அமைக்கும் பணிக்காக ரூ.49.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொள்ளும்போது இடையில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களும் வந்தன. இக் கோயிலுக்கு நூறு அடிக்குள் கட்டிடம் கட்டக் கூடாது என்ற விதி இருப்பதால் நிலம் கையகப்படுத்தும் பணியின்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நிலம் கையகப்படுத்தும் பணியை பொதுப்பணித்துறையினர் கைவிட்டனர்.

இதற்கு பதிலாக காஞ்சிபுரம்-சென்னை சாலையில் பொன்னேரிக் கரை அருகே பிரியும் பாலம் ஏரிக்குள் சென்று புதிய ரயில் நிலையம் அருகே சாலையில் வந்து சேரும்படி புதிய வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்துக்காக ஏரிகளுக்குள் 66 தூண்கள் அமைக்கப்படுகின்றன. இதனால் பொதுப்பணியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியில் இருந்து 1700 சதுர அடி பரப்பு மட்டும் பயன்படுத்தப்பட உள்ளது. பாலத்துக்கான தூண்களுக்கான இந்த பரப்பு பயன்படுத்துவதால் தண்ணீர் நிற்பதில் ஏற்படும் குறைபாட்டை போக்க, இந்த இடத்தில் நிற்கும் தண்ணீரைப்போல் மூன்று மடங்கு தண்ணீர் நிற்கும் அளவுக்கு ஏரியை ஏதேனும் ஒரு பகுதியில் தூர்வாரி தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரப் பிரிவு பாலம் அமைக்கும் பணிக்கு அனுமதி அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஏரிகளில் தூண்கள் அமைப்பதற்கான சோதனைகள் தொடங்கியுள்ளன. தூண்களின் எடைக்கு தகுந்தாற்போன்ற பொருட்கள் 30 மீட்டர் ஆழத்துக்கு குழி தோண்டி அவற்றை பூமியில் நிறுத்தி சோதனையிடப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து கடந்த இரு நாட்களாக பொறியில் வல்லுநர்கள் அப் பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

பாலம் அமைப்பதற்கு பள்ளம் தோண்டுவது, அதற்கு தேவையான பொருட்களை தயாரிப்பது போன்ற பணிகளும் பரபரப்பாக தொடங்கியுள்ளன. இந்த பாலம் அமைக்கும் பணி 2 ஆண்டுகள் நடைபெற உள்ளது.

இது குறித்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கூறுகையில், ‘‘20 ஆண்டுகளுக்கு பிறகு நகரம் எப்படி இருக்கும் என்பதை திட்டமிட்டு இப் பாலம் அமைக்கப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை நகரமானது ஏறக்குறைய மதுராந்தகம், காஞ்சிபுரம் பகுதி வரை வளர்ந்திருக்கும் என்று கணித்துள்ளோம்.

போக்குவரத்து நெரிசலை குறைக்க இதுபோன்ற பாலங்களை இப்போதிருந்தே இப்பகுதிகளில் அமைக்க திட்டமிட்டு வருகிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x