Published : 27 Jan 2014 12:00 AM
Last Updated : 27 Jan 2014 12:00 AM

குடியரசு தின விழா: அரசு அலுவலகங்களில் உற்சாக கொண்டாட்டம்

சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழாவை தேசியக் கொடி ஏற்றி உற்சாகமாக கொண்டாடினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்.

65–வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் ஞாயிற்றுக் கிழமையன்று சிறப்பாக கொண்டா டப்பட்டது. சென்னை உயர் நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி ராஜேஷ் குமார் அகர்வால் தேசியக் கொடியை ஏற்றினார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய வளாகத்தில் மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். மாநில தேர்தல் ஆணைய செயலாளர் பா.ஜோதி நிர்மலா மற்றும் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ரிப்பன் மாளிகையில் கொண்டாட்டம்

சென்னை ரிப்பன் மாளிகையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மேயர் சைதை துரைசாமி கொடியேற்றினார். மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அரசு அலுவலகங்களில் விழாக்கோலம்

சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகம், வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் தி. . ஸ்ரீதர் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் கூடுதல் ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி, இணை ஆணையர் மு.ஜெயராமன், சமூகப் பாதுகாப்புத் திட்ட இயக்குர் ச. மலர்விழி உட்பட பலர் கலந்து கொண்டனர். சென்னை துறைமுகத்தில் அதன் தலைவர் அதுல்ய மிஸ்ரா தேசியக் கொடி ஏற்றினார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி தேசியக் கொடி ஏற்றினார்.

சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து கழகத்தின் தலைமை அலுவல கத்தில் இணை நிர்வாக இயக்குநர் வா.வரதராஜன் தேசியக் கொடி ஏற்றினார். காணும் பொங்கலன்று சிறப்பாக பணியாற்றி அதிக வருவாய் ஈட்டிய 8 கிளை மேலாளர்கள் உட்பட மொத்தம் 108 பேருக்கு பரிசும் சான்றிதழ்களும் அளிக்கப்பட்டன.

சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய வளாகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் வாரிய மேலாண்மை இயக்குநர் சந்திரமோகன் தேசியக் கொடி ஏற்றினார்.

சென்னை உருது மகளிர் நடுநிலை பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மாநகராட்சி மன்ற உறுப்பினர் சீமா பஷீர் கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றினார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சென்னையிலுள்ள தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் காயல் மஹபூப் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அண்ணாசாலை இணைப்பு வியா பாரிகள் சங்கத்தின் சார்பாக இலவச மருத்துவமுகாம் நடைபெற்றது. முகாமை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தொடங்கி வைத்தார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, சங்கரா நேத்ராலய கண் மருத்துவமனை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ரத்ததான முகாமும் கண் சிகிச்சை முகாமும் நடத்தப்பட்டது. இதில், வக்பு வாரிய முன்னாள் தலைவர் ஹைதர் அலி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆர்.சி. பால் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x