Published : 13 Sep 2016 07:20 AM
Last Updated : 13 Sep 2016 07:20 AM

நத்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சென்னை மேயர் சைதை துரைசாமி ஆகியோரின் வீடுகள் உட்பட தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக பதவி வகித்தவர் நத்தம் ஆர்.விஸ்வநாதன். இவரது வீடு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வேம்பார்பட்டி கிராமத்தில் உள்ளது.

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த வருமானவரித் துறை அதிகாரிகள் 10 பேர் 3 கார்களில் நேற்று காலை 7 மணி அளவில் விஸ்வநாதனின் வீட்டுக்கு சென்றனர். அப்போது விஸ்வநாதன் வீட்டில்தான் இருந்தார். சோதனை நடத்த வந்துள்ளதாக கூறிவிட்டு, வருமான வரித்துறை அதிகாரிகள், அவரது முன்னிலையிலேயே அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தியுள்ளனர். வீட்டில் உள்ள ஆவணங்களை கைப்பற்றிய அதி காரிகள் அவற்றை ஆய்வு செய்தனர். மாலை வரை சோதனை நீடித்தது.

அதே நேரத்தில் நத்தத்தில் உள்ள என்பிஆர் கல்லூரி, விஸ்வநாதனின் உறவினர்கள் வீடு, சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள விஸ்வநாதனின் வீடு ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

தனியார் மருத்துவமனை

மதுரையில் மேலூர் சாலையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவ மனை, அதே பகுதியில் உள்ள மருத்து வமனையின் நிறுவனர், துணைத் தலைவர் ஆகியோரது வீடு, ஒத்தக்கடை அருகே உள்ள மருத்துவமனையின் மேலாளர் வீடு, மதுரை நேதாஜி சாலையில் உள்ள நகைக்கடை ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். மருத்துவமனையில் காலை 8.30 மணிக்கு தொடங்கி 10.30 மணி வரையிலும், நகைக்கடையில் மதியம் வரையிலும் சோதனை நடந்துள்ளது. இதில் சில ஆவணங்களை விசா ரணைக்காக அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இதுகுறித்து வருமான வரித்துறை அலுவலர்கள் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

மேயரின் மகன் வீடு

சென்னை சேலையூர் அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் பண்ணை வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சில மாதங்களுக்கு முன்பு வெற்றி துரைசாமி, பல கோடி மதிப்புள்ள நிலம் வாங்கியதாகவும், அதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. வழிகாட்டு மதிப்புக்கு ஏற்ப முத்திரைத்தாள் வாங்கப்பட்டுள்ளதா, இந்த இடம் வாங்குவதற்கான பணம் எந்த வகையில் வந்தது என்பன தொடர்பாக விசாரணை நடத்தியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக, சென்னை தி.நகரில் உள்ள சைதை துரைசாமியின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

கோவையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் கீர்த்திலால் ஜூவல்லரியின் கிளைகள் சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் உள்ளது. இந்த நகைக் கடைகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கடையில் சோதனை நடத்திய அதிகாரிகள், முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தெரிகிறது.

வரி ஏய்ப்பு மற்றும் மோசடி உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சோதனை யின்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள பணம், ஆவணங்கள் அடிப்படையில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x