Published : 17 Jun 2016 11:02 AM
Last Updated : 17 Jun 2016 11:02 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கட் ஆப் மதிப்பெண் தரவரிசை பட்டியலில் 3 மாணவர்கள் முதலிடம்: 20-ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்

சென்னை

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மாணவர்கள் 3 பேர் 200-க்கு 200 ‘கட் ஆப்’ மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தனர். மருத்துவப் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு வரும் 20-ம் தேதி தொடங்குகிறது.

2016-17ம் ஆண்டில் மருத்துவம் (எம்பிபிஎஸ்) மற்றும் பல் மருத்துவ (பிடிஎஸ்) படிப்பில் சேர கடந்த மாதம் 26-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விற்பனை தொடங்கியது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடந்த 7-ம் தேதி கடைசி

தேதியாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 13-ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. இந்நிலையில், தரவரிசைப் பட்டியல் (மெரிட் லிஸ்ட்) நேற்று வெளியிடப்பட்டது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்தில் தரவரிசைப் பட்டியலை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டார். சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை சிறப்பு செயலாளர் செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஆர்.விமலா, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் ஜி.செல்வராஜன் உடன் இருந்தனர்.

இதில், கன்னியாகுமரி மாவட்டம், பளுகல் என்ற இடத்தைச் சேர்ந்த எம்.வி.ஆதித்யா மகேஷ் என்ற மாணவி, தஞ்சாவூர் மாவட்டம் செல்லாச்சி மண்டபத்தைச் சேர்ந்த வி.விக்னேஷ், திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த இ.ஜே.ஞானவேல் ஆகிய 3 பேரும் 200-க்கு 200 ‘கட் ஆப்’ மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்துமேட்டைச் சேர்ந்த கே.கார்த்திக், நாகர்கோவிலை அடுத்த தளவாய்புரத்தைச் சேர்ந்த ஜி.சுஜின்குமார், திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த பி.கே.அருணேஷ், தருமபுரி மாவட்டம் பாரதிபுரத்தைச் சேர்ந்த ஆர்.அக்சயா, திருச்சி மாவட்டம் சிறுதையூரைச் சேர்ந்த ஏ.அப்துல் ஷாரூக், நாமக்கல் மாவட்டம் நல்லகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த எஸ்.தீனேஷ்வர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஆகசிபள்ளியைச் சேர்ந்த வி.ஆர்த்தி ஆகிய 7 பேரும் 200-க்கு தலா 199.75 ‘கட் ஆப்’ மதிப்பெண் பெற்று ‘டாப் 10’ பட்டியலில் இடம் பிடித்தனர்.

பின்னர் டாக்டர் ஜி.செல்வராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள அரசு, சுயநிதி மற்றும் இஎஸ்ஐ என மொத்தம் உள்ள 28 மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர 2 ஆயிரத்து 853 இடங்களுக்கும், 18 கல்லூரிகளில் பல் மருத்துவப் படிப்பில் சேர ஆயிரத்து 55 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. மருத்துவப் படிப்பில் சேர மொத்தம் 26 ஆயிரத்து 17 பேர் விண்ணப்பித்தனர். இதில் 25 ஆயிரத்து 379 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் 3-ம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரது விண்ணப்பமும் அடங்கும்.

தரவரிசைப் பட்டியலில் 200-க்கு 200 ‘கட் ஆப்’ மதிப்பெண் பெற்று 3 பேர் முதலிடம் பிடித்தனர். 7 பேர் 199.75 மதிப்பெண் பெற்று ‘டாப் 10’ பட்டியலில் இடம் பிடித்தனர். 187 பேர் 199-க்கு மேல் கட் ஆப் மதிப்பெண் எடுத்துள்ளனர்.

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான முதல்கட்ட கலந்தாய்வு வரும் 20-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறும். முதல் நாளன்று மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு கலந்தாய்வு நடைபெறும். 2-ம்கட்ட கலந்தாய்வு ஜூலை மாதம் நடைபெறும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் கலந்தாய்வு நடைபெறும்.

கலந்தாய்வு நடைபெற குறைந்த அவகாசமே உள்ளதால் மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது. அதற்குப் பதிலாக மாணவர்கள் தங்களுக்கான அழைப்புக் கடிததத்தை www.tnhealth.org, www.tngov.in ஆகிய இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இதைத் தவிர, அழைப்புக் கடிதம் இல்லாமலும் மாணவர்கள் தங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் நாளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

இவ்வாறு டாக்டர் செல்வராஜன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x