Last Updated : 11 Sep, 2016 03:04 PM

 

Published : 11 Sep 2016 03:04 PM
Last Updated : 11 Sep 2016 03:04 PM

சென்னையிலிருந்து வாட்ஸ் அப் மூலம் விவசாயம்: வெள்ளரி சாகுபடியில் கணினி பொறியாளர் ஆர்வம்

சென்னையில் இருந்து ‘வாட்ஸ் அப்’ மூலம் விவசாயப் பணிகளை மேற்கொள்ளும், பொறியாளர் கோவிந்தராஜ் வெள்ளரி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகிறார்.

‘உழுதவன் கணக்கு பார்த்தால் உலக்கு கூட மிஞ்சாது’ என்பர். விவசாயத்தில் புதுமைகளை புகுத்தாமல் பழமையிலேயே உழன்று கொண்டிருக்கும் பாமர விவசாயிகளுக்கு வேண்டுமானால் ஒருவேளை இக்கணக்கு பொருந் தலாம். ஆனால், காலமாற்றத்துக்கு ஏற்றவாறு விவசாயத்தில் புதுமை களை புகுத்தி விவசாயத்துக்கு தொடர்பே இல்லாத பலர் சத்த மில்லாமல் சாதித்து வருகின்றனர்.

அதில் மதுரையை சேர்ந்த பொறி யாளரும் ஒருவர். பிஇ படித்து சென்னையில் பொறியாளராக பணி புரியும் மதுரை ஆரப்பாளையத் தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (32), நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வெள்ளரி சாகுபடி செய்து வருகிறார்.

திருமங்கலம் அருகே செட்டிபிள்ளையார் நத்தத்தில் தனது தந்தை வாங்கிய 2 ஏக்கரில் 50 சென்ட் பரப்பில் பசுமைக்குடில் அமைத்து வெள்ளரி மற்றும் பாகற்காய் விவசாயம் செய்கிறார். சென்னையில் பணியிடம் அமைந்தாலும், விடுமுறை நாட்களில் தனது தோட்டத்துக்கு வந்து விவசாயத்தை தீவிரமாக கவனிப்பதும், மற்ற நாட்களில் ‘வாட்ஸ் அப்’ மூலம் தகவல்களை பெற்று வேலை ஆட்கள் மூலம் விவசாயப் பணி செய்கிறார்.

இதுகுறித்து கோவிந்தராஜ் கூறியதாவது: எனது தந்தை ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி. நான் 2005-ம் ஆண்டில் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பிஇ முடித்தேன். சென்னையில் ஐடி நிறுவனத்தில் தற்போது பணிபுரிகிறேன். பிள்ளையார் நத்தத்தில் தந்தை 2 ஏக்கர் வாங்கி தென்னை விவசாயம் செய்து வந்தார். ஆனால், சரிவர பராமரிக்காததால் லாபம் கிடைக்கவில்லை. அந்த இடத்தில் நவீன தொழில்நுட்பத்தில் விவசாயம் செய்யத் திட்டமிட்டேன். இதற்காக திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கிருஷ்ணகிரிக்குச் சென்று 6 மாதம் களப்பணியில் புதிய தொழில்நுட்பங்களை கற்றேன்.

அதன்பின் எங்கள் நிலத்தில் 50 சென்ட்டில் பசுமைக்குடில் அமைத்து, வெள்ளரி விவசாயம் செய்தேன். அரசு தோட்டக்கலைத் துறை மூலம் கடன் பெற்றேன். ரூ. 8 லட்சம் மானியமாக வழங்கினர். ரூ. 24.68 லட்சத்தில் பசுமைக்குடில் அமைத்து, அதில் ‘மல்டி ஸ்டார்’ என்ற வகை உயர்ரக வெள்ளரி விவசாயம் செய்திருக்கிறேன். 2,300 செடிகள் நடவு செய்துள்ளேன். ஒரு கிலோ உற்பத்தி செய்ய ரூ. 10 முதல் ரூ.12 வரை செலவாகிறது. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 10 வரை லாபம் கிடைக்கிறது. ஒரு செடிக்கு தினமும் 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் தேவை. 120 நாட்களில் ஒரு செடி மூலம் 10 முதல் 15 கிலோ மகசூல் எடுக்கலாம். ஒரு வெள்ளரிக்காய் 160 கிராம் எடை கொண்டது.

தரையில் படர்ந்து விளையும் வெள்ளரியை விட, இதில் புரதச் சத்தும், நீர்ச்சத்தும் அதிகம். நட்சத்திர விடுதிகளில் புரூட் சாலட், ஊறுகாய்க்கு பெரிய அளவில் தேவை இருக்கிறது. கேரள மாநிலத்தில் 70 சதவீதத்தினர் இந்த வெள்ளிரிக்காயை விரும்பி சாப்பிடுகின்றனர். இதன் உற்பத்திக்கு அதிக செலவு என்றாலும், விவசாயத்தின் மேலுள்ள ஆர்வத்தால் பணியில் இருந்துக் கொண்டே விவசாயம் செய்கிறேன்.

உற்பத்தி செய்யும் வெள்ளரி உள்ளூர் விநியோகத்துக்கே போதுமானதாக உள்ளது. தற்போது, தண்ணீர் பற்றாக்குறையால் தண்ணீரை விலைக்கு வாங்குகிறேன். ஒருமுறை அமைக்கும் பசுமைக்குடில் 10 ஆண்டுகள் வரை தாங்கும். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூரையை ஆய்வு செய்து மாற்றலாம். இதே குடிலில், அடுத்த சீசனுக்கு கீரை வகைகளை அதிகம் பயரிட திட்டமிட்டுள்ளேன். மேலும் 2 ஏக்கரில் பாகற்காய் உட்பட நோய்களை தீர்க்கும் காய்களை உற்பத்தியும் செய்ய உள்ளேன்.

சென்னையில் பணிபுரிவதால் அடிக்கடி வர முடியாது. திண்டுக்கல் விவசாய தொழில்நுட்ப வல்லுநர் ரவிச்சந்திரன், எனது தோட்டத்தில் பணிபுரியும் வேளாண் கல்வி முடித்த இருவர் உட்பட விவசாயம் பற்றி தெரிந்த குறிப்பிட்ட சிலர் ‘வாட்ஸ் அப்’ குரூப்பில் இணைந்துள்ளோம். எனது ஊழியர்கள் தினமும் காலையில் பயிர் குறித்து ஆய்வு செய்து, ‘வாட்ஸ் அப்’ பில் தகவல் தெரிவிப்பர். நோய் தாக்குதல், தடுப்பு முறை, உரமிடுதல் பற்றி மொபைலில் பகிர்ந்துகொண்டு, அதற்கான நடவடிக்கையை மேற்கொள்கிறோம். நாட்டில் குறைந்துவரும் விவசாயத்தால் எதிர்காலத்தில் உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கும் என விவசாய வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

அதேவேளையில், படித்த, வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள் கவுரவம் பார்க்காமல் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயம் செய்தால் சாதனை படைக்கலாம். ஒரே பயிரை விவசாயம் செய்யாமல் குறுகிய வித்து கலப்பு சாகுபடியில் ஈடுபட வேண்டும். இதன்மூலம் காய்கறி, தானிய உற்பத்தியை அதிகரிக்கலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x