Published : 17 Mar 2014 10:29 PM
Last Updated : 17 Mar 2014 10:29 PM

மோடியை விமர்சிக்காதது ஏன்?- ஜெயலலிதாவுக்கு ஸ்டாலின் கேள்வி

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை விமர்சிக்காதது ஏன் என்று தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி ஏரல் மற்றும் திருவைகுண்டம் தொகுதியில் திமுக வேட்பாளர் இ.பெ.ஜெகனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசியது:

"இரண்டு நாட்களாக நான் ஒரு கேள்வியை ஜெயலலிதாவிடம் கேட்கிறேன். பதில் வரும் வரும் என்று பார்க்கிறேன், ஆனால் வந்தபாடில்லை. ஜெயலலிதா மத்திய காங்கிரஸ் அரசை விமர்சித்து பேசுகிறார். திமுகவை விமர்சிக்கிறார். தலைவர் கருணாநிதியை அரசியல் நாகரீகம் கூட கருதாமல் பேசுகிறார்.

நான் கேட்பது, எல்லா அரசியல் தலைவர்களையும், மற்றவர்கள் விமர்சித்து பேசுவது இயல்பு. ஆனால் அரசியல் நாகரீகத்தோடு கருத்துக்களை எடுத்துச் சொல்லும் தலைவரை கொச்சை படுத்தி பேசுகிறார். இதுபோல இவர் ஏன் மோடியை பற்றி கடந்த 15 நாள் பிரச்சாரத்தில் ஒருமுறை கூட விமர்சிக்கவில்லை?

இரு நாட்களுக்கு முன்னர் இங்கே வந்து பேசியபோது, நான் கரசேவையை ஆதரிப்பவர் இல்லை, என் மீது தேவையில்லாமல் பழி சுமத்துவதாகக் கூறியுள்ளார்.

பாபர் மசூதி இடித்த பிறகு நரசிம்ம ராவ் எல்லா மாநில முதல்வர்களின் கூட்டத்தை நடத்தினார். அதில் கலந்துகொண்ட ஜெயலலிதா, நான் கரசேவையை ஆதரிக்கிறேன் என்று பட்டவர்த்தனமாக பேசியுள்ளார். இது நமது எம்.ஜி.ஆரில் வெளியானது. இந்தச் செய்தியை நான் ஆதாரத்துடன் பேசுகிறேன். ஏனென்றால் எங்கள் தலைவர் எங்களை அப்படித்தான் வளர்த்து இருக்கிறார். இதை அவர் பொய் என மறுப்பதாக இருந்தால், என் மீது வழக்கு போட்டுக் கொள்ளட்டும். அதை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.

ஜெயலலிதா தேர்தலுக்காக மட்டும்தான் உங்களை சந்திக்கிறார். அவர் தரும் வாக்குறுதிகள் அப்பொழுது மட்டும்தான். ஆனால் இதுவரை எந்த வாக்குறுதிகளாவது நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வாக்குறுதிகளை தந்தார். அவற்றில் ஏதாவது நிறைவேற்றியிருக்கிறாரா இப்போதும் வருகிறார்.

பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். அப்படி பேசும்போது, இந்த இந்த திட்டங்களை நாங்கள் செய்திருக்கிறோம். இந்த சாதனைகள் எல்லாம் எங்கள் ஆட்சியில் நடந்திருக்கிறது என்று கூறமுடியுமா?

ஏன் சட்டமன்றத்தில் கூட 110 விதியின் கீழ் பற்பல அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். அதில் எந்த அறிவிப்புகளாவது திட்டமாகிறதா?

ஜெயலலிதாவின் ஆட்சியில், மக்கள் படும் துன்பங்கள் எண்ணிலடங்காதவை. ஏன் உங்கள் தொகுதியான திருவைகுண்டம் தொகுதியில் திருவைகுண்டம் அணை சரியாக தூர் வாரப்படாததால், 9 அடியாக இருக்க வேண்டிய நிலையிலிருந்து மாறி 1 அடிகூட தண்ணீர் தேங்காமல் மணல் மேடாக தான் காட்சி அளிக்கிறது. ஜெயலலிதாவின், அநியாய ஆட்சிக்கு, அராஜக ஆட்சிக்கு கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள்.

இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பவர் தலைவர் கருணாநிதி. அதற்கு எடுத்துக்காட்டாக, இந்த தேர்தலில், வேலூரில் போட்டியிடும் அப்துல் ரஹ்மான், ராமநாதபுரத்தில் கழகத்தின் சார்பில் முகம்மது ஜலீல், மயிலாடுதுறையில் மமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஹைதர் அலி, புதுச்சேரியில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நாஜிம் ஆகியோர் கழக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களாக உள்ளனர்.

நீங்கள் போராடுவது 5% ஒதுக்கீடு கேட்டு, ஆனால் தலைவர் தலைமையிலான, கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 10% இஸ்லாமிய சமுதாயத்தினர் போட்டியிடுகின்றனர். ஆனால் அதிமுகவில் ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே போட்டியிடுகிறார். இதில் இருந்தே இஸ்லாமிய சமுதாயத்துக்கு ஆதரவாக இருப்பது திமுக மட்டுமே என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்" என்றார் மு.க.ஸ்டாலின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x