Published : 21 Feb 2017 04:18 PM
Last Updated : 21 Feb 2017 04:18 PM

ஜெ. ஆட்சிக்காலம் தமிழ்மொழி வளர்ச்சிக்கு பொற்காலம்: முதல்வர் வாழ்த்து

ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம் தமிழ்மொழி வளர்ச்சிக்கு பொற்காலம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உலக தாய்மொழி தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

உலக தாய்மொழி தினத்தையொட்டி இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ''3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மக்கள் அறிவியல் மனப்பான்மையுடன் செயல்பட்டதை சங்க இலக்கியங்கள் மூலம் நாம் அறிகிறோம். இச்சங்க இலக்கியங்கள் தோன்றிய காலத்தை இன்றைய வரையில் நம்மால் வரையறுக்க முடியவில்லை காரணம் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ்க் குடி என்பதால் உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாகவே நம் மொழி இருந்திருக்கிறது.

தமிழ் இலக்கியத்தில் அறம் என்னும் சொல் அனைத்து இலக்கியங்களிலும் பயின்று வந்திருப்பதன் மூலம் நம் மொழி அறநெறி மொழி என்றே உலகோர் உரைக்கின்றனர். தமிழரின் இத்தகு சிறப்புகள் யாவும் தற்போது அகழாய்வுகள் மூலம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்தது என்று மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. நவலோகம், நவமணிகள், நவபாசானம் இவற்றை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தி வந்தவன் தமிழன் என்பதற்கு பற்பலச் சான்றுகள் இன்றும் கிடைத்து வருகின்றன.

உலகத்தில் முதன்முதலாக ‘மாந்தன் பிறந்தது மறைந்த குமரிக் கண்டமே’ என்று மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் நிறுவியதன் மூலம் தமிழரின் தொல்குடி சிறப்பு விளங்குகிறது. பதினெண்கீழ்க்கணக்கு பதினெண்மேற்கணக்கு பக்தி இலக்கியங்கள் எல்லாம் தமிழ் மொழியின் சிறப்பையும் பெருமையையும் கூறும் பாங்கு உலக மொழிகளிலேயே தமிழ் மொழியில் மட்டுமே மானிடத்தின் பெருமையை எவ்வித சார்பும் இல்லாமல் உரைத்திருப்பதை நாம் காணலாம். உலக அளவில் மனிதன் பேசும் மொழிகளில் உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மாற்றங்களை ஏற்படுத்தும் மொழி தமிழ் மொழியே என்று உலக மொழியியல் வல்லுநர்கள் ஆய்ந்து கண்டறிந்துள்ளனர்.

இவ்வாறு பல்வேறு சிறப்பு கூறுகளையும் தன்னேரில்லாக் கட்டமைப்பும் கொண்ட நம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோடிக்கணக்கான ரூபாய் செலவில் எண்ணற்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்தியதை உலகத் தமிழர்கள் அறிவார்கள்.

இந்த நிலையில் யுனெஸ்கோ நிறுவனம், உலகத் தாய்மொழி நாளாக பிப்ரவரி 21-ஐ அறிவித்ததன் வாயிலாக இன்றைக்கு நாமும் ஈராயிரம் ஆண்டுகளாகச் சிறப்புமிக்க தமிழ் மொழியை இந்த நன்னாளிலே போற்றிக்கொண்டிருக்கிறோம். இந்த நாளை இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழக அரசின் சார்பில் உலகத் தாய்மொழி நாள் கொண்டாட ஆணையிட்டு ரூபாய் 5 லட்சம் ஒதுக்கியவர் ஜெயலலிதா.

உலகத் தாய்மொழி கொண்டாடுகின்ற இந்த வேளையில் நம் மொழியை பேணிப் பாதுகாக்கவும் போற்றி வளர்க்கவும் நாம் ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும். ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம் தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பொற்காலமாகும். இதுவரை யாரும் செய்யாத அளவுக்கு தமிழ் வளர்ச்சிக்காக தமிழ்நாடு வரலாற்றில் மாபெரும் சாதனையாக ரூ.200 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கி பற்பல திட்டங்களை நிறைவேற்றி வருகிற அரசு ஜெயலலிதாவின் ஆசிபெற்ற அரசாகும். எனவே இந்நாளில் அன்னைத் தமிழை அறிவியல் தமிழாக, ஆன்மிகத் தமிழாக, அறநெறித் தமிழாக வளர்த்தெடுக்க நாம் உறுதியேற்க வேண்டும்'' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x