Published : 23 Nov 2015 02:05 PM
Last Updated : 23 Nov 2015 02:05 PM

தமிழக வெள்ள நிவாரண உதவிகளுக்கு ரூ.940 கோடி: பிரதமர் மோடி ஒதுக்கீடு

தமிழகத்தின் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு முதல் கட்டமாக ரூ.939.63 கோடியை ஒதுக்கியுள்ளது. சீரமைப்புப் பணி களுக்கு ரூ.8,481 கோடி வழங்க வேண்டும் என்றும் உடனடியாக ரூ.2 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ள நிலையில், இந்த நிதியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சில நாட்களாக கொட்டித் தீர்த்த மழையால் கடுமை யான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா, வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வும் மத்திய அரசு உடனடியாக பேரிடர் நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்றும் மத்திய குழுவை அனுப்பி சேதத்தை ஆய்வு செய்யவும் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, தமிழகத்தில் மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், அறிக்கை தயாரித்து தமிழக அரசிடம் அளித்தனர். இந்த அறிக் கையை மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று காலை அனுப்பி வைத்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமும் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 10-ம் தேதி தமிழக கடற் பகுதியில் மரக்காணத்தை தாக் கியது. இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்களான கடலூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூரில் அதிகனமழை பெய்தது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் அனுப்பப்பட்டு, மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தமிழக உள்ளாட்சித் துறை, வருவாய், காவல், தீயணைப்பு மற்றும் பொதுப்பணித் துறையின ருடன் தேசிய பேரிடர் மீட்புக் குழு, ராணுவம், விமானப்படை, கடற்படை, கடலோரகாவல் படை யினர் உள்ளிட்டோரும் மீட்புப் பணி யில் ஈடுபட்டனர். இந்த மழை யால் 4 லட்சத்துக்கும் மேற்பட் டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர் களுக்கு உணவு, நிவாரணம் வழங் கப்பட்டது. கடந்த 9-ம் தேதி நெய்வேலியில் மட்டும் 43.7 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும், இதற்கு முன் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய் துள்ளது.

வடகிழக்கு பருவமழைக்கு தமிழகத்தில் 169 பேர் உயிரிழந் துள்ளனர். விவசாய நிலங்கள், சாலைகள், பாலங்கள், மழைநீர் கால்வாய்கள், மின் விநியோக அமைப்புகள் பல பகுதிகளில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதை உடனடியாக சமாளிக்க நிவாரண உதவியாக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது. உடனடி நிவாரணம் மற்றும் கட்டமைப்பு களை சீரமைக்க இந்தத் தொகை போதாது. உடனடி மீட்பு மற்றும் நிவாரணம், தற்காலிக மற்றும் நிரந்தர கட்டமைப்பு மறுசீரமைப்புக்காக முதல்கட்டமாக ரூ.8,481 கோடி தேவைப்படுகிறது.

மிகக்கடுமையான பாதிப்பு களை சீரமைக்க தேவைப்படும் நிதி, மாநில பேரிடர் நிவாரண நிதியைவிட அதிகம் என்பதால், விரைவில் அந்த நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். மேலும், வடகிழக்கு பருவமழை காலம் முடிய இன்னும் பல வாரங்கள் உள்ளன. வரும் காலங்களில் இன்னும் பல வானிலை நிகழ்வுகள் உருவாகி அழிவுகளை ஏற்படுத்தலாம். முழுமையான சேத அறிக்கையை தயாரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

எனவே, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழகத்துக்கு உடனடியாக ரூ.2 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும். தமிழக வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய குழு ஒன்றை அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்திருந்தார்.

பிரதமர் உத்தரவு

முதல்வரின் கடிதம், வெள்ள சேத அறிக்கையை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன் தலைமையிலான குழுவினர், பிரதமர் அலுவலகத்தில் நேற்று காலை அளித்தனர். இதையடுத்து, தமிழக வெள்ள நிவாரணப் பணிக்கு மத்திய அரசின் சார்பில் ரூ.939 கோடியே 63 லட்சம் வழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் வெள்ள பாதிப்புகளை கணக்கிட மத்திய குழு ஒன்று அனுப்பப்படும். அந்த குழு சமர்ப்பிக்கும் அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழக நிவாரணப் பணி களுக்காக மத்திய அரசு ரூ.939.63 கோடி விடுவித்துள்ளதை தமிழக அரசும் உறுதி செய்துள்ளது. சேதத்தை முழுமையாக மதிப்பீடு செய்து கூடுதல் நிதியை பரிந்து ரைக்க விரைவில் ஒரு குழுவை மத்திய அரசு அனுப்ப உள்ளதாக வும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மோடி வருகிறார்?

ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா திரும்பியதும் தமிழக அரசு அனுப்பி யுள்ள வெள்ள சேத அறிக்கையை ஆய்வு செய்வார் என்று கூறப்படு கிறது. இதையடுத்து, வெள்ள சேதங் களை பார்வையிட பிரதமர் தமிழகம் வரவும் திட்டமிட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘‘பிரதமர் மோடி, சிங்கப்பூர் பயணத்தை முடித்துவிட்டு 25-ம் தேதி (நாளை) டெல்லி வருகிறார். அவர் தமிழகம் வருவது குறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தமிழக வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவது குறித்து இந்தியா வந்த பிறகு அவரே முடிவு செய்வார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x