Published : 13 Dec 2016 08:10 AM
Last Updated : 13 Dec 2016 08:10 AM

கொந்தளித்தது கடல்.. கொட்டித் தீர்த்தது மழை.. கோரத் தாண்டவம் ஆடியது ‘வார்தா’ புயல்..: தலைவிரி கோலத்தில் தலைநகர்!

பகலிலேயே இருளில் மூழ்கியது சென்னை: மின்சாரம் துண்டிப்பு; அதிக உயிரிழப்பு தவிர்ப்பு

சூறைக் காற்றின் பேயாட்டத்தில் பெயர்ந்தன மரங்கள், மின் கம்பங்கள்; போக்குவரத்து பாதிப்பு

முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் காரணமாக வீடுகளிலேயே மக்கள் முடங்கியதால் நிம்மதி

சென்னையை மணிக்கு 110 கிமீ வேகத்தில் தாக்கிய ‘வார்தா’ புயலின் கோரத்தாண்டவத்தால் தலைநகரம் தலைவிரிகோல மானது. சூறைக் காற்றாலும், கொட்டித் தீர்த்த மழையாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, படிப்படியாக வலுப்பெற்று, 4 நாட்களுக்கு முன்பு ‘வார்தா’ புயலாக உருமாறியது. தமிழகத்தை நோக்கி நகரத் தொடங்கிய இந்த புயல், பின்னர் அதிதீவிர புயலாக மாறியது.

இந்த புயல் கரையை நெருங்க நெருங்க ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் லேசான காற்றும், மழையும் தொடங்கியது. நேற்று காலையில் காற்றின் வேகமும், மழையும் மேலும் அதிகமானது. சுமார் 12 மணி அளவில் உச்சநிலையை அடைந்து நகரின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்று தீவிர மாக வீசியது. கடல் கொந்தளிப் புடன் காணப்பட்டது. கூடவே கனமழையும் கொட்டித் தீர்த்து.

இந்த புயலால் சாலையோரங் களில் இருந்த 3,300-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தன. இதேபோல் சென்னை, காஞ்சி, திவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் 3 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அடியோடு பெயர்ந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து கடுமை யாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் வெவ்வேறு பாதைகளில் திருப்பி விடப்பட்டன.

நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் மரம் விழுந்து சிக்கியுள்ள 2 அரசுப் பேருந்துகள். | படம்: க.ஸ்ரீபரத்

விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியா ளர்கள், தீயணைப்புப் படை வீரர்கள், போலீஸார் ஈடுபட்டனர். இயந்திரங்கள் மூலமாக மரங்களை அறுத்து, ஜேசிபி இயந்திரங்கள் மூலமாக அகற்றி, உடனடியாக சீரான போக்குவரத்துக்கு வழி வகை செய்தனர்.அவர்களுடன் உள்ளூர் இளைஞர்களும் களமி றங்கி மரங்களை அகற்றினர். போக்குவரத்தையும் ஒழுங்குப் படுத்தினர்.

இந்தப் புயல் உருவான உடனேயே அரசின் வருவாய்த் துறை முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக பல்வேறு துறை அதிகாரி களை அழைத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியது. இதன்மூலம் போதிய மீட்புக் குழுக்களை ஏற்படுத்தவும், தேசிய பேரிடர் மீட்பு படைகளைத் அழைத்து தயார் நிலையில் நிறுத்தவும், நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்கவும், அவர் களுக்கு தேவையான உணவை வழங்கவும் உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தியது.

இதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியிலும் அந்தந்த மண்டலங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளும் முடுக்கி விடப்பட்டனர். அரசும், பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று முன்கூட்டியே எச்சரிக்கை அறிவிப்பும் வெளி யிட்டது. நீண்ட நேரம் கெடாமலிருக்கும் உணவுகளை சமைத்து வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தாழ்வான பகுதிகளில் இருந்த மக்களும் நிவாரண முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டனர். இதன் காரணமாக, புயல் சென்னையை புரட்டிப் போட்ட நிலையில், மக்கள் வீடுகளிலே முடங்கினர். முன்கூட் டியே பொதுமக்கள் காய்கறிகள், பால், கேன் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி இருப்பில் வைத்துக் கொண்டனர். இதனால் இந்த பேரிடரால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட வில்லை.

சென்னையில் 30 முகாம்களில் 600 பேர் தங்க வைக்கப் பட்டிருந்தனர். அவர்களுக்கு அம்மா உணவகங்கள் மூலமாக உணவு வழங்கப்பட்டது. இப்பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அத்துறை செயலர் க.பணீந்திரரெட்டி, மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக் குமார், மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், மேற்பார்வை அலுவலர் காக்கர்லா உஷா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இருளில் மூழ்கியது

முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சூறைக் காற் றுடன் மழை பெய்த நிலையில், 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மின் கம்பங்கள் விழுந்த நிலையிலும், பல இடங்களில் மின் பெட்டி அருகில் நீர் தேங்கிய நிலையிலும், மின்சாரம் தாக்கி ஏற்படும் உயிர்ப் பலிகள் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் தமிழகத்தில் புயல் காரணமாக 4 பேர் பலியாகியுள்ளனர். 24 குடிசைகள் சேதமடைந் துள்ளன.

ஆழ்வார்பேட்டை நாகேஸ்வர ராவ் பூங்கா அருகே மாடியிலிருந்து தெருவுக்கு வந்த குடிநீர் தொட்டி. | படம்: க.ஸ்ரீபரத்

மேலும் கருமேகங்கள் சூழ்ந்து, சூறைக் காற்றுடன் கனமழை பெய்து வந்ததாலும், நகர் முழுவதும் வெளிச்சம் குறைந்ததாலும், சென்னை பகலிலேயே இருளில் மூழ்கியது.

முதல்வர் வேண்டுகோள்

இதனிடையே முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘வார்தா புயல் தொடர்பாக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்’ என கேட்டுக் கொண்டுள்ளார்.

235 புகார்கள் பதிவு

சென்னையில் மரம் மற்றும் மின் கம்பங்கள் விழுந்தது, நீர் தேங்கியது தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 235 புகார்களை மாநகராட்சி பெற்றுள்ளது. இதில் 203 புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

புயல் கரையைக் கடந்தது தொடர் பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:

இந்த புயல் மேற்கு பகுதி பழவேற்காடு அருகே கரையைக் கடந்தது. அதன் மையப் பகுதி மாலை 3.30 மணி அளவில் சென்னை துறை முகம் அருகே கரையைக் கடந்தது. கிழக்கு பகுதி 6.30 மணி அளவில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. காற்றின் தாக்கம் ஸ்ரீஹரிகோட்டா மற்றும் மரக் காணம் ஆகியவற்றுக்கு இடைப் பட்ட பகுதி வரை இருந்தது. புயல் கரைகடந்தாலும் நாளை (இன்று) மாலை வரை மழை நீடிக்கும்.

சூறைக் காற்றில் சிக்கி சேதமுற்ற ராயபுரம் அருகே உள்ள பெட்ரோல் நிலையம். | படம்: ம.பிரபு

காலை 8.30 மணிக்கு எடுக்கப்பட்ட மழை அளவின்படி, சென்னை மீனம்பாக்கத்தில் 18 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. காலை 8.30 முதல் மாலை 4.30 மணி வரை செம்பரம்பாக்கத்தில் 170 மிமீ, பூந்தமல்லியில் 130 மிமீ, அம்பத்தூரில் 121 மிமீ, திருவள்ளூரில் 116 மிமீ, சோழ வரத்தில் 106 மிமீ, திருவாலங் காட்டில் 97 மிமீ, செங்குன்றத்தில் 93 மிமீ, திருத்தணியில் 93 மிமீ, ஊத்துக்கோட்டையில் 88 மிமீ, பொன்னேரியில் 74 மிமீ, பூண்டியில் 64 மிமீ, தாமரைப்பாக்கத்தில் 52 மிமீ, பெரும்புதூரில் 153 மிமீ, செங்கல்பட்டில் 65 மிமீ, திருக்கழுகுன்றத்தில் 50 மிமீ, காஞ்சிபுரத்தில் 45 மிமீ, மதுராந்த கத்தில் 45 மிமீ, அரக்கோணத்தில் 92 மிமீ, காவேரிபாக்கத்தில் 19 மிமீ, திண்டிவனத்தில் 16 மிமீ, மரக்காணத்தில் 13 மிமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே கடந்த 22 ஆண்டுகளுக்கு பிறகு, இது போன்ற மோசமான புயலை சென்னை சந்தித்துள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x