Published : 30 May 2017 12:32 PM
Last Updated : 30 May 2017 12:32 PM

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பணியிடங்களில் 4% இடஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

அரசு பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீட்டை 4 % உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே 3% இட ஒதுக்கீடு இருந்த நிலையில் தற்போது அது 1 % உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த இட ஒதுக்கீட்டில் பல்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கான உள் ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில்

"மாற்றுத்திறனாளிகளின் நலனில் அக்கறைக் கொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, மாற்றுத் திறனாளிகளை அரசு பணியிடங்களில் பணி அமர்த்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

1981-ஆம் ஆண்டிலிருந்தே மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இடஓதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அவற்றில் பார்வை குறைபாடுடையோர், செவித்திறன் குறைபாடுடையோர் மற்றும் கை, கால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர்களுக்கு தலா 1 சதவீதம் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்பெற்று வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-ன் படி, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணியிடங்களில் 4 சதவீதம் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படவேண்டும். அதனடிப்படையில், ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வந்த 3 சதவீதம் இடஒதுக்கீட்டினை, 4 சதவீதமாக தமிழக அரசு பணிகளிலும் உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

அதன்படி, மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு பணிகளில் செய்யப்படவிருக்கும் 4 விழுக்காடு ஒதுக்கீட்டில் பார்வை குறைபாடுடையோர்க்கு 1 சதவீதமும், செவித்திறன் குறைபாடுடையோர்க்கு 1 சதவீதமும், கை, கால் பாதிக்கப்பட்டோர் (மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், குள்ளத்தன்மையுடையோர், அமில வீச்சினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் உட்பட) 1 சதவீதமும், புறஉலகு சிந்தனையற்றோர், அறிவுசார் குறைபாடுடையோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் மேலே முதல் வரையிலுள்ள பிரிவுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளில் பாதிக்கப்பட்டோர்களுக்கு (செவித்திறன் குறைபாடு மற்றும் பார்வைத்திறன் குறைபாடு ஆகிய இரண்டாலும் பாதிக்கப்பட்டோர் உட்பட) 1 சதவீதமும் என ஒதுக்கீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான அரசாணைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த 4 சதவீத இடஒதுக்கீடானது அனைத்து அரசுப் பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், அரசு உள்ளாட்சி அமைப்புகள், அரசின் நிதி உதவி பெறும் அமைப்புகள் ஆகியவற்றிற்குப் பொருந்தும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x