Published : 24 Feb 2017 11:11 AM
Last Updated : 24 Feb 2017 11:11 AM

அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் சரிவு: 2 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

அமராவதி அணை நீர்மட்டம் குறைந்து வருவதால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 40 க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன் மூலம் பல லட்சம் மக்கள் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் கைகொடுக்காததால், அணையின் நீர்மட்டம் அதிகரிக்கவில்லை. கேரளத்தில் பெய்த மழையால் ஓரளவு அமராவதி அணைக்கு நீர் வரத்து கிடைத்தது.

கடந்த சில நாட்களுக்கு முன் கரூர் பகுதியில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு காரணமாக அணையில் இருந்து ஓரிரு நாள் மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. அவ்வாறு திறக்கப்பட்ட நீரும் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு சென்று சேரவில்லை என சின்னதாராபுரம் பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அணையில் உள்ள மீன்களை பாதுகாக்கும் வகையில் தற்போது கிடைமட்ட நீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அணையை ஒட்டியுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கடுமையான வறட்சி நிலவுகிறது. அதனால் குடிநீருக்காக காட்டுயானைகள், காட்டெருமைகள், சிறுத்தைகள், மான்கள் அதிக அளவில் அணையை நாடி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

அணையின் நீர்மட்டம் குறைந்ததால், நீரின் தன்மை பச்சை நிறமாக மாறிவிட்டது.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘அணையின் உயரம் 90 அடி. நேற்றைய நிலவரப்படி அணையில் 12 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஆனால் அதில் பெரும்பகுதி வண்டல் மண் உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை. அணையில் உள்ள உயிரினங்கள் வாழ்வதே கேள்விக்குறியாகி உள்ளது. பருவமழை பெய்தால் மட்டுமே அணையின் நீர்மட்டம் உயரும்’ என்றார்.

அமராவதி ஆற்றின் மூலம் பயன்பெற்று வரும் மடத்துக்குளம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு திருமூர்த்திமலை கூட்டுக்குடிநீர் திட்டமும், தாராபுரம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. தற்போதைய சூழலில் இத்திட்டங்கள் மட்டுமே அப்பகுதி மக்களுக்கு கைகொடுத்து வருவதால் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடிகிறது என்கின்றனர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள்.

இதே நிலை நீடித்தால் குடிநீர் விநியோகிப்பதில் பெரும் சிக்கல் ஏற்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x