Published : 17 May 2017 08:03 AM
Last Updated : 17 May 2017 08:03 AM

அதிமுகவின் பலவீனத்தை பயன்படுத்தி திமுக முன்வரிசைக்கு வர நினைத்தால் விடமாட்டோம்: ஆர்எஸ்எஸ் - பாஜக கூட்டணியின் திரைமறைவு திட்டங்கள்

அதிமுக பலவீனப்பட்டுக் கிடப் பதை சாதகமாகப் பயன்படுத்தி திமுக முன்வரிசைக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக தற்போது அந்தக் கட்சிக்கு எதிராகவும் பாஜக அஸ்திரங் களை வீச ஆரம்பித்திருக்கிறது.

ஜெயலலிதா மரணத்தை அடுத்து ஓபிஎஸ் மூலமாக அதிமுகவை இரண்டாக்கியது பாஜக. சேகர் ரெட் டியின் வாக்குமூலத்தை வைத்தே ஓபிஎஸ்ஸை தன்வசப்படுத்தி வைத்திருக்கும் பாஜக, தமிழக முதல்வராகத் துடித்த சசிகலாவின் கனவைத் தகர்த்து அவரை சிறைக்கு அனுப்பியது.

அவரால் அதிமுக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப் பட்ட டிடிவி தினகரனை திஹார் சிறைக்கு அனுப்பியது. இரட்டை இலை சின்னம் முடக் கம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறை சோதனை என ஓபிஎஸ் அணிக்கு சாதகமான காரியங்களை அடுத்தடுத்து அரங்கேற்றியது.

அணி திரட்டும் ஸ்டாலின்

மேலும் சில அமைச்சர்களின் வருமான விவகாரங்களை கையில் வைத்துக்கொண்டு, எடப்பாடி பழனிசாமி அணியையும் தங்களுக்கு தலையாட்டும் வகையில் தயார் படுத்திவிட்டது மத்திய பாஜக அரசு. அதிமுகவின் இரு அணிகளையும் தங்கள் வசப்படுத்தியவர்கள் அடுத்ததாக திமுக பக்கம் திரும்பி இருக் கிறார்கள்.

‘பாஜக மதவாத கட்சி’ என்று அழுத்தமாக முழங்க ஆரம்பித் திருக்கும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழாக்கு பாஜக, அதிமுகவுக்கு அழைப்பு இல்லை என்று கூறிவிட்டார். அதேநேரம், வைரவிழா நிகழ்வை வைத்து தேசிய அளவில் மதசார் பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை முன்னெடுக்கிறார் ஸ்டாலின்.

1989-ல் முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், பிஜு பட் நாயக், ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள் ளிட்டவர்களை ஒருங்கிணைத்து வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணியை உருவாக்கியதில் கருணாநிதிக்கு பெரும் பங்கு உண்டு. அதுபோல இப்போது, வைரவிழாவை வைத்து தேசிய அளவில் ஓர் அணியை உருவாக்க திட்டமிடுகிறார் ஸ்டாலின்.

ஏற்கெனவே, இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட விவகாரங்களால் திமுக மீது கோபத்தில் இருக்கும் பாஜகவை ஸ்டாலினின் இந்த முயற்சி மேலும் கொதிப்பாக்கி இருக்கிறது. இதையடுத்தே இப்போது திமுகவை தமிழக பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கி இருக் கிறார்கள்.

ஆர்எஸ்எஸ் ஆலோசனை

மேற்கு வங்கம் மற்றும் தமிழ கத்தின் மீது தனது பார்வையை தீவிரப்படுத்தியிருக்கும் பாஜக, அடுத்த தேர்தலில் தமிழகத்தில் வலுவான ஓர் இடத்தை தக்க வைக்கத் திட்டமிடுகிறது. இதற் கான பூர்வாங்கப் பணிகளை ஆர்எஸ்எஸ் அமைப்பு முன் கூட்டியே தொடங்கிவிட்டது. 3 மாதங்களுக்கு முன்பு தேனியில் நடந்த ஆர்எஸ்எஸ் ஆலோசனைக் கூட்டத்துக்கு தமிழக பாஜக முக்கியத் தலைவர்கள் சிலரும் அழைக்கப்பட்டனர்.

அப்போது, ‘தொலைக்காட்சி விவாதங்களில் காரசாரமாக பேசினாலே கட்சி வளர்ந்து விடும் என நினைத்துக் கொண்டிருக் காமல் களத்துக்குப் போய் கட்சி வேலை பாருங்கள்’ என தமிழக பாஜக தலைவர்களிடம் சற்று கடுமையாகவே சொல்லி இருக்கிறார்கள் நாக்பூரில் இருந்து வந்திருந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள்.

இதுகுறித்து திமுகவின் முக்கியப் பொறுப்பாளர் ஒருவர் கூறியதாவது:

பாஜகவுக்கு தற்போது தமிழகத் தில் இருக்கும் பலமான ஒரே எதிரி திமுகதான். தேனியைத் தொடர்ந்து கோவையிலும் ஆர்எஸ்எஸ் கூட்டம் போடப்பட்டது. இதற்கும் ஒன்றிய அளவில் பாஜக நிர்வாகிகள் அழைக்கப்பட்டனர். வழக்கத்துக்கு மாறாக தங்களது கூட்டத்துக்கு பாஜகவினரை ஆர்எஸ்எஸ் அழைப்பதின் பின்னணியில் அசாதாரண அரசியல் இருக்கிறது. ஆளும் அதிமுக அரசை வருமானவரித் துறை சோதனை மூலம் மிரட்டிக் கொண்டிருக்கும் பாஜக, திமுகவின் பலத்தையும் சரித்தால்தான் தங்களால் தமிழகத்தில் காலூன்ற முடியும் என கணக்கு போடுகிறது.

முக்கிய புள்ளிகளை இழுக்க...

இதற்காக, வேதாரண்யம் முன்னாள் திமுக எம்எல்ஏ வேதரத்தினத்தை இழுத்ததுபோல கட்சியில் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் மக்கள் செல்வாக்குள்ள திமுக புள்ளிகளை பாஜகவுக்கு இழுக்கும் வேலைகளை ஆர்எஸ்எஸ்காரர்கள் மறைமுக மாக மேற்கொண்டு வருகின்றனர் திமுகவில் மட்டுமல்லாது அனைத் துக் கட்சிகளிலும் உள்ள செல்வாக்கான நபர்கள், சினிமா நட்சத்திரங்கள், சாதிய தலைவர்கள் என பல பக்கமும் வலை வீசுகிறது பாஜக. ஆனால், நெருக்கடி நிலையின்போதே அசைக்க முடியாத திமுகவை இதுபோன்ற நடவடிக்கைகளால் எல்லாம் பலம் குன்றச் செய்துவிடமுடியாது.

இவ்வாறு அந்தப் பொறுப்பாளர் கூறினார்.

அனுமதிக்கக் கூடாது

திமுகவின் பலத்தை சரிக்க திட்டமிடுகிறதா பாஜக? என்ற கேள்விக்கு பதிலளித்த அக்கட்சி யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, ‘‘அதிமுக பலவீனமாக இருப்பதைப் பயன்படுத்தி திமுக தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வது நியாயமில்லை என்பது எங்களது கருத்து. விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்தவர்கள் இப்போது, நாங்கள் புத்தர், புனிதர் என்று சொல்லிக் கொள் கின்றனர்.

ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ஒரு பைசா குறைக்கச் சொன்னதுக்காக விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இப்போது, விவசாயிகளின் தோழனாக வேஷம் போடுகின்றனர். எனவே, அதிமுக பலவீனப்பட்டுக் கிடப் பதை எந்தவிதத்திலும் திமுக பயன்படுத்திக்கொள்ள அனுமதிக் கக் கூடாது. அரசியல் ரீதியாக இதை முறியடிப்பதற்கான வேலை களை கட்டாயம் பாஜக செய்யும்’’ என்றார்.

இப்படியும் செய்யலாம்

ஜூலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் முடியும்வரை அதிமுக ஆட்சியை நித்திய கண்டம் பூரண ஆயுளாக தொடர அனுமதிக்கும் மத்திய பாஜக அரசு, அதற்குப் பிறகு 355-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி சட்டப்பேரவையை முடக்கிவைக்கக் கூடும். (அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக ஒரு மாநில அரசு செயல்படும் பட்சத்தில் அதுகுறித்து 355-வது சட்டப்பிரிவின்படி அந்த மாநில அரசுக்கு மத்திய அரசு கட்டளை தாக்கீது அனுப்ப முடியும். இப்படி கட்டளை தாக்கீது அனுப்பிய பிறகு அந்த மாநில சட்டப்பேரவையை முடக்கி வைக்கவும் அதைத் தொடர்ந்து 356-வது சட்டப் பிரிவின்படி ஆட்சியை கலைக்கவும் மத்திய அரசால் முடியும்).

சட்டப்பேரவை முடக்கப்பட்டால் ஆளுநர் கையில் அதிகாரம் இருக்கும். ஆளுநர் ஆட்சியில் அரசு அதிகாரிகள், அலுவலகங்கள், அரசியல்வாதிகள் என பலதரப்பட்ட இடங்களில் சோதனைகள் நடத்தி முறைகேடுகள் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படும். சட்டம் - ஒழுங்கு உள்ளிட்ட விவகாரங்களில் சிறப்புக் கவனம் செலுத்தப்படும். இந்த நடவடிக்கைகளின் மூலம் மக்கள் மத்தியில் பாஜகவின் இமேஜ் உயரும். அதன்பிறகு, 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி சட்டப்பேரவையை கலைத்துவிட்டு தேர்தலை கொண்டு வரலாம். இதெல்லாம் எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால், தமிழக பாஜக வட்டாரத்தில் இப்படியொரு பேச்சும் உலாவருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x