Last Updated : 24 Jan, 2017 08:07 AM

 

Published : 24 Jan 2017 08:07 AM
Last Updated : 24 Jan 2017 08:07 AM

சென்னையில் காவல் நிலையம், வாகனங்களுக்கு தீ வைப்பு: வெடித்தது வன்முறை; முடிந்தது போராட்டம்

போலீஸார் தடியடி - கண்ணீர் புகை குண்டு வீச்சு - போக்குவரத்து முடங்கியதால் மக்கள் அவதி

மெரினாவில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்கள் பெயரில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டும் வீசப்பட்டது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரினாவில் லட்சக்கணக் கானோர் போராட்டம் நடத்தி வந்தனர். சுமார் 10 லட்சம் இளைஞர்கள் ஒரே இடத்தில் கூடியிருந்த போதிலும் வன்முறை இல்லாமல், போக்குவரத்துக்கு இடையூறு செய்யாமல், பெண்களிடம் சிறு அத்துமீறல்கூட நடக்காமல் மிக அமைதியாக, சுய கட்டுப்பாட்டுடன் போராட்டம் நடந்தது. இதனால் இளைஞர்களின் போராட்டம் அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அவசரச் சட்டத்தை தமிழக அரசு கடந்த 21-ம் தேதி கொண்டுவந்தது. மேலும், சட்டப்பேரவைக் கூட்டத்தில் நிரந்தர சட்டம் இயற்றப்படும் என்றும் அரசு அறிவித்தது. இதை போராட்டம் நடத்திய இளைஞர்களும், மாணவர்களும் ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால், இளைஞர்கள் போர்வையில் அவர்களுடன் சேர்ந்து இருந்த சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ‘அவசரச் சட்டத்தை ஏற்க மாட்டோம். நிரந்தர சட்டம் போட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம்’ என்று அறிவித்தனர். மேலும், போராட்டத்தை கைவிடக்கூடாது என்று மற்ற மாணவர்களையும் தூண்டிவிட்டனர்.

கெஞ்சிய போலீஸார்

இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் கூடுதல் ஆணையர் சங்கர் தலைமையில் சுமார் 10 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டனர். பின்னர் போராட்டக்காரர்களை கலைந்து போகச் சொல்லி அவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினர்.

காலை 6 மணியளவில் மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன், அனைவரும் கலைந்து செல்லும்படி கேட்டுக் கொண்டார். இதை ஏற்று அங்கிருந்த மாணவர்களும், சில இளைஞர் களும் கலைந்து செல்ல முயன்றனர். ஆனால், கூட்டத்தில் ஊடுருவியிருந்த சில சமூக விரோதிகள் அவர்களை கலைந்து செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் நிறைவேற்றப்படும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று அவர்கள் கோஷமிட்டனர். இதை புரிந்துகொண்ட போலீஸார், ‘இங்கிருந்து மாணவர்கள் தயவு செய்து வெளியேறி விடுங்கள்’ என்று கெஞ்சினர்.

இதையடுத்து பல மாணவர்கள், இளைஞர்கள் அங்கிருந்து வெளியேறி னர். ஆனால் ஒரு சில மாணவர்கள் கூட்டத்துக்குள்ளேயே இருந்தனர். போராட்டக்காரர்கள் கலைந்து செல்லா ததை தொடர்ந்து அவர்களை வலுக்கட்டா யமாக வெளியேற்றும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர். கைகளை பிடித்து இழுத்து வெளியேறும்படி கூறினர்.

இதனால், போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சிலர் போலீஸார் மீது மணலை அள்ளி வீசினர். மெரினாவில் இருந்து வெளியேற்றப்பட்ட போராட்டக்காரர்கள் அவ்வை சண்முகம் சாலை, பைகிராப்ட்ஸ் சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டனர். அப்போது சில சமூக விரோதிகள் போலீஸார் மீது கற்களை வீசி முதலில் தாக்கினர். இதில், ஒரு காவல் ஆய்வாளரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் சில போலீஸாருக்கு காயம் ஏற்பட்டது.

சமூக விரோதிகளின் தாக்குதல் அதிகரித்ததைத் தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தினர். வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீஸார் விரட்டிச் சென்று லத்தியால் அடிக்க ஆரம்பித்தனர். இதில் சில இளைஞர்களும், மாணவர்களும் சிக்கிக்கொண்டனர்.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் பல்வேறு கும்பலாக பிரிந்து ஓடினர். அவ்வை சண்முகம் சாலை, பைகிராப்ட்ஸ் சாலை, பாரதி சாலை, டாக்டர் பெசன்ட் சாலை மற்றும் நடுக்குப்பம் பகுதிகளில் வன்முறையாளர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. உடனே, போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கும்பலை கலைக்க முயன்றனர்.

சிதறி ஓடிய கும்பல், சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள், கார்கள் மற்றும் வாகனங்களை அடித்து உடைத்தனர். கிருஷ்ணாம்பேட்டை, அயோத்தியா குப்பம், நடுக்குப்பம் பகுதிகளில் சமூக விரோதிகள் தயாராக வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை போலீஸார் மீது வீசினர். அருகே இருந்த கடைகள் மீதும் வீசினர். பல கடைகள், வீடுகள் தீயில் எரிந்தன. அந்த வழியாக வந்த மயிலாப்பூர் போலீஸ் வேன், ஜீப்பையும் வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர்.

மெரினாவில் இருந்து வெளியேறிய சமூக விரோதிகள் சிலர், நடேசன் சாலைக் குள் நுழைந்தனர். அங்கு, ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தின் வெளியே நிறுத்தப் பட்டிருந்த வாகனங்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். இதில் சுமார் 20 இரு சக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. ஒரு போலீஸ் ஜீப்பையும் பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இந்த தீ ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தின் மீதும், அருகே இருந்த ஒரு கட்டிடத்தின் மீதும் பரவியது. காவல் நிலையத்துக்குள் சிக்கிக்கொண்ட 2 பெண் போலீஸார், ஜன்னல் வழியாக உதவி கேட்டு கதறினர்.

தகவல் அறிந்து திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் பகுதிகளில் இருந்து 5 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். 2 பெண் போலீஸாரையும் ஜன்னலை உடைத்து மீட்டனர். மெரினா காமராஜர் சாலையில் பார்த்தசாரதி கோயில் வளைவு பகுதி வழியாக சென்ற வன்முறையாளர்கள், அங்கிருந்த ஒரு காருக்கு தீ வைத்தனர்.

பொதுமக்கள் மறியல்

இதற்கிடையே போலீஸாரை கண்டித்து பொதுமக்கள் ஆங்காங்கே மறியல் செய்தனர். சிந்தாதிரிப்பேட்டையில் துணை மேயர் கபாலமூர்த்தி சாலை, ஆழ்வார்பேட்டை டிடிகே சாலை, ராதா கிருஷ்ணன் சாலை, மற்றும் ராயபுரம், வியாசர்பாடி, தரமணி, வேளச்சேரி சாலைகளில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேளச்சேரி ரயில் நிலையத்தில் சிலர் மறியல் செய்தனர். இதனால் பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

காருக்கு தீ வைப்பு

பூந்தமல்லி சாலை நாயர் பாலம் அருகே பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் சந்தோஷ்குமார், தனது காரை விட்டு இறங்கி பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வன்முறையாளர்கள் சிலர் அவரது காரில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டனர்.

இதேபோல அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி 100 அடி சாலையில் போலீஸாரின் டெம்போ வேனை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இந்த வேனின் டீசல் டேங்க் வெடித்துச் சிதறியதில் அருகே இருந்த கடைகளுக்கும் தீ பரவியது. வியாசர்பாடி சர்மா நகர் பேருந்து நிறுத்தம் அருகே தீயணைப்பு துறை வாகனத் தையும் வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர். வன்முறை, மறியலால் சென்னை முழுவதும் பதற்றம் நிலவியது. மாநகர பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை விடப்பட்டது. பெற்றோர் பதற்றத்துடன் பள்ளிகளுக்கு வந்து, தங்கள் பிள்ளை களை அழைத்துச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x