Published : 26 Feb 2014 12:00 AM
Last Updated : 26 Feb 2014 12:00 AM

அன்புமணிக்கு கொலை மிரட்டல்: முன்னாள் எம்.எல்.ஏ மீது புகார்

சேலத்தில் நடந்த தமிழக வாழ்வுரிமைக்கட்சி மாநாட்டில் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ., காவேரி, பா.ம.க. அன்புமணிக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் போஸ் மைதானத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில மாநாடு 23-ம் தேதி நடந்தது. இதில், கட்சித் தலைவர் வேல்முருகன், முன்னாள் எம்.எல்.ஏ. காவேரி உள்பட நிர்வாகிகள் பேசினர். காவேரி பேசும்போது, பாமக நிறுவனர் ராமதாஸை கடுமையாக விமர்சித்தும், அவரது மகன் அன்புமணிக்கு கொலை மிரட்டல் விடுத்தும் பேசியதாக பா.ம.க.வினர் புகார் கூறினர்.

இந்நிலையில், பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசு, கார்த்தி, கண்ணையன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஒன்று திரண்டு சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று முன் தினம் இரவு சென்றனர். அன்புமணி ராமதாஸூக்கு கொலை மிரட்டல் விடுத்துப் பேசிய காவேரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்துள்ளனர்.

மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கட்சியில் இருந்து நீக்கப் பட்ட வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சியை ஆரம்பித்து 23ம் தேதி சேலத்தில் மாநாடு நடத்தினார். இதில் சங்ககிரியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. காவேரி பேசும்போது, பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸை கொச்சைப்படுத்தியும், அவரது மகன் அன்புமணி ராமதாஸூக்கு கொலை மிரட்டல் விடுத்தும் பேசியுள்ளார். எனவே, காவேரி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x