Published : 02 Jun 2016 02:24 PM
Last Updated : 02 Jun 2016 02:24 PM

மேட்டூர் அணையைத் திறக்காமல் குறுவைக்கு ரூ.54 கோடி திட்டத்தால் பயனில்லை: கருணாநிதி

அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் குறுவை பொய்த்துக் கொண்டே இருக்கிறதே தவிர, புதிய நம்பிக்கை எதுவும் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், '' “குறுவை சாகுபடியை மேற்கொள்ள டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கும் தொகுப்புத் திட்டம்” “விவசாயிகள் வரவேற்பு” என்றெல்லாம் இன்று ஏடுகளில் செய்தி.

தலைப்பைப் பார்த்தவுடன், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கெல்லாம், அவர்கள் கடந்த ஐந்தாண்டுகளாக அனுபவித்து வரும் அவல நிலையைப் போக்கிட, ஜெயலலிதா ஏதோ பல ஆயிரம் கோடி ரூபாய்ச் செலவில் பலப்பலத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார் என்றும், நெல்லுக்கான விலையை குவிண்டால் ஒன்றுக்கு 2000 ரூபாய்க்கு மேல் உயர்த்தி அறிவித்திருக்கிறார் என்றும், ஆண்டு தோறும் ஜுன் 12ஆம் தேதியன்று குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையைத் திறப்பதற்குப் பதிலாக இந்த ஆண்டு ஜுன் முதல் வாரத்திலேயே திறக்கப் போகிறார்கள் என்றும் நினைத்து, அந்தச் செய்தியை முழுவதும் படித்த எனக்கு அதிர்ச்சியும், வேதனையும் தான் ஏற்பட்டது.

ஜெயலலிதாவின் தொகுப்புத் திட்டத்தை வெளியிட்ட நாளேடுகளே, வேறொரு பக்கத்தில் சிறிதாக இந்த ஆண்டும் மேட்டூர் அணை குறுவை சாகுபடிக்காக ஜுன் 12இல் திறக்கப்பட மாட்டாது என்ற செய்தியையும் வெளியிட்டுள்ளது.

அதிமுக ஆட்சிக்கும், மேட்டூர் அணைக்கும், விவசாயிகளுக்கும் என்ன அப்படி அதிசயத் தொடர்போ தெரியவில்லை. ஒன்றுக்கொன்று பொருத்தமில்லாமலேயே காலம் போய்க் கொண்டிருக்கிறது. ஜுன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக, அதிமுக ஆட்சியில் 2002இல் செப்டம்பர் 6 அன்றும், 2003இல் அக்டோபர் 7 அன்றும், 2004இல் ஆகஸ்ட் 14 அன்றும், 2005இல் ஆகஸ்ட் 4 அன்றும் தான் மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

இந்த முறை அதிமுக ஆட்சியில், 2012இல் செப்டம்பர் 17 அன்றும், 2013இல் ஆகஸ்ட் 2 அன்றும், 2014இல் ஆகஸ்ட் 10 அன்றும், 2015இல் ஆகஸ்ட் 9 அன்றும் தான் மேட்டூர் அணை திறக்கப்பட்டு, அதன் காரணமாக அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் குறுவை பொய்த்துக் கொண்டே இருக்கிறதே தவிர, புதிய நம்பிக்கை எதுவும் இல்லை. டெல்டா மாவட்டக் குறுவை என்பது அருங்காட்சியகத்தில் தேடிக் கண்டு பிடிக்க வேண்டிய பொருளாகி விட்டதோ என்று திகைக்க வேண்டியிருக்கிறது.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர், இந்தப் பிரச்சினை பற்றி அளித்துள்ள பேட்டியில், “இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு நீர் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜுன் மாதம் இறுதி வரை தண்ணீர் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. தென்மேற்குப் பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. கிடைக்கிற தண்ணீரைக் கொண்டு குறுவை சாகுபடிப் பணிகளைச் செய்வதற்குத் தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டுமே தவிர, முற்றிலும் குறுவை இல்லை, தண்ணீர் திறக்க இயலாது என்ற அறிவிப்பு பின்னடைவை ஏற்படுத்தும்.

இந்த அறிவிப்பை கர்நாடக அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு உச்ச நீதி மன்றத்தில் குறுவைக்குத் தண்ணீர் திறக்க இயலாது என்று கூடச் சட்டமாக்க முயற்சிக்கும். எனவே முதல்வர் ஜெயலலிதா சட்ட ரீதியிலான முறையில் காவிரிப் பிரச்சினையை அணுக வேண்டுமே தவிர, தண்ணீர் இருப்பைக் கணக்கில் கொண்டு தண்ணீர் திறப்பு இல்லை என முடிவு எடுப்பது விவசாயிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டிருப்பது ஆழமான பொருள் நிறைந்தது; சிறிதும் அலட்சியப்படுத்தக் கூடியதல்ல.

மேட்டூர் அணையைத் திறக்காத நிலையில் குறுவைச் சாகுபடியை பெரும்பாலான விவசாயிகள் மேற்கொள்ள இயலாது. இந்த நிலையில் அவர்களுக்கு ரூ. 54 கோடிக்குத் தொகுப்புத் திட்டம் என்ற பெயரில் முதல்வர் திட்டங்களை அறிவித்திருப்பது, யானைப் பசிக்குச் சிறிய பொரி உருண்டை போன்றது.

நிலத்தடி நீர் மூலம் 3 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடிக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப் படும் என்று முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆனால் காவிரி டெல்டா விவசாயிகள் நல உரிமைச் சங்கத்தின் செயலாளர் மன்னை ரெங்கநாதன் “மூன்று லட்சம் ஏக்கருக்கு குறுவைச் சாகுபடி செய்ய வேண்டுமானால், 50 முதல் 60 டி.எம்.சி. தண்ணீர் வேண்டும்; இங்கு நிலத்தடி நீர் மட்டமும் இல்லை, தென்மேற்குப் பருவ மழை, காவிரி நீர், நிலத்தடி நீர் ஆகிய மூன்றும் இருந்தால் தான் மூன்று லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய முடியும். நிலத்தடி நீரைப் பயன்படுத்தி கோடை நெல் சாகுபடி ஒரு லட்சம் ஏக்கர் அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று விளக்கமாகத் தெரிவித்திருப்பதில் இருந்து, முதல்வர் ஜெயலலிதா மூன்று லட்சம் ஏக்கர் என்று சொல்வது எந்த அளவுக்குக் கவைக்குதவாதது; வெறும் கற்பனை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த நிலையில் தான் இன்று மத்திய அரசு 2016-2017ஆம் ஆண்டு காரிப் பருவத்துக்கான நெல் கொள்முதல் விலையை குவிண்டால் ஒன்றுக்கு அறுபது ரூபாய் உயர்த்தி வழங்க முடிவு செய்து அறிவித்துள்ளது. சென்ற ஆண்டு சாதாரண ரக நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ. 1,410க்கும், முதல் தர (கிரேடு ஏ) நெல்லை ரூ. 1,510க்கும் மத்திய அரசு கொள்முதல் செய்யும் என்று அறிவித்தது.

மத்திய அரசு நிர்ணயித்த 1,410 ரூபாயுடன் கூடுதலாக தமிழக அரசின் சார்பில் ஐம்பது ரூபாயும், சன்ன ரக நெல்லுக்கு கூடுதலாக தமிழக அரசின் சார்பில் எழுபது ரூபாயும் உயர்த்தி 30-9-2015 அன்று அறிவித்தார்கள். அப்போதே 1-10-2015 அன்று நான் விடுத்த அறிக்கையில் இந்தக் கொள்முதல் விலையை குவிண்டால் ஒன்றுக்கு 2,000 ரூபாயாக உயர்த்த வேண்டுமென்று வலியுறுத்தி இருந்தேன்.

மேலும் தற்போது நடைபெற்ற தேர்தலின் போது வெளியிட்ட திமுக தேர்தல் அறிக்கையில், ''தொடக்கத்தில் ரூ.2000 என நிர்ணயித்து, படிப்படியாக ரூ.2,500 வரை உயர்த்தித் தரப்படும்” என்று அறிவித்திருந்தோம். ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கையில் அதைக் கூட எவ்வளவு என்று குறிப்பிடாமல், “நெல்லுக்கான ஆதார விலை உயர்த்தி வழங்கப்படும்” என்று மிகவும் சாமர்த்தியமாகப் பொத்தாம் பொதுவாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.

தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றுள்ள இப்போதாவது தமிழக அரசு, விவசாயிகளின் எண்ணற்ற பிரச்சினைகளில் கிஞ்சிற்றும் அலட்சியம் காட்டாமல், விவசாயிகளின் பிரதிநிதிகளோடு கலந்தாலோசனை செய்து, பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும்'' கருணாநிதி கூறியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x