Published : 05 Aug 2015 03:53 PM
Last Updated : 05 Aug 2015 03:53 PM

சேலம் மதுக்கடை ஊழியர் செல்வம் மரணத்துக்கு என்ன பதில்?- அரசுக்கு டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் கேள்வி

சேலம் மதுக்கடை ஊழியர் செல்வம் மரணத்துக்கு என்ன பதில் என்று தமிழக அரசுக்கு டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் கேள்வி எழுப்பியுள்ளது.

அத்துடன், டாஸ்மாக் நிர்வாகத்தின் மாவட்ட மேலாளர்கள், மண்டல மேலாளர்களின் வாய்மொழி உத்தரவுகளே ஊழியர்களின் பாதிப்புக்கு முக்கிய காரணம் என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் மதுவிலக்கு அமலாக்க கோரி போராடிய சமூக ஆர்வலர் சசிபெருமாள் மரணத்தைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் தமிழக அரசு கடை ஊழியர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டுமென டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் சார்பில் இரண்டு தினங்களுக்கு முன் வலியுத்தப்பட்டது.

டாஸ்மாக் நிர்வாகத் தரப்பில், கடை ஊழியர்களை பணி முடித்து வீட்டிற்கு செல்லாமல், கடைக்குள் தங்கி கடையை பாதுகாக்க வேண்டுமென மாவட்ட மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மூலமாக வாய்மொழி உத்தரவிட்டுள்ளது. இதில் காவல்துறையும் தனது பங்கிற்கு கடை ஊழியர்களை கடைக்குள் தங்க வேண்டுமென்று நெருக்கடி கொடுத்து வருகிறது. இதனால் பல கடைகளில் ஊழியர்கள் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சேலம் மாவட்டத்தில் நேற்று மாலையில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர், கடை ஊழியர்களை தொடர்பு கொண்டு இரவு கடைகளில் தங்கி, கடையை பாதுகாக்க வேண்டுமென்று நெருக்கடி கொடுத்துள்ளார்.

இந்த உத்தரவின்படி, வாழப்பாடியில் உள்ள 7247 கடையில் உள்ள விற்பனையாளர் பி.செல்வம் என்பவர் கடை பணி முடிந்தும், கடையை பாதுகாத்திட கடைக்குள் தங்கியுள்ளார். நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் இந்த கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கியுள்ளனர். இதில் கடைக்குள் பொருட்கள் எரிந்தும், அதில் விற்பனையாளர் செல்வமும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அதிகாரிகளின் நெருக்கடியால் கடைக்குள் தங்கி உயிரிழந்த விற்பனையாளர் செல்வத்திற்கு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் அஞ்சலி செலுத்துகிறது. இந்த ஊழியரின் உயிரிழப்புக்கு டாஸ்மாக் அதிகாரிகளும், காவல்துறையினருமே பொறுப்பேற்க வேண்டும்.

டாஸ்மாக் கடையையும், அதில் உள்ள பொருட்களையும் பாதுகாக்க அக்கறை கொண்ட அதிகாரிகள், ஊழியர்களது உயிரைப் பற்றி கவலைப்படவில்லை.

டாஸ்மாக் கடை ஊழியர்கள் இரவில் கடையில் தங்க நெருக்கடி கொடுத்து வருகிறார்கள் என்ற செய்தி நேற்றைய தினம் ஊடகங்களிலும், செய்திதாள்களிலும் வந்த நிலையிலும், அதிகாரிகள் தன்னிச்சையாக ஆங்காங்கே உத்தரவுகளை பிறப்பித்து ஒரு உயிரை பலிவாங்கியுள்ளனர்.

தமிழக அரசு தனது கடைகளை தனது நிர்வாகத்தின் கீழ் செயல்படும் காவல்துறையாலேயே பாதுகாக்க முடியாதபோது, அப்பாவி ஊழியர்களைப் பயன்படுத்தி பலிகடாவாக்கும் போக்கு கண்டனத்திற்குரியது.

அரசு அதிகாரிகளின் அடாவடித்தனமான உத்தரவால் மரணமடைந்துள்ள செல்வத்தின் குடும்பத்திற்கு தமிழக அரசு என்ன பதில் சொல்லபோகிறது.

இப்பிரச்சனையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு பணி நேரத்திற்கு பின்பும் கடைக்குள் இருக்க வேண்டுமென்று உத்தரவிட்ட மாவட்ட மேலாளர், காவல்துறை அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வலியுறுத்துகிறது.

பணியின்போது மரணமடைந்த ஊழியர் செல்வத்தின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், அவரது மனைவிக்கு நிரந்தர அரசு பணி வழங்கிட வேண்டுமென்று சிஐடியு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

இந்த படுபாதக செயலை செய்தவர்களை கைது செய்து கடும் தண்டனை வழங்கிட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் சிஐடியு கேட்டுக்கொள்கிறது.

டாஸ்மாக் கடைகளை பாதுகாப்பதற்கு கடை ஊழியர்களின் உயிரை பணயம் வைப்பது பொறுத்தமற்றது என்பதை சிஐடியு சுட்டிக்காட்டுகிறது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x