Published : 18 Jul 2015 12:02 PM
Last Updated : 18 Jul 2015 12:02 PM

நாடு முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துக: மோடிக்கு அன்புமணி கடிதம்

மதுவால் ஏற்படும் தீமைகளைத் தடுக்க இந்தியா முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; தூய்மைக்காக ‘தூய்மை இந்தியா’ இயக்கம் நடத்தப்படுவதைப் போல மதுவுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் தனி இயக்கம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு பாமக முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், ''ஒட்டுமொத்த இந்தியாவுக்கும், குறிப்பாக தமிழகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருக்கும் மதுவின் தீமைகள் குறித்து உங்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இந்திய இளைஞர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வரும் மதுவின் தீமைகள் குறித்து விளக்குவதே இந்தக் கடிதத்தின் நோக்கம் ஆகும்.

மது அரக்கனின் தீமைகள் குறித்த உண்மைகளை நீங்கள் அறிந்து, அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக இப்பிரச்சினையின் தீவிரம் குறித்து புள்ளி விவரங்களுடன் விளக்க விரும்புகிறேன்.

மது குடிப்பதால், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 18 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். புகைப்பிடிப்பதால் ஆண்டுக்கு 10 லட்சம் பேரும், மற்ற நோய்களால் ஆண்டுக்கு 5 முதல் 7 லட்சம் பேரும் உயிரிழக்கிறார்கள். புகை மற்றும் நோயைவிட, மது குடிப்பதனால்தான் அதிக எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழக்கிறார்கள். எனவே, மதுப்பழக்கம் என்பது மிகப்பெரிய சமூகப் பிரச்சனையாகும்.

உலகிலேயே அதிக அளவில் சாலை விபத்துக்களும், தற்கொலைகளும் நடக்கும் நாடு என்ற அவப்பெயரையும் இந்தியா பெற்றிருக்கிறது. சாலை விபத்துக்களுக்குக் காரணம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரங்களில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகள் தான். மது தான் அனைத்துக் குற்றங்களுக்கும் தாயாக விளங்குகிறது. பாலியல் வன்கொடுமைகள் உட்பட பெண்களுக்கு எதிரான 90% குற்றங்களுக்கு மது தான் காரணம் என்பது கடந்த கால அனுபவங்களில் இருந்து நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மது மற்றும் உடல் நலம் குறித்த உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய ஆய்வறிக்கையில் 15 வயதுக்கும் மேற்பட்ட ஆண்களில் 32.1 விழுக்காட்டினரும், பெண்களில் 10.60 விழுக்காட்டினரும் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தேசிய அளவில் ஆல்கஹால் கொள்கை வகுக்கப்படாததால் தான் மது அருந்தும் வழக்கம் அதிகரித்து வருவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

தமிழகத்தின் கலாச்சாரம் இப்படி சீரழிந்து வருகிறதே என்று வேதனைப்படும் அளவுக்கு தமிழகத்தில் கடந்த சில நாட்களில் நிகழ்ந்த 3 சம்பவங்களை உங்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். இந்த நிகழ்வுகளைப் பற்றி அறிந்தால் நீங்கள் பெரும் அதிர்ச்சி அடைவீர்கள்.

1) திருவண்ணாமலை மாவட்டம் மேல்சோழன் குப்பம் பகுதியில் 4 வயது குழந்தைக்கு அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மதுவைக் கொடுத்து கட்டாயமாக குடிக்க வைத்தனர். அத்துடன் அதை அவர்கள் படம் பிடித்து சமூக ஊடகங்களிலும் வெளியிட, அதை ஒட்டுமொத்த தமிழகமே அதிர்ச்சி கலந்த கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தது.

2) தமிழகத்தின் தென் மாவட்டம் ஒன்றில் சுமார் 5 வயதுடைய சிறுவனுக்கு அடையாளம் தெரியாத சிலர் மது கொடுத்து குடிக்க வைத்தனர். அதை படம் பிடித்து சமூக ஊடகங்களிலும் வெளியிட்டனர். இவை ஏதோ ஒருமுறை நடந்த நிகழ்வு அல்ல...தொடர்ச்சியாக நடக்கும் நிகழ்வுகளாகவே தோன்றுகிறது.

3) கோவையில் 16 வயதுடைய +2 மாணவி ஒருவர் தோழிகளுடன் மது அருந்தி விட்டு போதையில் தகராறு செய்திருக்கிறார். அவரை மீட்கச் சென்ற காவல்துறையினரையும் போதையில் திட்டியிருக்கிறார்.

இவை அனைத்துமே தமிழகத்தில் மதுவால் ஏற்படும் சீரழிவுகளுக்கான சில உதாரணங்கள் தான். குடிபோதையில் பெற்ற மகளை தந்தை பாலியல் வன்கொடுமை செய்தது, நாடு முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் நாள்தோறும் நடக்கும் சாலை விபத்துக்கள் என இன்னும் ஏராளமான உதாரணங்களைக் கூறிக் கொண்டே போகலாம்.

மக்களின் உயிரை எடுப்பது மட்டுமின்றி, நமது பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது. இதே போக்கு தொடர்ந்தால், அது நமது எதிர்காலத் தலைமுறையினரின் அழிவுக்கு காரணமாகி விடும்.

மது மாநிலப்பட்டியலில் உள்ள பொருள் என்பதால், இந்த சமூகத் தீமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி கடிதங்கள், போராட்டங்கள் ஆகியவற்றின் மூலம் தமிழக அரசை நான் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், மாநில அரசு எங்களின் வேண்டுகோளை ஏற்க மறுக்கிறது. உண்மையில், தமிழக அரசு மதுவை தடை செய்வதற்கு பதிலாக மது விற்பனையை ஊக்குவித்து வருகிறது.

டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் மதுவை கட்டுப்பாடின்றி விற்பனை செய்யும் தமிழக அரசின் போக்கு தான் தமிழக மக்களின் சமூக வாழ்க்கை பாதிக்கப்படுவதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.

பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் கூட தமிழக அரசு மதுக்கடைகளை திறந்து வருகிறது; இதற்குப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதில் அவலமான விஷயம் என்னவெனில் தமிழக அரசு மது விற்பனைக்காக இலக்கு நிர்ணயிப்பது தான்.

மது அரக்கனின் பிடியில் இளைஞர்களும், சிறுவர்களும் சிக்குவதைத் தடுப்பதற்காக தமிழகத்தில் மது விற்பனை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் ராமதாஸ் தொடங்கிய பாமக முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த 25 ஆண்டுகளாக போராடி வருகிறது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சராக நான் இருந்த போது தேசிய ஆல்கஹால் கொள்கையை உருவாக்கினேன். ஆனால், எனக்குப் பிறகு அந்த பதவிக்கு வந்தவர் அதன் மீது தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதியை ‘உலக ஆல்கஹால் இல்லா நாளாக’ கடைபிடிப்பதற்கான தீர்மானத்தை உலக சுகாதார இயக்கத்தின் மாநாட்டில் கொண்டு வந்து நிறைவேற்றினேன்.

தமிழகத்தை மது இல்லாத மாநிலமாக்க வேண்டும் என்பதற்காக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மது விற்பனைக்கு எதிராக, பெண்களைக் கொண்டு, எண்ணற்ற போராட்டங்களை நடத்தியுள்ளோம். அதுமட்டுமின்றி, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மது ஒழிப்புப் போராட்டங்களை நான் நடத்தி வருகிறேன். இப்போராட்டங்களில் இதுவரை இல்லாத வகையில் பெருமளவில் பெண்கள் பங்கேற்று வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப் பட வேண்டும் என்று பெண்கள் விரும்புவதையே இது காட்டுகிறது.

எங்களது கட்சியின் சமூக அமைப்பான வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்றுவதற்காக சட்டப்போராட்டம் நடத்திவருகிறது. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 504 மதுக்கடைகளை அகற்றுவதற்கான உத்தரவை பெற்று செயல்படுத்தியுள்ளோம். மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1500 மதுக்கடைகளை மூடுவதற்கான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டும் விதிகளில் இடம் பெற்றுள்ள 47 ஆவது பிரிவில், ‘‘ஓர் அரசின் கடமை என்பது மக்களின் ஊட்டச் சத்து அளவு, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றையும், பொது சுகாதாரத்தையும் மேம்படுத்துவது ஆகும்.

மக்களின் ஊட்டச் சத்து அளவு, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றையும், பொது சுகாதாரத்தையும் மேம்படுத்துவதை அரசு முதன்மைக் கடமையாக கருத வேண்டும். குறிப்பாக மதுவையும் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படுத்தும் போதைப் பொருட்களையும் மருத்துவப் பயன்பாட்டைத் தவிர்த்து வேறு எதற்கும் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. இந்த அரசியலமைப்புச் சட்ட விதியைப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குஜராத் மாநிலத்தில் நீங்கள் முதலமைச்சராக இருந்த போது முழு மதுவிலக்கை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியதை எண்ணி பிரமிப்படைகிறேன். மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட நாளில் இருந்து இன்று வரை மது இல்லாத மாநிலமாக திகழ்வதால் அம்மாநிலத்திற்கு எண்ணற்ற பயன்கள் கிடைத்துள்ளன. அம்மாநிலத்தின் வளர்ச்சியை ஒட்டுமொத்த இந்தியாவும் பார்த்தது. அதன்பயனாக இப்போது இந்தியாவின் மாதிரி மாநிலமாக குஜராத் உருவெடுத்துள்ளது.

இந்த வெற்றிச் சாதனையை ஒட்டுமொத்த இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்தில் நிகழ்த்தும்படிக் கேட்டுக் கொள்கிறேன். மதுவின் தீமைகள் காரணமாக, ஒரு காலத்தில் அதிக வளர்ச்சி அடைந்த மாநிலம் என்ற நிலை மாறி உலக வரைபடத்திலும், பிராந்திய வளர்ச்சியிலும் எங்களின் பெருமையை நாங்கள் இழந்து விட்டோம். மதுவிலக்கை ஏற்படுத்துவதற்காக நீங்கள் நடவடிக்கை மேற்கொண்டால் அது இழந்த பெருமையை மீட்கவும், முன்னேற்றப்பாதையில் செல்லவும் பெரிய அளவில் உதவும்.

நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள தூய்மை பாரதம் இயக்கத்தைப் போல மதுவுக்கு எதிராக ஓர் இயக்கத்தை நீங்கள் தொடங்கினால் அதை நான் பாராட்டுவேன். இந்த ஒற்றை நடவடிக்கை மூலம் இந்திய வரலாற்றில் நீங்கள் இறவாப்புகழ் பெறுவீர்கள்.

இந்தியா இளைஞர்கள் அதிகம் உள்ள நாடு ஆகும். ஆனால், இளைஞர்களின் பெரும்பான்மையான சக்தி மது என்ற அரக்கனால் உறிஞ்சப்படுகிறது. மதுவுக்கு எதிராகவும், மதுவால் வீணடிக்கப்படும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் நான் போராடி வருகிறேன். மக்கள் நலனைக் கருத்தில் கொண்ட இந்த பிரச்சினையில் தாங்கள் தலையிட்டு நாடு முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என்று மோடிக்கு எழுதிய கடிதத்தில் அன்புமணி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x