Published : 25 Sep 2016 10:59 AM
Last Updated : 25 Sep 2016 10:59 AM

நூலக துப்புரவுப் பணிக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.30: தொழிலாளர்கள் வர மறுப்பதால் தூசி படியும் புத்தகங்கள்

நூலகங்களில் துப்புரவுப் பணி மேற்கொள்ள நாளொன்றுக்கு ரூ.30 மட்டுமே ஒதுக்கப்படுகிறது. அதனால், நூலக துப்புரவுப் பணிக்கு தொழிலாளர்கள் வர மறுப்பதால் புத்தகங்கள் தூசு படிந்து நூலகங்களில் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழகத்தில் மைய நூலகங்கள், தாலுகா நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள், பகுதி நேர நூலகங்கள் என மொத் தம் 4,531 நூலகங்கள் உள்ளன. இந்த நூலகங்களில் கோடிக்கணக் கான புத்தகங்கள் பராமரிக்கப்படு கின்றன. ஒவ்வொரு ஆண்டும் புத்தக வாசிப்போரை ஈர்க்கவும், வாசகர்கள் வருகையை அதிகப் படுத்தவும் தற்போது புதிய வாசிப் புப் பிரிவுகள் தொடங்கப்பட்டு நூலகங்கள் நவீனமயமாக்கப்படு கின்றன. அதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தின மும் ஏராளமானோர் தற்போது நூலகங்களுக்கு வர ஆரம்பித் துள்ளனர்.

ஆனால், நூலகங்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்து வதிலும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்வதிலும் நூலகத்துறை அக்கறை காட்டவில்லை என புகார் எழுந்துள்ளது. நூலகங்களில் தினமும் துப்புரவுப் பணி செய்ய நிரந்தரமாக துப்புரவுத் தொழிலா ளர்கள் இல்லை. நூலகர்களே தினமும் யாராவது ஒரு துப்பு ரவுத் தொழிலாளரை அழைத்து நூலகத்தை சுத்தம் செய்கின்றனர். அவர்களுக்கு ஊதியமாக தினமும் ரூ.30 மட்டுமே வழங்குவதற்கு நூலகத்துறை நிதி ஒதுக்குவதாகக் கூறப்படுகிறது. இந்த ஊதியத்துக்கு துப்புரவுத் தொழிலாளர்கள் வர ஆர்வம் காட்டாததால் நூலகங் களில் பெயரளவுக்கு மட்டுமே துப்புரவுப் பணி நடக்கின்றன.

அதனால், புத்தகங்கள் தூசி படிந்தும், வாசகர்கள் அமர்ந்து படிக்கும் அறைகள், வளாகங்கள் சுகாதாரம் இல்லாமலும் இருக் கின்றன. நூலகங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள நூலகர்களே தங்கள் கையில் இருந்து கூடுதல் பணம் கொடுத்து நூலகத்தை பராமரிக்கின்றனர்.

இதுகுறித்து நூலகர்கள் கூறியதாவது: மாவட்ட மைய நூலகங்கள் 10 ஆயிரம் சதுர அடி முதல் 17 ஆயிரம் சதுர அடி வரை அமைந்துள்ளன. தாலுகா நூலகங்கள், கிளை நூலகங்கள், 600 சதுர அடியில் இருந்து 1,200 சதுர அடி வரை அமைந்துள்ளன. மைய நூலகங்களில் குறைந்தபட்சம் 2 லட்சம் முதல் 3 லட்சம் புத்தகங்கள் வரை இருக்கின்றன. படிப்பகம், சொந்த புத்தகம் கொண்டு வந்து படிக்கும் இடம், நூல் இரவல், குறிப்பெடுக்கும் பகுதி, ஐஏஎஸ் படிப்பகம், புதிய நூல்கள் பிரிவுகள் மற்றும் நிர்வாக அலுவலகம் என பலஅறைகள் உள்ளன.

இந்த அறைகளில் இருக்கும் மேஜை, நாற்காலி, புத்தக அலமாரிகளை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். பெரும்பாலும் நூலகங்கள் வாசகர்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் முக்கிய சாலைகளிலேயே அமைந்துள்ளன. அதனால், வாகனப் போக்குவரத்து மிகுதியால் நூலகங்களில் தூசி அதிகமாக படிகிறது. இவற்றை சுத்தம் செய்ய 3 மணி நேரம் ஆகிறது. துப்புரவுப் பணிக்கு ரூ.30 ஒதுக்குவது, கடந்த காலத் தில் நிர்ணயிக்கப்பட்ட நிதி ஒதுக் கீடு. தற்போது விலைவாசி, தொழிலாளர்கள் ஊதியம் பல மடங்கு உயர்ந்துவிட்டது. தற்போது இந்த பழைய ஊதியத்துக்கு துப்புரவு பணியாளர்கள் வர மறுக்கின்றனர்.

அதனால், நாங்களே சொந்த பணத்தை செலவழித்து துப்புரவுத் தொழிலாளர்களை அழைத்து தினமும் சுத்தம் செய்கிறோம். நூலகங்களுக்கு பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அதிக அளவு வருகின்றனர். சுகாதாரம் இல்லாததால் அவர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. புத்தகங்களும் தூசு படிந்து நாளடைவில் கிழிந்துவிடும் அபாயம் ஏற்படுகிறது. அதனால், மற்ற அரசுத் துறை அலுவலகங்களைப் போல், நூலகங்களுக்கும் நிரந்தர துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து நூலகத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ஆரம்ப காலத்தில் நிரந்தரமாக துப்புரவுப் பணிக்கென்றே ஆட்கள் நியமிக்கப்பட்டனர். தினமும் ஒரு மணி நேரம்தான் துப்புரவு செய்ய வேண்டியது இருப்பதால் நிரந்தர துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்க வாய்ப்பு இல்லை. துப்புரவுத் தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.30 இருந்ததை தற்போது 40 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. இந்தத் தொகை சில நூலகங்களில் நடைமுறைக்கு வராமல் இருக்க லாம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x