Published : 17 Apr 2017 08:54 AM
Last Updated : 17 Apr 2017 08:54 AM

கடின உழைப்பும், விடாமுயற்சியும் வெற்றியை தேடித்தரும்

‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டும் நிகழ்ச்சியில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுரை

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் மற்றும் ‘கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’ சார்பில் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ என்ற வழிகாட்டும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி, கோவை சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து துரை.ரவிச்சந்திரன் பேசியதாவது:

2000-2003-ம் ஆண்டுகளில் அரசுப் பயிற்சி நிலையங்களில் மட்டுமே குடிமைப்பணி தேர்வுக்குப் பயிற்சி பெறும் நிலை இருந்தது. டெல்லியில்தான் தனியார் பயிற்சி மையங்கள் இருந்தன. ஐஏஎஸ் படிக்க போதுமான வசதிகள் இல்லை. ஆனால், தற்போது பயிற்சி வசதிகள் அதிகம் வந்துவிட்டன.

மாணவர்கள் கல்லூரிப் பரு வத்தின்போதே செய்தி, நாட்டு நடப்புகளை அறிந்துகொண்டு, தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். 32 வகையான குடிமைப் பணிகளுக்கு கல்லூரி இளங்கலை படிப்புதான் அடிப்படையாகும்.

நாளிதழ்கள் மூலமாக உள்நாட்டு, சர்வதேச தகவல்களை அறியலாம். நாம் சேகரித்து வைக்கும் தகவல்கள் எப்போதுமே நமக்குப் பயன் அளிக்கும். கடந்த சில ஆண்டுகளாக பிஹார், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்தான் போட்டித் தேர்வில் அதிக வெற்றிகள் பெற்று, முன்னணியில் உள்ளனர்.

தமிழகத்தைவிட அங்கு கல்லூரி களும், பள்ளிகளும் குறைவாக இருந்தாலும்கூட, கடுமையாக முயற்சிக்கின்றனர். அதனாலேயே அந்த இரு மாநிலத்தவர்கள் அதிக அளவில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். அதுபோல, தமிழக மாணவ, மாணவிகளும் வரும்காலத்தில் குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்று, அகில இந்தியப் பணிகளில் முதன்மை பெற வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில், கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு தேர்வு மாதிரி வினாத்தாள், பாடத்திட்ட கையேடு உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டன. மேலும், மதிய உணவும் வழங்கப்பட்டது.

ஏற்கெனவே சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட சேலம் கிருத்திகா, வேதாரண்யம் கவிமணி, திருச்சி ஜெகநாதன் ஆகியோருக்கு கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் இலவசப் பயிற்சிக்கான உத்தரவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ‘தி இந்து’ தமிழ் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் தொகுத்து வழங்கினார்.



இந்தி பேசாத மாநிலங்களின் குரலாக தமிழகம் மாற வேண்டும் - ‘தி இந்து’ தமிழ் நடுப்பக்க ஆசிரியர் சமஸ்:

இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். மாநில உரிமைகள் பறிபோகின்றன, மாநிலத்தின் குரல் எடுபடவில்லை என்ற புகார்கள் ஏதோ தமிழகத்தில் மட்டும் கேட்கவில்லை. வங்கத்தில், திரிபுராவில், ஒடிசாவில் என்று இந்தி பேசாத மாநிலங்கள் பலவற்றிலும் இதே குரல்தான் ஒலிக்கிறது. ஆக, தமிழகம் பேசிக்கொண்டிருக்கும் பிரச்சினை உண்மையில் தேசிய அளவிலான ஒரு பிரச்சினை. இந்தியாவின் பன்மைத்துவம் தொடர்பிலான பிரச்சினை. இதற்கு தீர்வு காண வேண்டும் என்றால் முடிவெடுக்கும் இடத்தில் நாம் அமர வேண்டும். வெறும் பிழைப்புக்கான வாழ்க்கையாக அல்லாமல், ஆள்வதற்கான, சமத்துவத்துக்கான வாழ்க்கையாக நம்முடைய வாழ்க்கையை வளர்த்தெடுக்க வேண்டும். ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் அந்த வரலாற்று நோக்கிலேயே இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. கோழியும் பறவைதான், பருந்தும் பறவைதான். நமக்கும் சிறகுகள் இருப்பதை உணர்வோம். வானுயர இனி நம் சிறகுகளை விரிப்போம்.

திருப்புமுனையாக அமையும் தருணம் இது - காவல் துணை ஆணையர் எஸ்.சரவணன்:

கல்லூரியில் படிக்கும்போதே என்னவாக வேண்டும் என யோசிப்பவர்கள் புத்திசாலிகள். பொருளாதாரம், முதல் தலைமுறை பட்டதாரி, ஆங்கில அறிவு, கூச்சம் போன்ற பிரச்சினைகள் இருந்தால், நிச்சயம் குடிமைப்பணி தேர்வில் வெல்ல முடியும். ஏனென்றால் இதுபோன்ற நிலையில் இருந்து வந்த பலரும் சாதித்துள்ளனர்.

கல்லூரி படிப்பு டெஸ்ட் மேட்ச் போன்றது. தோற்றாலும், அரியர் வைத்து கல்லூரிப் படிப்பு முடியும்வரை எழுதலாம். ஆனால், குடிமைப்பணி தேர்வு 20-20 மேட்ச் போன்றது. போட்டி, போட்டியாளர்கள் அதிகம். குடிமைப்பணி படிப்பவர்களுக்கு, நேர மேலாண்மை, ஒரே எண்ணம் கொண்ட நண்பர்கள் குழு, நாளிதழ் படிக்கும் பழக்கம், உடல்நலன் மீதான அக்கறை ஆகியவை அவசியம்.

கடின உழைப்பு நம்மை சிறந்த அதிகாரியாக உருவாக்கும். அனைவருக்கும் எதாவது ஒரு தருணம் திருப்புமுனையாக அமையும். இங்கு வந்துள்ள மாணவர்களுக்கு இந்த நிகழ்ச்சி அந்த தருணமாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

தமிழ்ச் சமூகத்துக்குக் கிடைத்த பெரும் பேறு - கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன்:

‘தி இந்து’ குழுமத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துவதில் பெருமைப்படுகிறோம். நாங்கள் படித்த காலத்தில் ‘தி இந்து’ நாளிதழ் தமிழில் வராதா என்று ஏங்கியிருக்கிறோம். இன்றைக்கு ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஒரு சர்வதேச நாளிதழுக்கான தரத்தோடு தமிழில் வெளியாவது தமிழ்ச் சமூகத்துக்குக் கிடைத்திருக்கும் பெரும் பேறு. இளைய தலைமுறை இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். போட்டித் தேர்வர்களுக்கு ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழ் நாளிதழ்கள்போல ஒரு துணைவன் இல்லை.

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் மற்றும் ‘கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’ சார்பில் கோவை சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் நேற்று நடைபெற்ற ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டும் நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ, மாணவிகள். | படங்கள்: ஜெ.மனோகரன்



சுவாரஸ்யமான கேள்வி-பதில்கள்

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மனஅழுத்தம், நெருக்கடி அதிகம் இருக்குமா, அரசியல்வாதிகளின் நிர்ப்பந்தம் இருக்குமா, ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற பின்னர் வெகுதொலைவில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்பது பெண்களுக்கு சிறப்பாக இருக்குமா என்றெல்லாம் கேட்டனர்.

மேலும், காவல் துணை ஆணையர் சரவணனிடம், “கம்பீரமான, சிங்க இலச்சினை பொருத்திய தொப்பியை முதல்முறையாக அணிந்தபோது எவ்வாறு உணர்ந்தீர்கள்?” என்றும் கேட்டனர். இதுபோன்ற கேள்விகளுக்கு சிறப்பு விருந்தினர்களும் சுவாரஸ்யமாக பதில் அளித்தனர்.

ஜாக்கிராகானம்

பி.எஸ்.சி. வேளாண்மை முடித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். ஐஏஎஸ் படிக்கத் திட்டமிட்டுள்ள எனக்கு இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. குடிமைப்பணி தேர்வு தொடர்பான எனது பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைத்தது.

ரேணுகாதேவி

எம்.எஸ்சி. பயோ-டெக்னாலஜி படித்துள்ள நான் கடந்த ஓராண்டாக யு.பி.எஸ்.சி. தேர்வுக்குத் தயாராகி வருகிறேன். வீட்டில் இருந்தவாறே தயாராகி வந்த நான், பயிற்சி மையத்தின் அவசியத்தை தற்போது உணர்ந்துகொண்டேன். விரைவில் நான் பயிற்சி மையத்தில் சேருவேன்.

திரிவேணி

பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ள நான், ஐஏஎஸ் தேர்வுக் குத் தயாராகி வருகிறேன். தேர்வு களை தைரியமாக எதிர்கொள்ளு தல், நேர மேலாண்மை, சக மாணவிகளுடன் இணைந்து படித்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இந்நிகழ்ச்சி மூலம் தெரிந்துகொண்டேன்.

விகாசினி

அண்மையில் பிளஸ் 2 முடித்துள்ள நான் எதிர்காலத்தில் ஐஏஎஸ் தேர்வு எழுதத் திட்டமிட்டுள்ளேன். என்ன படிப்பது, எப்படி படிப்பது, தேர்வு களை எதிர்கொள்வது எப்படி, அதிகாரிகளான பின்னர் எவ்வாறு நடந்துகொள்வது உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொண்டேன்.

எஸ்.கவுதம்

பி.இ. எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் 3-ம் ஆண்டு பயின்று வரும் நான், சிறு வயது முதலே ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என கனவு கண்டு வரு கிறேன். தேவையான புத்தகங் களைப் பெறும் வழிமுறைகள், தன்னம்பிக்கையை வளர்ப்பது குறித்து கற்றுக்கொண்டேன்.

டி.வெற்றிவேல்

எம்.இ. உற்பத்திப் பொறியியல் படித்துள்ள நான், ஐஏஎஸ் முதல்கட்டத் தேர்வுக்குத் தயாராகி வருகிறேன். என்ன பாடம் படிப்பது, அலுவலர்களை அணுகும் முறை, எத்தனை முறை தேர்வு எழுதுவது உள்ளிட்ட சந்தேகங்கள் நீங்கி, தேர்வு எழுத ஊக்கம் கிடைத்துள்ளது.

வனிதா

பி.ஏ. பி.எல். மூன்றாமாண்டு படித்து வரும் நான், கடந்த ஓராண்டாக ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாராகி வருகிறேன். தேர்வு முறைகள், பயிற்சி மையத்தின் முக்கியத்துவம், தேர்வுக்குப்பின் செயல்பட வேண்டிய முறைகள் ஆகியவை குறித்து இந்தப் பயிலரங்கில் தெரிந்துகொண்டேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x