Published : 10 Feb 2014 12:00 AM
Last Updated : 10 Feb 2014 12:00 AM

எழுத்தாளர்களை மதிக்காத சமூகம் நல்ல சமூகமல்ல: இயக்குநர் தங்கர்பச்சன்

இலக்கியவாதிகளையும், எழுத்தாளர்களையும் மதிக்காத சமூகம் நல்ல சமூகமே இல்லை என, இயக்குநர் தங்கர்பச்சன் கூறியுள்ளார்.

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சன் கதைகள் அறிமுக விழா நடைபெற்றது.

நாய்வால் திரைப்பட இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் இயக்குநர் தங்கர்பச்சன், எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், சுப்ரபாரதி மணியன், கெளதம சித்தார்த்தன், பாமரன், மக்கள் நலவாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கதைகள் தொகுப்பு அறிமுகத்தைத் தொடர்ந்து, தங்கர் பச்சன தனது ஏற்புரையில்:

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் திறமையான இலக்கியவாதிகள் உருவாவதில்லை. சமூகத்திற்காக தன்னை ஒப்படைத்துக் கொள்பவன் அவனது படிப்பின் மூலம் உருவாவதில்லை. படிக்கும் கல்வி, நாட்டுப்பற்றையோ, இனப்பற்றை யோ, மொழிப்பற்றையோ கற்றுக் கொடுப் பதில்லை. அனுபவத்திலும், சமூகப்பார்வையுமே ஓர் இலக்கியவாதியை உருவாக்குகிறது.

1986லிருந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால், இதுவரை யாருமே அடுத்து என்ன எழுதப் போகிறீர்கள் என்று கேட்டதில்லை. பார்க்கும் அனைவருமே அடுத்து என்னப் படம் என்றுதான் கேட்கின்றனர். இதனால் தான் எதற்கு நாம் எழுத வேண்டும் என தோன்றுகிறது. சினிமாவை யார் வேண்டுமானல் எடுத்து விடலாம். ஆனால், எனது சிந்தனையை என்னால் தான் எழுத முடியும்.

இலக்கியவாதிகளையும், எழுத்தாளர்களையும் மதிக்காத சமூகம் நல்ல சமூகமே இல்லை. தமிழனாய் பிறந்தவர்கள், தமிழைப் பேச கேவலமாய் நினைத்து பிற மொழிகளைக் கலந்து பெருமையாய் பேசும் சமூகம் உருவாகும் போது, ஓர் எழுத்தாளனாக எப்படி கோபப்படாமல் இருக்க முடியும். ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு வரையாவது தமிழில் படிக்க வைக்க வேண்டும். மொழியை நேசிக்கும் ஒருவரால் மட்டுமே இலக்கியத்தை நேசிக்க முடியும் என்றார்.

சினிமாவைப் பற்றி அவர் பேசுகையில், ஒரே சமயத்தில் தான் சினிமா உலகம் முழுவதும் அறிமுகமானது. ஆனால், 1940 காலகட்டத்தில், பிற நாடுகளில் எடுக்கப்பட்ட சினிமாவின் தரம், தற்போதுள்ள இந்தியப் படங்களில் இல்லை. ஆண்டுக்கு ஆயிரம் படங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்டாலும் ஒரு படம் கூட உலக அரங்கில் நிற்பதில்லை. நல்ல சினிமா வராததற்கு காரணம் சினிமா தயாரிப்பவர்கள் அல்ல. மக்கள் தான். 99 சதவீத சினிமாக்களும், காதல், வன்முறை, பாடலை மட்டுமே மையப்படுத்தி உள்ளன. அதற்கு மாற்றான சினிமாவை மக்களிடம் கொண்டு செல்லவே சினிமா இயக்கங்கள் உள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x