Last Updated : 19 Feb, 2014 12:00 AM

 

Published : 19 Feb 2014 12:00 AM
Last Updated : 19 Feb 2014 12:00 AM

நாகப்பட்டினம்: மின்வெட்டு காரணமாக நெல் விற்க முடியாமல் விவசாயிகள் அவதி

மணல்மேடு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அறுவடை செய்த நெல்லை மின்வெட்டு காரணமாக விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப் படுகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் மணல்மேடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா நெற் பயிர்கள் தற்போது முழு வீச்சில் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. தாளடி பயிரும் அறுவடைக்கு வந்திருப்பதால் ஆள் பற்றாக் குறையும் ஏற்பட்டிருக்கிறது.

எனவே, விவசாயிகள் இயந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்து வருகின்றனர். இந்த ஆண்டு கடும் மழை மற்றும் புயல் பாதிப்பு போன்ற எதுவும் இல்லையென்பதால் விளைச்சல் ஓரளவுக்கு நன்றாகவே இருக்கிறது. ஆனால், விளைந்த நெல்லை விற்பனை செய்வதற்குத்தான் தற்போது கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருக்கிறது.

வாகனங்கள் ஏற்பாடு செய்து அரசின் நெல் கொள்முதல் நிலையத்துக்கு நெல் மூட்டைகளை ஏற்றிவரும் விவசாயிகள் அங்கு பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு நிலவும் கடுமையான மின்வெட்டுதான் இதற்கு காரணம். மணல்மேடு பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒவ்வொரு நாளும் 3 மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது.

இதன் காரணமாக கொள்முதல் நிலையங்களில் நெல்லை உடனடியாக விற்பனை செய்ய முடியவில்லை. மின்சாரம் இருந்தால்தான் சுத்தம் செய்யும் இயந்திரம் இயங்கும். சுத்தப்படுத்திய பிறகே நெல்லை விற்கமுடியும். இதனால் சுத்தம் செய்யும் இடத்தில் தங்களது நெல் மூட்டைகளை இறக்கி வைத்துவிட்டு பல நாட்களாக விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர்.

மணல்மேடு, வில்லியநல்லூர், கடக்கம், தாழஞ்சேரி, குறிச்சி, மணல்மேடு, கேசிங்கன், கல்யாணசோழபுரம், இளந் தோப்பு ஆகிய இடங்களில் உள்ள தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகளவில் நெல் மூட்டைகளை விவசாயிகள் அடுக்கி வைத்திருக்கின்றனர். அதனை காவல்காக்க இரவு பகலாக விவசாயிகள் அங்கேயே தங்கியிருக்க வேண்டியிருக்கிறது. சில நாட்களாக மழை வரும் சூழ்நிலை வேறு நிலவுவதால், மூட்டைகள் நனைந்து விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

கொள்முதல் நிலையங்களில் சுத்தம் செய்யும் இயந்திரம் தொடர்ந்து இயங்கிட மணல்மேடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்வெட்டை தளர்த்தி தடையின்றி நெல் கொள்முதல் செய்ய வழிவகை செய்யவேண்டும் என்று விவசாயிகளும் அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x