Published : 13 Jun 2017 02:17 PM
Last Updated : 13 Jun 2017 02:17 PM

ராஜஸ்தானில் தமிழக அதிகாரிகளைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை தேவை: அன்புமணி

ராஜஸ்தானில் இருந்து தமிழகத்துக்கு பசுக்களை ஏற்று வந்த அதிகாரிகளைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பால் உற்பத்தியை பெருக்கும் திட்டத்தின் ஓர் அம்சமாக ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு பசுக்கள் மற்றும் கன்றுக்குட்டிகளை கொள்முதல் செய்து வந்த தமிழக கால்நடைத்துறை அதிகாரிகள் மீது அம்மாநிலத்தின் பாரமர் மாவட்டத்திலுள்ள சதார் என்ற இடத்தில் பசுப் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். காட்டுமிராண்டித்தனமான இச்செயல் கண்டிக்கத்தக்கது.

சதார் நெடுஞ்சாலையில் தமிழகத்திற்கு பசுக்களை ஏற்றி வந்த வாகனங்களை மறித்த பசு பாதுகாப்பு இயக்கத்தினர் அவற்றின் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்கியுள்ளனர். ஒரு வாகனத்தை தீயிட்டு எரிக்க முயற்சி செய்துள்ளனர். பசுக்களை இறைச்சிக்காக கடத்திச் செல்கிறீர்களா? என்று கேட்டு தமிழக அதிகாரிகளைத் தாக்கியுள்ளனர். அதை மறுத்த தமிழக அதிகாரிகள், உள்நாட்டு இன மாடுகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் நோக்குடன் தான் இந்த மாடுகளை வாங்கிச் செல்வதாக விளக்கமளித்துள்ளனர். அப்போதும் தாக்குதல் நீடித்த நிலையில் காவலர்கள் வந்து தான் மீட்டுள்ளனர்.

ஆனாலும், பசுப் பாதுகாப்பு இயக்கத்தினரால் முற்றுகையிடப்பட்ட மாடுகளை மீட்கவோ, பாதுகாப்பு அளிக்கவோ, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ ராஜஸ்தான் காவல்துறையினர் முன்வரவில்லை. தமிழக காவல்துறைத் தலைமை இயக்குனர் டி.கே. ராஜேந்திரன் ராஜஸ்தான் மாநில காவல்துறை இயக்குனரை சந்தித்து முறையிட்ட பிறகு தான் நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கிறது.

சட்டத்தை கைகளில் எடுத்துக் கொண்டு தமிழக அதிகாரிகளை தாக்கியது போன்ற செயல்களை எளிதாக விட்டு விடக் கூடாது. இத்தகைய வன்முறைகள் நீடித்தால் அதிகாரிகள் வெளிமாநிலங்களுக்கு சென்று வர முடியாத நிலை ஏற்படும்.

எனவே, இப்பிரச்சினையை ராஜஸ்தான் மாநில முதல்ரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதிகாரிகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x