Published : 16 May 2017 08:41 AM
Last Updated : 16 May 2017 08:41 AM

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சிபிஐ சோதனை

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.

இவர்கள் இருவரது வீடுகளும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது. இதுதவிர மும்பை, டெல்லி, குர்கான், உள்ளிட்ட இடங்களிலும் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.

காரைக்குடியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2006-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, மத்திய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியமான (எப்ஐபிபி) தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக மத்திய அமைச்சரவை குழுவின் முன் அனுமதியின்றி ஒப்புதல் கொடுத்தது தொடர்பாக சிபிஐ இச்சோதனையை நடத்தி வருகிறது.

பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி ஆகியோர் நடத்திவந்த ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்துக்கு அந்நிய செலாவணி முதலீட்டைப் பெற முறைகேடாக அனுமதி அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது.

இது தொடர்பாக தனியாக புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டு சோதனை நடத்தப்படுகிறதா இல்லை பழைய வழக்கிலேயே விசாரணை நடைபெறுகிறதா என்பது குறித்து விளக்கமளிக்க சிபிஐ தரப்பு மறுத்துவிட்டது.

படம்: ம.பிரபு.

சிதம்பரம் கருத்து:

சிபிஐ சோதனை தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ப.சிதம்பரம், "இது குறித்து நீங்கள் உங்களது சிபிஐ நண்பர்களிடம்தான் கேட்க வேண்டும். ஒருவேளை அரசாங்கத்துக்கு எதிராக நான் கருத்து தெரிவிக்கக் கூடாது என்பதற்காக இவ்வாறு செய்கிறார்களோ என்னவோ? இது முட்டாள்தனமான செயல்" என்றார்.

அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக நோட்டீஸ்:

முன்னதாக கடந்த மாதம் அந்நிய செலாவணி மோசடி புகார் தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் சென்னையை தலைமையகமாக கொண்டு இயங்கும் வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்துக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது.

பெமா (FEMA) சட்டவிதிகளின்படி அமலாக்கத்துறை கார்த்தி சிதம்பரத்துக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.45 கோடி அளவில் அந்நிய செலாவணி மோசடியில் கார்த்தி சிதம்பரம் ஈடுபட்டதாக புகார் எழுந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வாசன் ஹெல்த் கேர் லிமிடட் நிறுவனர் ரூ.2,262 கோடி அளவில் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடட் நிறுவனத்துக்கும் விளக்கம் கோரி அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்நிறுவனத்தின் நிர்வாக குழுவில் கார்த்தி சிதம்பரம் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

படம்: ம.பிரபு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x