Published : 06 Mar 2017 07:46 PM
Last Updated : 06 Mar 2017 07:46 PM

ஜார்ஜியா நாட்டில் சிகிச்சை பெறும் நீலகிரி மாணவரை இந்தியா அழைத்துவர ரூ.18 லட்சம் உதவி: முதல்வர் அறிவிப்பு

ஜார்ஜியா நாட்டில் சிகிச்சை பெறும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் சீனிவாசன் விஜயகுமாரை விமான ஆம்புலன்ஸில் இந்தியா அழைத்துவர ரூ.18 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஜார்ஜியா நாட்டின் தலைநகரான திபிலிசியில் உள்ள ஐரோப்பிய மருத்துவப் பயிற்சி பல்கலைக்கழகத்தில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் விஜயகுமார் என்பவர் படித்து வருகிறார்.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த டிசம்பர் 8-ம் தேதி முதல் ஜார்ஜியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதுவரை ரூ. 11 லட்சம் செலவு செய்துள்ளார். மேலும் 9 முதல் 12 மாதங்களுக்கு தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மருத்துவர் உதவியுடன் விமான ஆம்புலன்ஸில் இந்தியா அழைத்து வர ரூ.18 லட்சம் செலவாகும் என அவரது தாயார் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ரூ.11 லட்சம் செலவு செய்துள்ளதாகவும், தனது குடும்பம் வறுமையில் உள்ளதால் இந்தியா அழைத்துவர உதவ வேண்டும் என அவரது தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அங்குள்ள இந்தியத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

அவரது வேண்டுகோளை ஏற்று சீனிவாசன் விஜயகுமாரை விமான ஆம்புலன்ஸில் கொண்டு வருவதற்கான ரூ.18 லட்சத்தை சிறப்பு நிகழ்வாகக் கருதி தமிழக அரசு ஏற்கும். அவர் விரைவில் பூரண நலம் பெற்று தனது மருத்துவப் படிப்பை தொடர வாழ்த்துக்கள்'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x