Published : 13 Sep 2016 08:30 AM
Last Updated : 13 Sep 2016 08:30 AM

வீரப்பன் தேடுதல் பணியில் பங்கேற்ற ஐபிஎஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணன் மரணம்

சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக் கும் பணியில் பங்கேற்ற முன்னாள் டிஐஜி கோபாலகிருஷ்ணன் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இறந்தார். அவரது நல்லடக்கம் நேற்று சேலம் மாவட்டம் சேலம் கேம்ப், காவிரி புரத்தில் நடந்தது.

சேலம் மாவட்டம் மேட்டூர் சேலம் கேம்ப் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். ஐபிஎஸ் அதிகாரியான இவர் கடந்த கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக - கர்நாடக கூட்டு அதிரடிப் படை எஸ்பி-யாக நியமிக்கப்பட்டு சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்கும் பணியில் ஈடுபட்டார்.

கண்ணிவெடியில் தப்பித்தவர்

சந்தன கடத்தல் வீரப்பனை உயிருடன் பிடிக்கும் வரை திருமணம் செய்து கொள்வதில்லை என்று சபத மேற்று வீரப்பனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட கோபால கிருஷ்ணன், கடந்த 1993-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி தமிழக - கர்நாடக அதிரடிப்படை வீரர்கள் 41 பேருடன் ஜீப் மற்றும் வேனில் மாதேஸ்வரன் மலை பாலாறை கடந்து சுரக்கா மடுவு பகுதிக்குச் சென்றார்.

அப்பகுதியில் 14 இடங் களில் வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் பதுக்கி வைத் திருந்த கண்ணிவெடியில் கோபாலகிருஷ்ணன் தலைமை யில் சென்ற குழுவினர் சிக்கினர். கண்ணிவெடி வெடித்ததில் போலீஸ் வேன் மற்றும் ஜீப் தூக்கி வீசப்பட்டது. இதில், 20 போலீஸார், 2 வனத்துறையினர் உள்ளிட்ட 22 பேர் உயிரிழந்தனர். 12 போலீஸார் படுகாயம் அடைந்தனர்.

இதில் படுகாயம் அடைந்த கோபாலகிருஷ்ணன் உயிருக்கு ஆபத்தான நிலை யில், மருத்துவமனையில் சேர்க் கப்பட்டார். அவருக்கு 22 இடங்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உயிர் தப்பினார்.

அதன்பின்னர் உடல்நலம் தேறி பணிக்கு திரும்பிய அவர் கடந்த 2008-ம் ஆண்டு சேலம் மாநகர காவல் ஆணையராகவும், டிஐஜி., பொறுப்பில் இருந்தும் பணி ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல் நேற்று முன்தினம் இரவு சொந்த ஊரான மேட்டூர் சேலம் கேம்ப், காவிரிபுரத்தில் போலீஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x