Published : 03 Jul 2016 12:48 PM
Last Updated : 03 Jul 2016 12:48 PM

திருநெல்வேலி அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் ராம்குமார்

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் பலத்த போலீஸ் காவலுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னையில் சுவாதி கொல்லப்பட்ட நாளன்று சிசிடிவி கேமிராவில் இருந்த பதிவுகளில், கொலையாளியின் முகம் தெளிவாகத் தெரியாததால் ராம்குமாரை அடை யாளம் காண்பதில் சிக்கல் நீடித்தது.

கொலையாளியின் மேம்படுத்தப்பட்ட புகைப்படம் தமிழகம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தனிப்படை போலீஸாரால் அனுப்பப்பட்டது.ஊடகங்களிலும் பிரசுரமானது. அந்த நபர் குறித்து தகவல் தெரிந்தால் தகவல்தெரிவிக்குமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டது.

சுவாதியின் குடும்பத்தினர், தோழிகள், உறவினர்கள் என்று பல்வேறு தரப்பினரிடமும் தனிப் படை போலீஸார் விசாரணை நடத்தினர். போலீஸாரின் அதிரடி விசாரணையையடுத்து நேற்று முன்தினம் இரவு ராம்குமார் சிக்கினார். போலீஸார் பிடிக்க முயன்றபோது தற்கொலைக்கு முயன்ற ராம்குமாருக்கு காயம் ஏற்பட்டது. தற்போது, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். போலீஸார் ஏற்கெனவே மருத்துவ மனைக்கு தகவல் தெரிவித்து இருந்த தால், அங்கு மருத்துவர்கள் தயாராக இருந்தனர்.

10 நிமிடங்களுக்குள் முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, 1.50 மணிக்கு அறுவை சிகிச்சை அரங்குக்கு எடுத்துச் செல்லப்பட்டார். காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். ராம்குமாரின் கழுத்தில், மொத்தம் 14 தையல்கள் போடப்பட்டன. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். நேற்று காலையில் ராம்குமாருக்கு நினைவு திரும்பியது. காலை 7 மணி அளவில் அவர் ஆண்கள் பொது வார்டுக்கு கொண்டுவரப்பட்டார். அந்த வார்டு முழுக்க போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் தவிர வேறு யாரும் வார்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இதனிடையே, சென்னையி லிருந்து உதவி ஆணையர் தேவராஜன் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று மதியம் திருநெல்வேலிக்கு வந்தனர். மருத்துவமனையில் இருந்த ராம்குமாரை பார்வையிட்டனர். மருத்துவக் கல்லூரி முதல்வர் சித்தி அத்தி முனவரா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்கிரமன் ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தினார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி, ராம்குமாரிடம் தற்போதைக்கு எவ்வித விசாரணையும் போலீஸார் மேற்கொள்ள வில்லை.

24 மணி நேரத்துக்குப் பின் ராம்குமார் உடல்நிலையின் முன்னேற்றத்தைப் பொருத்து, அவரிடம் விசாரணை நடக்க இருக்கிறது. உடல்நிலை சீரானதும், அவரை சென்னைக்கு அழைத்துச் செல்ல போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

தற்கொலைக்கு முயன்றதாக ராம்குமார் கைது

சுவாதி கொலை வழக்கில் பிடிபட்ட ராம்குமார் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று அதிகாலையில் ராம்குமாரை போலீஸார் பிடிக்க முயற்சித்தபோது, தற்கொலைக்கு முயன்ற அவர் கழுத்தில் காயமடைந்து, பாளையங்கோட்டையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்கொலைக்கு முயன்றதாக ராம்குமார் மீது, செங்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர். அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x