Published : 19 Dec 2013 08:22 PM
Last Updated : 19 Dec 2013 08:22 PM
திண்டுக்கல்- விருதுநகர் இடையே புதன்கிழமை மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதிகாரிகள், இந்த சோதனை ஓட்டம் குறித்து வெளிப்படையாக தகவல் தெரிவிக்க மறுத்து ரகசியமாக நடத்தி முடித்தனர். இதையடுத்து இந்த வழித்தடத்தில் பயணிகள் மின்ரயில் சேவை விரைவில் நடைபெறும் எனத் தெரிகிறது.
நாடு முழுவதும் ரயில் நிலையங்களை மின் மயமாக்கும் திட்டத்தின் கீழ், திண்டுக்கல் ரயில் நிலையத்தை தென்மாவட்ட ரயில் நிலையங்களுடன் இணைக்கும் வகையில் திண்டுக்கல்- விருதுநகர் புதிய மின்ரயில் பாதை திட்டப் பணிகள் ரூ.286 கோடியில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
4 மாதங்களுக்கு முன் திண்டுக்கல்- விருதுநகர் இடையே மின் ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. புதன்கிழமை மீண்டும் விருதுநகர்- திண்டுக்கல் இடையே இரண்டாம் கட்டமாக மின்ரயில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட மின்ரயில் என்ஜின், மதுரை வழியாக விருதுநகர் புறப்பட்டுச் சென்றது. பின் அங்கிருந்து சரக்கு ரயில் பெட்டிகளை இணைத்துக் கொண்டு மதுரை வழியாக திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு வந்தது. இந்த வெள்ளோட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதாகவும், விரைவில் பயணிகள் ரயில்களை மின்ரயில் என்ஜினுடன் இணைத்து 3-வது கட்டமாக வெள்ளோட்டம் பார்க்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் மேலும் கூறியது:
ரயில் பாதைகளில் ரயில் என்ஜினுக்கு மின் இணைப்பு நிற்காமல் சரியாகக் கிடைக்கிறதா? சிக்கனல் பகுதியில் தண்டவாளங்களை மாற்றும்போது மின்சாரம் சரியாகக் கிடைக்கிறதா என இந்த வெள்ளோட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது சரக்கு ரயில் பெட்டிகளை இணைத்து சோதனை ஓட்டம் பார்க்கப்பட்டது.
மீண்டும் பயணிகள் ரயில் பெட்டிகளை இணைத்து சோதனை ஓட்டம் பார்க்கப்படும். அதன்பின் இறுதிக்கட்டமாக எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை இணைத்து சோதனை ஓட்டம் நடைபெறும். இந்தப் புதிய மின்ரயில் பாதை திட்டத்தால் மதுரை ரயில் நிலையத்திலேயே இனி மின்ரயில் என்ஜின்கள் பொருத்தப்படும். அதனால், திண்டுக்கல், திருச்சி ரயில் நிலையங்களில் மின்ரயில் என்ஜின்களை மாற்ற அவசியமில்லை. மின்ரயில் என்ஜின் மாற்ற 20 நிமிடம் வரை நேரம் ஆகும். தற்போது நேரம் மிச்சமாகி பயணம் நேரம் குறைய வாய்ப்புள்ளது என்றார்.
இதனால் இந்த வழித்தடம் வழியாக எக்ஸ்பிரஸ் மின்ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT