Last Updated : 19 Aug, 2016 08:25 AM

 

Published : 19 Aug 2016 08:25 AM
Last Updated : 19 Aug 2016 08:25 AM

நாடாளுமன்ற நடவடிக்கைகள் போல சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா?- வலுத்து வரும் கோரிக்கைகள்

தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சி களை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வரு கிறது.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக் கும் இடையே மோதல் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் அடிக்கடி வெளிநடப்புகள், வெளியேற்றம், கூச்சல், குழப்பம் அமளி ஏற்படுகிறது.

இதற்கு ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒருவர் மீது ஒருவர் மாறிமாறி குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலை மாற நாடாளுமன்றம் போல சட்டப்பேரவை நிகழ்ச்சிகளையும் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும், சமூக அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இதனை வலியுறுத்தி ‘லோக்சத்தா’ கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் டி.ஜெகதீஸ்வரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனு தாரராக இணைத்துக் கொள்ளக் கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்தும் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “நிதிப் பற்றாக்குறை இருப்பதால் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளி பரப்ப முடியாது” என்று தமிழக அரசு தெரிவித்தது. தற்போது இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் சட்டப்பேரவை யில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் சம்பவங்களால் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

ஒரே தீர்வு

சட்டப்பேரவையில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடு பட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் இதுபற்றி கேட்டபோது, “சட்டப்பேரவையில் தற்போது நடைபெற்று வரும் பிரச்சினைகளுக்கு நேரடி ஒளிபரப்பு செய்வது ஒன்றே தீர்வாக அமையும். அப்போது மட்டுமே யார் தவறு செய்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வோம் என வாக்குறுதி அளித்திருந்தோம். ஆனால், நிதிப் பற்றாக்குறை என்று சாக்குபோக்குகளைக் கூறி இதனை தமிழக அரசு தட்டிக் கழித்து வருகிறது. இந்தக் கோரிக்கையை திமுக தொடர்ந்து வலியுறுத்தும்” என்றார்.

ஒழுங்கீனங்கள் முடிவுக்கு வர

சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த டி.ஜெகதீஸ்வரன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவையில் புகழ்பாடுவது அல்லது வசைமாரி பொழிவது மட்டுமே நடக்கிறது. நாடாளுமன்றம் மற்றும் பிற மாநில சட்டப்பேரவை நிகழ்ச்சி கள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. அதுபோல தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சி களையும் நேரடி ஒளிபரப்பு செய்தால் மட்டுமே இதுபோன்ற ஒழுங்கீனங்கள் முடிவுக்கு வரும். எனவேதான், நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தோம். நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாது என தமிழக அரசு வாதிட்டு வருகிறது.

ஆந்திர மாநிலம் போல

உண்மையில் இதற்கு செலவே ஏற்படாது. ஏற்கெனவே, சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. முதல்வர், அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகளின் அறைகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படு கின்றன.

எனவே, செலவே இல்லாமல் ஆந்திர மாநிலத்தில் இருப்பது போன்று தூர்தர்ஷன் தொலைக் காட்சியிலோ அல்லது கேரள மாநிலத்தில் உள்ளதுபோல இணையதளத்திலோ நேரடி ஒளிபரப்பு செய்யலாம். இல்லை யெனில் கர்நாடகம் போல தனியார் தொலைக்காட்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மக்களுக்கு தெரிய வேண்டும்

காங்கிரஸ் கொறடா எஸ்.விஜயதரணியிடம் இதுபற்றி கேட்டபோது, “ஆளுங்கட்சியினர் புகழ்பாடுவதற்கு மட்டுமே பேரவைத் தலைவர் நேரம் ஒதுக்குகிறார். நாங்கள் தொகுதி பிரச்சினையை எழுப்பினால்கூட நேரம் முடிந்துவிட்டது எனக் கூறி அமர வைத்து விடுகிறார். தரக்குறைவான வார்த்தைகளும் பல நேரங்களில் காதில் விழுகின்றன.

எனவே, நாடாளுமன்றம் போல தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளையும் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். சட்டப்பேரவையில் என்ன நடக்கிறது என்பது ஒளிவுமறைவின்றி மக்களுக்கு தெரிய வேண்டும்'' என்றார்.

கடந்த 3-ம் தேதி ‘89 வயக்காட்டு பொம்மைகள்’ என அதிமுக உறுப்பினர் எஸ்.முத்தையா பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அன்றைய தினம் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

மதிப்பிடும் உரிமை

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் சட்டப்பேரவையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த இரு திராவிடக் கட்சிகளின் வழிகாட்டியான அண்ணா அவரது செயல்பாடுகள் மூலம் உணர்த்திவிட்டு சென்றிருக் கிறார்.

ஜனநாயகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்களும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மதிப்பிடும் உரிமை மக்களுக்கு உள்ளது. எனவே. சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் தமிழக அரசு அதனை ஏற்று நேரடி ஒளிபரப்பு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x