Last Updated : 14 Sep, 2016 03:52 PM

 

Published : 14 Sep 2016 03:52 PM
Last Updated : 14 Sep 2016 03:52 PM

மதுரை தமிழ் சங்கத்துக்கு வயது 115: நூற்றாண்டை கடந்து தமிழ்ப்பணி

தமிழால் மதுரையும், மதுரையால் தமிழும் பெருமை அடைகின்றன. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை மதுரைக்கு மட்டுமே உண்டு. முதல், இடை, கடை சங்கங்களை தாண்டி நான்காம் தமிழ்ச் சங்கமும் தோன்றியது இங்குதான்.

ராமநாதபுரம் மன்னர் பாண்டித் துரைத் தேவரால் தோற்றுவிக் கப்பட்ட இச்சங்கம் நூற்றாண்டை கடந்தும் செவ்வனே தமிழ் பணியாற்றி வருகிறது.

இதுகுறித்து சங்கத்தின் செயலர் வழக்கறிஞர் ச.மாரியப்பமுரளி கூறியதாவது: சேது நாட்டரசர் பாஸ்கர சேதுபதி 1893 ஜனவரி13-ல் எழுதிய ‘எனது வாழ்வின் குறிக்கோள்’ என்ற நாட்குறிப்பில் இடம்பெற்ற 33 பொருள்களில் நான்காம் தமிழ் சங்கமும் ஒன்று. இச்சங்கம் பாஸ்கர சேதுபதியின் பெரியப்பா பொன்னுச்சாமி மகன் பாண்டித்துரையால் தொடங்கப் பட்டது.

பாண்டித்துரையின் சொற் பொழிவு மக்களை கவர்ந்தது. தமிழ் சிறப்பு பற்றி பேச தமிழறிஞர்கள் பாண்டித்துரையிடம் கேட்டதால் கம்பராமாயணம், திருக்குறளை தேடி நூலகம், அறிஞர்கள் வீடுகளுக்கு சென்றார். எங்கும் கிடைக்காததால் மதுரையில் ‘தமிழுக்கு கதி’ (க-கம்பராமயணம், தி-திருக்குறள்) நூல்களே இல்லை என வருந்திய அவர் 1901-ம் ஆண்டு செப்.14-ல் நான்காம் தமிழ் சங்கத்தை நிறுவினார். சங்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் பாண்டித் துரை எனில், அரணாக இருந்தவர் பாஸ்கரசேதுபதி.

நாட்டுப் பற்றுள்ள பாண்டித்துரை தனது ஜமீனை விற்று கிடைத்த ரூ.1 லட்சத்தை வஉசியின் ‘சுதேசி ஸ்டீம் நாவிகேசன்’ நிறுவனத்தில் முதலீடு செய்தார். அதில் கிடைத்த வருவாயை தமிழ் சங்க வளர்ச்சிக்கு உதவினார். செந்தமிழ் கலாச்சாலை, பழந்தமிழ் நூல்களை பாதுகாக்க பாண்டியன் நூலகம், அச்சிட முடியாத நூல்களை பதிப்பித்து வெளியிட செந்தமிழ் இதழ் ஆகியவற்றை தொடங்கினார். பல நாட்டு தமிழ் வல்லுநர்களையும் சங்க உறுப்பினர்களாக்கினார். நாராயணன் ஐயங்கார், சுந்தரேசுவர ஐயர், அரங்கசாமி ஐயங்கார், சிவகாமியாண்டார், மு. ராகவ ஐயங்கார், பூச்சி சீனிவாச ஐயங்கார் ஆகியோர் இவரது அவைப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

செந்தமிழ் கல்லூரி: மதுரை சேதுபதி பள்ளி அருகே தற்போது தலைமை அஞ்சலகம் உள்ள இடத்தில்தான் நான்காம் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது. அங்கு கட்டிடம் கட்ட தாமதமா னதால் மதுரை வடக்கு வெளிவீதியில் இருந்த அவரது மாளிகையில்(செந்தமிழ் கல்லூரி) சங்கம் செயல்பட ஆரம்பித்தது. கடந்த 1901-ம் ஆண்டு முதல் 115 ஆண்டாக

பாண்டித்துரையின் இல்லத்தில் நான்காம் தமிழ்ச் சங்கம், கலாச்சாலை (செந்தமிழ்க் கல்லூரி), பாண்டியன் நூலகம் செயல்படுகின்றன. செந்தமிழ் கல்லூரியில் பிஏ. பிலிட், எம்ஏ., எம்பில், பிஎச்டி என தற்போது தமிழ் உயராய்வு மையமாக வளர்ந்துள்ளது.

பாண்டியன் நூலகத்தில் உள்ள 52 ஆயிரம் புத்தகங்கள் உலகில் எந்த தமிழ் சங்கத்திலும் இல்லை. இந்த பழந்தமிழ் நூல்கள் ஆய்வாளர்களுக்கு பயன்படுகின்றன. இந்த நூல்களை கணினிமயமாக மாற்ற முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ந.மு.வேங்கடசாமி நாட்டார், கார்மேகக்கோனார், தேவநேயப் பாவாணர், நாவலாசிரியர் தீபம் நா.பார்த்தசாரதி, சாம்பசிவன், சங்குப்புலவர், முன்னாள் அமைச் சர் கா.காளிமுத்து போன்றோர் இக்கல்லூரியில் படித்தவர்கள்.

ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை இங்கே தமிழ் சொற்பொழிவு நடைபெறுகிறது. பல தியாகங்களால் உருவான இச்சங்கம் தொடர்ந்து தமிழ்ப் பணிபுரியாற்றி வருகிறது என்றார்.

சேதுபதி மன்னர்களின் தலைமையில் இயங்கும் இச்சங் கத்தின் தலைவராக ராமநாதபுரம் மன்னர் நா.குமரன் சேதுபதியும், துணைத்தலைவராக டாக்டர் சேதுராமனும் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x