Last Updated : 17 Jun, 2017 09:33 AM

 

Published : 17 Jun 2017 09:33 AM
Last Updated : 17 Jun 2017 09:33 AM

சம்பாபதி அம்மனும் சதுக்க பூதங்களும்

பண்டைய பூம்புகார் நகரின் பெரும் பகுதி கடலுக்குள் இருக்கிறது. அவற்றின் ஒரு சில எச்சங்கள் மட்டும் கடலுக்கு வெளியில் இருந்து பூம்புகாரின் பெருமை சொல்லிக் கொண்டிருக்கின்றன. சம்பாபதி அம்மன் கோயிலும் சதுக்க பூதங்களும் இதில் முக்கியமானவை.

சம்பாபதியம்மன் கோயிலையும் தீயவர்களை பிடித்து உண்ணும் சதுக்க பூதங்களையும் பற்றி பத்தி பத்தியாய் விவரிக்கிறது சிலப்பதிகாரம். அத்தகைய சிறப்பு கொண்ட இவ்விரண்டு வரலாற்றுச் சின்னங்களும் தற்போது சிதிலமடைந்து போய் கேட்பாறின்றி கிடக்கிறது என்பது தான் வேதனைக்குரிய செய்தி.

சம்பாபதி அம்மன்

சம்பாபதி அம்மனை மாதவியின் குலதெய்வம் என்கிறது சிலப்பதிகாரம். துரத்தி வந்த உதயகுமாரனிடம் இருந்து மணிமேகலையை மீட்ட தெய்வம் என்கிறது மணிமேகலை காப்பியம். சம்பாபதி அம்மன் கோயில் குச்சரக்குடிகை எனப் பெயர் கொண்டிருந்தது என்றும் இக்கோயில் காவிரிப் பூம்பட்டினத்தில் இடுகாட்டுக்கு அருகில் இருந்தது என்றும் மணிமேகலை தகவல் தருகிறது.

வாணிபத்துக்காக மரக்கலத்தில் செல்வோரை மணிமேகலா தெய்வம் கடலில் நின்று காத்தது போல் நிலத்தில் சம்பாபதி அம்மன் நல்லோரைக் காக்கும் தெய்வமாய் நின்றதாக ஒரு செய்தி உண்டு. சீர்காழி - பூம்புகார் சாலையில் திருவெண்காட்டுக்கு 3 கி.மீ. தொலைவில் உள்ளது சாயாவனம். இங்குள்ள சாய்க்காடுடையார் திருக்கோயிலுக்கு வலதுபுறம் சம்பாபதி அம்மன் கோயில் உள்ளது. சோழர்களால் புதுப்பிக்கப்பட்ட இந்தக் கோயில் சிதிலமடைந்து போனதால் இப்போது செங்கலைக் காட்டிக் கொண்டு சிதிலமடைந்து நிற்கிறது. இதனால், சம்பாபதி அம்மனை கூரைகொட்டகையில் குந்த வைத்திருக்கிறார்கள்.

சதுக்க பூதங்கள்

சிதிலமடைந்து கிடக்கும் சம்பாபதி அம்மன் கோயிலை செங்கலால் ஆன இரண்டு பிரம்மாண்ட பூதங்கள் இன்னமும் காவல் காத்தபடி நிற்கின்றன. இவைதான், ’பொய் பேசினால் கொன்று விடும்’ என இளங்கோவடி களால் சிலப்பதிகாரத்தில் உருவகம் செய்யப்படும் சதுக்க பூதங்கள். தவறு செய்ய வேண்டும் என நினைத்தாலே இந்தப் பூதங்கள் சும்மாவிடாதாம். அப்படி நினைப்பவரை துரத்திப் பிடித்து நடு வீதியில் நிற்கவைத்து நைய புடைத்து ஊருக்கெல்லாம் தெரியும்படி ஓலமிட்ட படி அவர்களை கடித்து தின்றுவிடுவன வாம்.

யாரையெல்லாம் தண்டிக்கும்

பிறன்மனை நோக்குவோர், விலைமா தர், போலிச்சாமியார்கள், சூது கவ்வும் அமைச்சர்கள், பொய்சாட்சி புலிகள் - இவர் களை எல்லாம் சதுக்க பூதங்கள் சும்மா விடாது என்கிறார் இளங்கோவடிகள். பண்டைத் தமிழர்கள், ’சதுக்க பூதம் இப்படி எல்லாம் செய்யும்’ என்று சொல்லிச் சொல்லியே தங்கள் பிள்ளைகளை வளர்த் தார்கள்; அவர்களும் பண்புள்ளவர்களாய் வளர்ந்தார்கள்.

இப்படியெல்லாம் இளங்கோவடி களால் படியெடுக் கப்பட்ட சதுக்க பூதங் கள் இப்போது, இடுப்பில் ஒரு வெள்ளை வஸ்திரத்தை மட்டும் சுற்றிக் கொண்டு நிற்கின்றன. சம்பாபதி அம்மன், சதுக்க பூதங்களின் நிலை குறித்துப் பேசிய கோயிலின் முன்னாள் பூசாரி கணேசன், ’’இந்தக் கோயிலைப் பற்றி தொல்லியல் துறையோ அறநிலையத் துறையோ கவலைப்படல. மக்களும் பெருசா அலட்டிக்கல. இப்படியே போச்சுன்னா இன்னும் கொஞ்ச நாள்ல இந்த இடத்துல இவைகள் இருந்த தடம்கூட இல்லாம போயிரும்.’’ என்று நொந்து கொள்கிறார்.

மூத்தகுடியாம் பண்டைத் தமிழனின் வரலாற்றுத் தடயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர்கள் முன்முயற்சி எடுத்தால் மட்டுமே இந்த வரலாற்று எச்சங்களை பாதுகாக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x