Last Updated : 11 Feb, 2017 01:02 PM

 

Published : 11 Feb 2017 01:02 PM
Last Updated : 11 Feb 2017 01:02 PM

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிக காளைகள் பங்கேற்று சாதனை

2008-ம் ஆண்டு முதல் நீதிமன்றக் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடந்ததால் பிற்பகல் 2 மணிக்குள் காளைகள் அவிழ்ப்பது நிறுத்தப்பட்டது. இதனால் 2014-ம் ஆண்டில் 450 காளைகள் வரை மட்டுமே அவிழ்க்கப்பட்டன. இந்தாண்டு அவனியாபுரம், பாலமேட்டில் மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு நடந்தது. அலங்காநல்லூரில் மாலை 4.45 மணி வரை நடத்த அனுமதிக்கப்பட்டது. இதனால் 549 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

இவ்வளவு அதிக எண்ணிக்கையில் காளைகள் இதுவரை அவிழ்க்கப்படவில்லை என்று உரிமையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மேலும், காளைகளை அடக்கும் வீரர்கள் இதுவரை ஒரே நேரத்தில் மொத்தமாக அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஓரிரு மணி நேரத்தில் வீரர்கள் சோர்வடைந்துவிடுவர். தற்போது குழு, குழுவாக 2 மணி நேரத்திற்கு ஒருமுறை 200 பேர்வரை மட்டுமே அனுப்பப்பட்டனர். இவர்களுக்கு 2 மணி நேரம் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டதால் உற்சாகம் குறையாமலும், அதே நேரத்தில் குறைந்த கால அவகாசத்தில் அதிக காளைகளை பிடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரிலும் ஆர்வமாக பங்கேற்றனர்.

விதிமுறைகளை மீறிய வீரர்கள் உடனுக்குடன் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். ஆட்சியரே ஒலிபெருக்கியில், குறிப்பிட்ட சீருடை எண்ணை அறிவித்து வெளியேற்றும்படி உத்தரவிட்டபடியே இருந்தார்.

தாமதமாக வந்த பார்வையாளர்களுக்கு ஜல்லிக்கட்டை நேரில் காண இடம் கிடைக்கவில்லை. அவர்களுக்காக ஆங்காங்கே அகன்ற திரைகள் அமைக்கப்பட்டன.

மாணவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த கேலரியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாரம் தாங்காமல் கேலரி சரிந்தது.

மாடுகள் அடையும் தென்னந்தோப்பில் இளைஞர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கே ஓடிவரும் காளைகளையும், காளைகள் பிடிக்கப்படுவதையும் கண்டு ரசித்தனர். தான் வளர்த்த காளையை பிடித்தால் ரூ.5 ஆயிரம் பரிசு வழங்குவதாக ரேணுகாதேவி என்ற மாணவி சவால் விடுத்தார். ஆனால் அந்த காளை பிடிபடவில்லை. பின்னர் அந்த மாணவியே வாடிவாசலுக்கு வந்து காளையை அழைத்து சென்றார். மு.க.ஸ்டாலின் அந்த பெண்ணுக்கு தங்க மோதிரம் பரிசு வழங்கினார்.

மு.க.ஸ்டாலின் மேடைக்கு வந்ததும் பரிசுகளை அதிகம் வழங்குவது திமுகவா, அதிமுகவா என்பதில் போட்டி நிலவியது. அலங்காநல்லூர் ஒன்றிய அதிமுக செயலாளர் ரவிச்சந்திரன், ஜெயலலிதா பேரவை பிரமுகர் கே.ஜி.பாண்டியன், எம்எல்ஏ மாணிக்கம் என பலரது பெயரில் பரிசுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டன.

இதையடுத்து ஸ்டாலின் பெயரில் அடுத்தடுத்து மோதிரங்கள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. திமுக எம்எல்ஏ பி.மூர்த்தி பெயரில் தையல் இயந்திரங்கள் பரிசாக அறிவிக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x